சிறப்பாக பாடம் நடத்துவார்!

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2019


என் வயது, 48; நான், 10ம் வகுப்பு படித்த போது நடந்தது இது!

என் தமிழ் ஆசிரியர், இலக்கண பாடம் நடத்தும் போது, கற்பித்தல் உபகரணங்கள் இல்லாமல் பாடம் நடத்தவே மாட்டார்.

அன்று கற்பித்தல் உபகரணங்களை தயாரித்து, வீட்டில் மறந்து வைத்துவிட்டு, வந்து விட்டார்.  அன்று மாவட்ட கல்வி அலுவலர், பள்ளியைப் பார்வையிட வந்து விட்டார்.

'எந்த ஆசிரியர் சிறப்பாக பாடம் நடத்துவார்...' என்று, தலைமை ஆசிரியரிடம் கேட்க, அவர், கல்வி அலுவலரை, தமிழாசிரியர் பாடம் நடத்தும், எங்கள் வகுப்புக்கு அழைத்து வந்து விட்டார்.

'கற்பித்தல் உபகரணங்கள் இல்லையே... இவர் எப்படி பாடம் நடத்தப் போகிறார்' என, ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தோம்.

உடனே, அவர் சளைக்காமல், பகுபத உறுப்பிலக்கணம் என்று, கரும்பலகையில், தலைப்பை எழுதி, தன் இடது கை விரல்களையே, கற்பித்தல் உபகரணமாக்கி, பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார். சுண்டு விரலை, பகுதி எனவும்; நடு விரலை இடைநிலை எனவும்; சுண்டு விரலுக்கும், நடு விரலுக்கும் இடைப்பட்ட மோதிர விரலை, சந்தி எனவும்; நடு விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடைப்பட்டதை சாரி என்றார்.

கட்டை விரலுக்கும், அருகில் ஒரு ஆறாவது விரல் முளைத்தால், அது விகாரமாக இருக்கும் என்பதால், அதுவே விகாரம் எனவும் நன்கு புரியும் படி, பல உதாரணங்களோடு விளக்கியதைப் பார்த்த கல்வி அலுவலர், தமிழாசிரியரை, மிகவும் பாராட்டினார்.

இன்று, என் பள்ளி மாணவர்களுக்கு, இந்த பகுதியை, பாடம் நடத்தும் போது, இதே முறையைத்தான் கையாள்கிறேன்.

–- உமா புருஷோத்தமன், திருவாரூர்.