இடுப்பு வேட்டி அவிழ...!

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2019

கடந்த, 1949ல், மன்னார்குடி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்தேன். தமிழாசிரியர், ராமானுஜ ஐயர், மிக அருமையாக பாடம் நடத்துவார்.

ஒரு நாள், கரும்பலகையில், சாக்பீசால் எழுதும் போது, வேட்டி அவிழத் துவங்கியது.

சாக்பீசை கீழே போட்டு, வேட்டியை தாங்கிப் பிடித்தார்.

மாணவர்கள், சிரிப்பை அடக்க முயன்றனர். கடைக் கண்ணால் பார்த்த தமிழாசிரியர், 'மாணவ, மாணவியரே... நேற்று தானே, உங்களுக்கு, 'உடுக்கை இழந்தவன் கை போல...' அதாவது உடையை இழந்தவனுடைய கை எப்படி வேகமாக செயல்படும் என்ற குறள் பாடம் எடுத்தேன்.

வள்ளுவரின் சிறந்த உதாரணத்தை, இன்று கண் கூடாக உங்களால் பார்க்க முடிந்தது...

'கையிலிருந்த சாக்பீசை எரிந்து, எவ்வளவு வேகமாக, வேட்டியை சரி செய்தேன் பார்த்தீர்களா...' என, சமயோசிதமாக கூற, அனைவரும், கை கொட்டி, ஆரவாரம் செய்தோம்.

வேட்டியை அவிழ்த்து கட்டும் போதெல்லாம், தமிழாசிரியர் ராமானுஜர் தான், நினைவுக்கு வருகிறார்!

–- அ.சம்பத், கள்ளக்குறிச்சி.