முத்து முத்தாய் கையெழுத்து...

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2019

நான், 1977ல், சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திலுள்ள, பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு, படித்த போது, நடந்த நிகழ்வு!

என் வகுப்பு ஆசிரியை, சவுந்திர நாயகி. ஒவ்வொரு மாதமும், பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடத்த மாட்டார்கள். தினமும், ஒரு மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவியின் குறைகளை சொல்லுவார்.

என் முறை வந்ததும், அப்பாவை அழைத்துச் சென்றேன்.

அவரிடம், 10 நிமிடங்கள் பேசிய ஆசிரியை, என்னை அழைத்து, 'நான் சொல்வது போல் நீ எழுதி வர வேண்டும்... இதனால், பாடமும் நன்றாக மனதில் பதியும், கையெழுத்தும் அழகாக மாறும்...' என்றார்.

அவரது அறிவுரைப்படி, தினமும் தமிழ், ஆங்கில மனப்பாட பகுதிகளை, 100 முறை எழுதினேன்; அப்போது, மின்சாரம் கிடையாது; ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் தான் எழுதுவேன்.

இப்படி எழுதியதில், மனப்பாட பாட்டு, நன்றாக பதிந்தது. கையெழுத்து அழகாக மாறியது மட்டுமில்லாமல், தமிழில் பிழையின்றி எழுத முடிந்தது.

இரவு, 11:00 மணி வரை விழித்திருந்து, ஊக்கப்படுத்தி, 'இன்னும், ௧௦ முறை தான்... எழுதுமா... கையெழுத்து இப்போது எவ்வளவு நன்றாக இருக்கு தெரியுமா...' என்று தட்டிக் கொடுப்பார் அம்மா.

'வகுப்பாசிரியை உன் கையெழுத்து அனைவராலும் பாராட்டப்படும்; உன்னிடம் கொடுத்து, எழுதி தர சொல்வர்...' என்று, அடிக்கடி கூறுவார்.

தற்போது, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பணிபுரிந்து வருகிறேன். சேர்க்கை பதிவேடு, மாற்று சான்றிதழ் அனைத்தும், என்னைதான் எழுத சொல்வர்.

'உங்கள் கையெழுத்து முத்து முத்தாக இருப்பதாலே, உங்களுக்கு முத்துலட்சுமி என்று பெயர் வைத்துள்ளனர்...' என்று பாராட்டுவர். நல்ல பெற்றோர், நல்ல ஆசிரியர் வழிகாட்டியாய் அமைந்தால், வாழ்க்கையில் உயரலாம் என்பதற்கு நானே முன் உதாரணம்!

–- எம்.முத்து லட்சுமி, சிவகங்கை.