பட்டப் படிப்பில் சேர அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு: கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தகவல்

பதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019 17:17

புதுடில்லி

வரும் 2020ஆம் கல்வியாண்டில் இருந்து அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு மாணவ மாணவியர்கள் அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தெரிவித்துள்ளது.

தொழிற்கல்வி மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பு வகுப்புகளில் சேர விரும்புகிற மாணவர்கள் மட்டுமே இதுவரை நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற விதிமுறை இந்தியாவில் அமலில் உள்ளது. இதற்காக ஜாயிண்ட் எண்ட்ரன்ஸ் எக்ஸாம், நீட். மற்றும் சிமேட் ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலை இப்பொழுது மாறி வருகிறது. டெல்லி பல்கலைக்கழகம் நடத்தும் 170 பட்டப்படிப்பு கல்வி திட்டங்களுக்கும் வேறு 12 பட்டப்படிப்பு திட்டங்களிலும் சேர விரும்பும் மாணவ மாணவியர் தேசிய தேர்வு ஏஜென்சி நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

டெல்லி பல்கலைக்கழக நடத்தவுள்ள இந்த நுழைவுத் தேர்வு மற்ற மாநிலங்களிலும் பிறர் பல்கலைக்கழகங்களிலும் நடத்தப்படவுள்ள நுழைவுத் தேர்வுகளுக்கு முன்னோடியாக அமையும் என வரைவு கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்படிப்புகளுக்கு தேசிய தேர்வு ஏஜென்சி நடத்தும் நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட வேண்டும் என வரைவு கல்விக்கொள்கை தெளிவுபடுத்துகிறது.

தேசிய தேர்வு ஏஜென்சி நடத்தும் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள்தான் மாணவர்கள் பட்டமேற்படிப்பு வகுப்புகளில் சேர அடிப்படையாக அமையும். அவர்களது பன்னிரண்டாம் வகுப்பு (+2) மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என வரைவு கொள்கை கல்விக் கொள்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நடைமுறை பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற மாணவ மாணவியர் எடுத்துக்கொள்ளும் சிரமத்தை குறைக்கவும் கல்வி நிறுவனங்களின் பதற்றத்தை குறைக்கவும் உதவியாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.