பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை!’ – 90

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2019

 எம்.ஜி.ஆர்., தேர்­த­லில் வென்று முதல்­வர் ஆகி­விட்­டால், படங்­க­ளின் கதி என்ன என்­றும் ஸ்ரீதர் குழு­வி­னர் சிந்­தித்­துக் கொண்­டி­ருந்­தார்­கள் மிகுந்த கவ­லை­யோடு.

 தேர்­த­லில் மக்­க­ளின் அமோக ஆத­ர­வைப் பெற்று அதி­முக ஆட்­சி­யைப் பிடித்­தது. முதல்­வ­ராக எம்.ஜி.ஆர்., பதவி பொறுப்பு ஏற்க நாளும் குறிக்­கப்­பட்­டது. அதற்கு சுமார் பத்து நாட்­க­ளுக்கு முன்  எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரை அழைத்­தார். நின்று போயி­ருக்­கும் படங்­க­ளுக்கு ஒரு வழி செய்­யத்­தான் கூப்­பி­டு­கி­றார் என்று ஊகித்­த­வாறே சென்­றார்.

 ‘மீனவ நண்­பன்’ முடிக்க இன்­னும் எத்­தனை நாள் ஷூட்­டிங் பாக்கி?’ என்று கேட்­டார்

எம்.ஜி.ஆர்.  ` இரண்டே நாட்­கள் ஒதுக்­கிக்­கொ­டுத்­தால் போதும்’ என்­றார் ஸ்ரீதர். உடனே தேதி குறித்­துத் தந்­தார்.

 ஸ்ரீதர் திட்­ட­மிட்­டி­ருந்த கிளை­மாக்ஸ்­படி எம்.ஜி.ஆர்., நம்­பி­யாரை புயல் வீசும் கொந்­த­ளிக்­கும் கட­லில் பட­கில் துரத்­திச் செல்ல வேண்­டும். இதற்கு ஸ்டூடி­யோ­வி­ணுள் ` செட்’ போட்­டி­ருந்­தார்­கள். படப்­பி­டிப்பு தினத்­தன்று இதற்கு வேண்­டிய இடி, மின்­னல், புயல், மழை இவற்றை உரு­வாக்­கு­கிற கரு­வி­க­ளைத் தயா­ராக வைத்­தி­ருந்­தார்­கள். எம்.ஜி.ஆர்., வந்­த­தும் ` என்ன காட்சி? என்று விளக்­கம் கேட்­டார். ஸ்ரீதர் சொல்­லி ­விட்டு ‘ஆனா­லும் அண்ணே, மழை மட்­டும் இப்ப வேண்­டாம்னு நினைக்­கி­றேன்’ என்­றார் ஸ்ரீதர்.

`ஏன் ஏன் ?’ என்­றார் எம்.ஜி.ஆர்.

 `நீங்க இன்­னும் ஒரு வாரத்­தில் முதல்­வர் ஆகப்­போ­றீங்க. இந்த சம­யத்­தில் ஏக­மா­கத் தண்­ணீ­ரில் நனைந்து  ஜல­தோ­ஷம், ஜூரம் என்று ஏதா­வது வந்­து­விட்­டால்? அத­னால் `சேஸ்,’ `பைட்’ இரண்­டை­யும் வச்­சுக்­க­லாம். மழை வேண்­டாம். ரொம்ப அவ­சி­யம்ன்னா  புயல், இடி, மின்­ன­லு­டன் நிறுத்­திக்­க­லாம்.

எம்.ஜி.ஆர்., சம்­ம­திக்­க­வில்லை. ` எனக்கு ஒண்­ணும் ஆகாது. பயப்­ப­டா­தீங்க. மழை­யும் இருக்­கட்­டும். அப்­பத்­தான் இயல்­பா­க­வும் இருக்­கும். எபெக்­டும் அதி­க­ரிக்­கும்’ என்று எம்.ஜி.ஆர்., சொல்­லி­விட்­டார். அதன்­ப­டியே கிளை­மாக்ஸ் எடுக்­கப்­பட்­டது.

 படம் முடிந்து ரிலீஸ் ஆனது. ‘ஓஹோ’ என்று ஓடி­யது. எம்.ஜி.ஆரின் தேர்­தல் வெற்றி, முதல்­வர் ஆனது எல்­லாம் படத்­தின் வெற்­றிக்­கும் துணை­செய்­தன.

