துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 32

பதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019

சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ்

இந்­திய சுதந்­திர போராட்­டத்­தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் பங்­கேற்­றுள்­ள­னர். இந்­தி­யா­வின் அனைத்து மாநி­லங்­க­ளைச் சேர்ந்த பல நூற்­றுக்­க­ணக்­கான முன்­ன­ணி­யி­னர், சுதந்­தி­ரப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து நடத்­திச் சென்று, பிரிட்­டி­ஷா­ரின் அடக்­கு­மு­றைக்கு ஆளாகி சிறை சென்­றுள்­ள­னர்.

தமிழ்­நாட்­டைச் சேர்ந்த காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளும்,  நிர்­வா­கி­க­ளும் பல்­வேறு முக்­கிய பிர­மு­கர்­க­ளும், இந்­திய தேச விடு­த­லைக்­காக தங்­கள் உடல், பொருள், ஆவி அனைத்­தை­யும் தத்­தம் செய்து போரா­டி­யுள்­ள­னர். இந்த வரி­சை­யில் நாம் பல தியா­கி­க­ளின் வர­லாற்றை பார்த்து வந்­தோம்.

இந்த வாரம், தியாகி எஸ்.எஸ். விஸ்­வ­நா­த­தாஸ் அவர்­க­ளைப் பற்­றிய வர­லாற்­றுக் குறிப்­பு­க­ளைக் காண்­போம்.

இன்­றைய விரு­து­ந­கர் மாவட்­டம் சிவ­காசி நக­ரில் 1886ம் ஆண்டு சுப்­ர­ம­ணி­யம் – ஞானாம்­பாள் தம்­ப­தி­ய­ரின் மூத்த மக­னாக பிறந்­த­வர் விஸ்­வ­நா­த­தாஸ். பள்­ளி­யில் படித்­துக் கொண்­டி­ருக்­கும் போதே இவ­ருக்கு இசை­யின் மீது நாட்­டம் இருந்­தது. நாட­கத் துறை­யி­லும் பெரி­தும் ஆர்­வம் கொண்­டி­ருந்­தார்.

பள்­ளிப் படிப்பை முடித்த விஸ்­வ­நா­த­தாஸ், பக்­திப் பாடல்­க­ளைப் பாடி, புராண நாட­கங்­க­ளில் நடித்து வந்­தார். அந்த கால­கட்­டத்­தில் நாடெங்­கும் சுதந்­தி­ரப் போராட்­டம் தீவி­ரம் அடைந்­தி­ருந்­தது. அந்­தப் போராட்­டங்­க­ளில் பங்­கேற்­கும் ஆர்­வம் அவ­ருக்கு வந்­தது.

20ம் நுாற்­றாண்­டின் தொடக்­கத்­தில், நாடெங்­கும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்ட காந்­திஜி, தூத்­துக்­கு­டிக்கு வருகை தந்­துள்­ளார். செய்தி அறிந்த விஸ்­வ­நா­த­தாஸ், அங்கு சென்று காந்­தி­ஜி­யைச் சந்­தித்து அவ­ரது உரை கேட்­ட­தும், அவ­ருக்­குள் கனன்று கொண்­டி­ருந்த சுதந்­திர உணர்வு பற்றி எரி­யத் தொடங்­கி­யது.

இளம் வயது முதலே பாடல் இயற்­றும் ஆற்­றல் பெற்ற விஸ்­வ­நா­த­தாஸ், ஏரா­ள­மான தேச­பக்­திப் பாடல்­க­ளை­யும், தெய்வ பக்­திப் பாடல்­க­ளை­யும், தானே இயற்றி நாட­கங்­க­ளில், பொது மேடை­க­ளில் பாடி வந்­தார். காந்­தி­ய­டி­க­ளைச் சந்­தித்­தது முதல், கதர் ஆடை அணி­யத் தொடங்­கிய அவர், நாட­கங்­க­ளுக்­குத் தேவை­யான உடை­க­ளை­யும் கதர் துணி­யி­லேயே தைத்து அணிந்து கொண்­டார்.

ஒரு கட்­டத்­தில் காங்­கி­ரஸ் கட்­சி­யில் தம்மை இணைத்­துக் கொண்ட விஸ்­வ­நா­த­தாஸ், தென்­மா­வட்­டங்­க­ளில் நெல்லை, தூத்­துக்­குடி, மதுரை என பல்­வேறு பகு­தி­க­ளில் நடை­பெ­றும், காங்­கி­ரஸ் பொதுக் கூட்­டங்­க­ளில் பங்­கேற்று சுதந்­திர வீர உரை நிகழ்த்­து­வ­து­டன், ‘கதர் கப்­பல் தோணுதே’ கரும்­புத் தோட்­டத்­தில் போலீஸ் புலிக்­கூட்­டம், நம்­மீது போட்டு வருது கண்­ணோட்­டம்’’ ‘வெள்ளை கொக்கு பறக்­கு­தடி பாப்பா’ – போன்ற தேசப்­பற்று பாடல்­க­ளை­யும், சுதந்­திர எழுச்­சிப் பாடல்­க­ளை­யும் பாடி மக்­க­ளி­டையே பிர­ப­ல­மா­னார்.

