அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2019 12:57

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பா மீது தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளில் பட்டியலை வெளியிட்டால்தான் அதில் சேராமல் மாணவர்கள் தற்காத்துக் கொள்ள முடியும்.

ஆனால், தரமற்ற கல்லூரிகளிடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு தரமற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட மறுப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மற்றும் பதிவாளர் குமார் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் மறுப்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது தனியார் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கூறிய புகார்கள் ஆதாரமற்றவை என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகளின் பெயர்களை வெளியிட்டால் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் எனவும் குமார் கூறினார்.

மேலும், தனியார் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார்களுக்கு உரிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டால் உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குமார் உறுதி அளித்தார். 

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது குமார் இக்கருத்துகளைத் தெரிவித்தார்.