 ஆரம்ப நிலை­யி­லேயே நின்று போன `அண்ணா நீ என் தெய்­வம்’ படத்­தை­யும் எம்.ஜி.ஆர்., முடித்­துக் கொடுக்க தயா­ராக இருந்­தார். ஆனால் தயா­ரிப்­பா­ளர்­க­ளால் அத்­தனை அவ­ச­ர­மாக பணம் ஏற்­பாடு செய்ய முடி­ய­வில்லை. எடுக்­கப்­பட்ட வரை அந்­தக் காட்­சி­க­ளைப்  பயன்­ப­டுத்­திப் பின்­னர் பாக்­ய­ராஜ் ` அவ­சர போலீஸ் 100’ தயா­ரித்­தார்.

 `மீனவ நண்­பன்’ படப்­பி­டிப்­பின்­போது கடைசி நாளன்று, ஷூட்­டிங் முடிந்து எம்.ஜி.ஆர் விடை­பெற்ற போது ஸ்ரீதர் மகிழ்ச்சி பொங்க, முதல்­வ­ருக்கு வாழ்த்­துச் சொன்­னார். அவ­ரது ஒத்­து­ழைப்­புக்கு நன்றி தெரி­வித்­தார்.

 அவர் ` நீங்க பதவி ஏற்பு விழா­வுக்கு நிச்­ச­யம் வர­ணும்’ என்­றார்.

` கண்­டிப்­பாக வரு­வேன். சரித்­தி­ரம் படைக்­கும் நிகழ்ச்சி அல்­லவா அது ‘ என்­றார். ` இப்­போது போல் உங்­களை அரு­கி­லி­ருந்து பார்க்க முடி­யா­விட்­டா­லும் நான் ஏதா­வது ஒரு மூலை­யில் இருப்­பேன்’ என்­றார் ஸ்ரீதர்.

 `நீங்க வரு­வ­தாக சொல்­லிட்­டீங்க இல்லே. அப்­போது நான் பாத்­துக்

கி­றேன்’ என்­றார் எம்.ஜி.ஆர்.  பதவி ஏற்பு விழா­வுக்கு ஸ்ரீதர் போன­போது அவ­ருக்கு ஆச்­ச­ரி­யம் காத்­தி­ருந்­தது. ஸ்ரீதரை வர­வேற்று, விவி­ஐ­பிக்­கள் வரி­சை­யில் உட்­கார வைக்க எல்லா ஏற்­பா­டு­க­ளும் செய்­தி­ருந்­தார் எம்.ஜி.ஆர்.

 எம்.ஜி.ஆர்., வந்­தார் மேடை ஏறு­வ­தற்கு முன் அவர் பார்வை வந்­தி­ருந்த வி.ஐ.பிக்­களை ஒரு முறை நோட்­டம் விட்­டது.  ஸ்ரீதர் முகத்­தில் ஒரு கணம் நிலைத்­த­போது `வந்­து­விட்­டேன் பாத்­தீங்­களா? என்­பது போல் ஸ்ரீதர் எம்.ஜி.ஆரை பார்க்க, அதன்­ப­டியே ‘உங்­களை வர­வேற்க ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­விட்­டேன் பார்த்­தீர்­களா?’ என்­பது போல் எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரை பார்த்து முறு­வ­லித்­தார். அந்த புன்­ன­கை­யின் பின்­னால், எத்­த­னையோ சிக்­கல்­க­ளுக்­கி­டை­யி­லும் நண்­ப­னுக்கு கொடுத்த வாக்கை மற­வா­மல் நிறை­வேற்­றிய திருப்தி  நில­வி­யது.

 ஸ்ரீத­ரின் திரைப்­பட வாழ்க்­கை­யில் ஏகப்­பட்ட ஏற்ற– இறக்­கங்­களை பார்த்­த­வர். ஆனால்  தமிழ் சினி­மா­வின் டிரென்ட் செட்­டர் இயக்­கு­நர் ஸ்ரீதர் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

 ஆனால் ஸ்ரீத­ருக்கு தன் தொழில் மீது மட்­டு­மல்ல, தான் சார்ந்த சினி­மாத் துறை மீதும் அதிக அக்­கறை இருந்­தது. அவர் சித்­ரா­லயா பத்­தி­ரி­கை­யில் எழு­திய தலை­யங்­கங்­கள் அதற்கு சாட்­சி­யாக விளங்­கு­கின்­றன.