ஜாலி­யன் வாலா­பாக் படு­கொ­லையை கண்­டித்து விஸ்­வ­நா­த­தாஸ் எழு­திப் பாடிய பஞ்­சாப் படு­கொலை, பாரில் கொடி­யது என்ற பாடல், அப்­போது தமிழ்­நாடு முழு­தும் பிர­ப­ல­மா­னது.

புராண நாட­கங்­க­ளில் கூட தேச விடு­த­லைக் கருத்­துக்­களை விஸ்­வ­நா­த­தாஸ் புகுத்தி, மக்­கள் மன­தில் தெய்வ பக்­தி­யை­யும், தெய்­வப் பற்­றை­யும் ஒரு சேர இடம் பெற செய்­துள்­ளார். இவ­ரு­டைய நாட­கங்­க­ளுக்கு அவ்­வப்­போது, வெள்ளை ஏகா­தி­பத்­திய அரசு தடை­வி­தித்­தது. ஒரு சில நேரங்­க­ளில் தடையை மீறி நாட­கம் நடத்தி சிறை தண்­ட­னை­யும் பெற்­றுள்­ளார்.

அண்­ணல் காந்தி அடி­கள் அறி­வித்த ஒத்­து­ழை­யாமை இயக்­கத்­தில் கலந்து கொண்­டும் இவர் சிறை சென்­றுள்­ளார்.

சிவ­காசி பகு­தி­யில் இருந்து மதுரை மாவட்­டம் திரு­மங்­க­லம் நக­ருக்கு வருகை தந்த விஸ்­வ­நா­த­தாஸ், அந்­தப் பகு­தி­யில் வட்­டார காங்­கி­ரஸ் கமிட்­டி­யி­லும், மதுரை ஜில்லா போர்டு காங்­கி­ரஸ் கமிட்­டி­யி­லும் உறுப்­பி­ன­ராக இருந்து, கட்­சி­யின் சார்­பில் நடை­பெற்ற போராட்­டங்­க­ளில் பங்­கேற்று, பிரிட்­டிஷ் போலீ­சா­ரின் அடக்கு முறைக்கு, தடி­அ­டிக்கு ஆளாகி காயம் பட்­டுள்­ளார். பல்­வேறு மாநா­டு­கள், பொதுக் கூட்­டங்­க­ளில் பங்­கேற்று தேச­பக்­திப் பாடல்­களை பாடி மக்­க­ளுக்கு சுதந்­திர விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார்.

சொல், செயல், எண்­ணம், எழுத்து என அனைத்­தி­லும் தேச பக்­தியை பிர­தி­ப­லித்த விஸ்­வ­நா­த­தாஸ், 1940ம் ஆண்டு டிசம்­பர் 31ம் தேதி, தனது 54வது வய­தில் புராண நாட­கம் ஒன்­றில் முரு­கன் வேடம் தாங்கி நடித்­துக் கொண்­டி­ருந்த போதே மேடை­யி­லேயே மயங்கி விழுந்து உயி­ரி­ழந்­தார்.

தியாகி விஸ்­வ­நா­த­தாஸ் அவர்­க­ளுக்கு பெருமை சேர்க்­கும் வண்­ணம், அவர் வாழ்ந்த, மதுரை மாவட்­டம், திரு­மங்­க­லத்­தில் உள்ள இல்­லத்தை, தமிழ்­நாடு அரசு ‘தியாகி விஸ்­வ­நா­த­தாஸ் நினைவு இல்­ல­மாக அமைத்து, அங்கு நுால­கம் ஒன்­றை­யும் நிறுவி பரா­ம­ரித்து வரு­கி­றது. இந்த நினைவு இல்ல வளா­கத்­தில் தியாக விஸ்­வ­நா­த­தாஸ் அவர்­க­ளின் மார்­ப­ளவு சிலை­யும், கண்­காட்­சிக் கூடத்­தை­யும் அரசு அமைத்து சிறப்பு சேர்த்­துள்­ளது. இதே வளா­கத்­தின் அருகே இவ­ரது பெய­ரில் திரு­மண மண்­ட­பம் ஒன்­றை­யும் தமிழ்­நாடு அரசு அமைத்து பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டுக்கு கொடுத்­துள்­ளது வர­வேற்­கத்­தக்­க­தா­கும்.