1970களில் ஸ்ரீதர் சொன்ன சில விஷ­யங்­கள்­தான் இன்­றும் திரைப்­ப­டத்­து­றை­யில் அப்­ப­டியே நிலைத்து நிற்­கின்­றன.  உதா­ர­ண­மாக 5.6.1970ம் வரு­டம் அவர் எழு­திய ஒரு தலை­யங்­கத்­தைப் பார்ப்­போம்.

 வாச­கர்­க­ளுக்கு வணக்­கம்,

 நான் இந்த வாரம், சினி­மாத் துறைக்கு ஏற்­பட்­டி­ருக்­கும் அபாய நிலை­யைப் பற்றி மேலும் சில விஷ­யங்­களை எழுத வேண்­டு­மென்று நினைத்­தி­ருந்­தேன். ஆனால் அதற்கு முன் தமிழ் திரை உலக வழி­காட்­டி­யாக இருந்­த­வ­ரும் இன்­றைய திரை உல­கத்­தி­ன­ரால் மறக்­கப்­பட்­ட­வ­ரு­மான நட­ராஜ முத­லி­யா­ரைப் பற்றி எழுத வேண்­டிய அவ­சி­யம் எனக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை உணர்ந்­தேன். எந்த ஒரு துறை­யி­ன­ரும் அந்­தத் துறை­யின் முன்­னோ­டி­களை மறப்­பது நாக­ரீ­க­மல்ல. நட­ராஜ முத­லி­யா­ருக்கு இன்று 88 வயது. அவர் அன்று வாழ்ந்த நிலையை, இன்று வாழும் நிலை­யு­டன் ஒப்­பிட்­டுப் பார்க்­கும்­போது மேன்­மை­யான மனம் படைத்­த­வர்­கள் சிறிது நெகிழ்ந்­து­தான் போவார்­கள்.

 திரைப்­ப­டத் தயா­ரிப்­புக்­கென்றே சென்­னை­யி­லும், பெங்­க­ளூ­ரி­லும் பங்­க­ளாக்­களை வாட­கைக்கு எடுத்த அந்த செல்­வர், இன்று ஒரு சிறிய வீட்­டில் வச­தி­யில்­லாத வாழ்க்கை நடத்­து­கி­றார்.

தாதா சாகேப் பால்கே நூறு படங்­கள் எடுத்­தார். நட­ராஜ முத­லி­யார் ஆறு படங்­களை எடுத்­தார். நூறு படங்­கள் எடுத்­த­வ­ரும் வறு­மை­யில் வாடித்­தான் மறைந்­தார். ஆறு படம் எடுத்­த­வ­ரும் வசதி காணா­மல்­தான் வாழ்­கி­றார்.

 இது ஏன்?

 திரைப்­ப­டத்­து­றை­யி­ன­ரின் சாபக்­கேடா?

 இன்­றைய தலை­மு­றை­யி­னர் இதைப் பற்றி உணர்ந்­தாக வேண்­டும். இத்­தொ­ழி­லின் வளர்ச்சி பற்றி உடனே சிந்­தித்­தாக வேண்­டும்.

 இந்­தத் துறை­யில் சில சாத­னை­க­ளைச் செய்த மேதை­களை பாராட்­டி­னால்­தான் நாம் வளர்ச்சி பெற முடி­யும். நமக்கு முன்னே வழி­காட்­டி­க­ளாக செல்­ப­வர்­களை நாம் மறந்­து­விட்­டால், நமது நன்­றியை, அவர்­க­ளுக்கு தெரி­விக்க நாம் தயங்­கி­னால் நம்மை மற்­ற­வர்­கள் ‘சுய­ந­லக்­கா­ரர்­கள்’ என்று கேலி செய்­வார்­கள்.

 `பால்கே ‘ இந்­தி­யா­வின் முதல் திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ளர் என்று பெருமை பெற்­ற­வர். அவரை இன்று நாம் பாராட்­டு­கி­றோம். போற்­று­கி­றோம். அவர் உயி­ரோடு இருந்­த­போது, அவர் இறுதி காலத்தை வறு­மை­யில் கழித்­த­போது....!

(தொட­ரும்)