அபிதா குட்டியும், பாட்டியும்! அபிதா ரொம்ப புத்திசாலி!

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2019

கோடை விடுமுறை என்றால், பாட்டி வீட்டுக்கு பறந்திடுவாள். அங்கே, பாட்டி மடில தலை வைத்து படுத்து, கதை கேட்பதென்றால், அபி கன்னுக்குட்டிக்கு அவ்வளவு பிரியம்.

இதோ பாட்டி சொல்லி, அபி கேட்ட கதைகள்...

சாப்பிடக் கூடாது நிரஞ்சனா!

அது ஒரு மிகப் பெரிய பல்பொருள் அங்காடி; வயதான பாட்டி ஒருவர், தன், ஏழு வயது பேத்தியுடன், அங்கே வந்திருந்தார்.

அந்த பாட்டி, ரொம்ப கண்டிப்பானவர் என்பது, அவர் முகத்திலேயே எழுதி ஒட்டியிருந்தது.

அந்த பாட்டியும், பேத்தியும் சாக்லெட்டுகள் இருக்கும் இடத்தை கடந்த போது, 'நிரஞ்சனா... கண்டதையும் சாப்பிட்டா, உடம்பு கெட்டுப் போயிடும்...' என்ற அதட்டல் குரல், மேலாளர் வரை கேட்டது.

அடுத்ததாக, ஐஸ்கிரீம் இருக்கும் இடத்துக்கு செல்ல, 'நிரஞ்சனா... பாக்கறதை எல்லாம் சாப்பிடக் கூடாது...' என்று, கண்டிப்பது கேட்டது.

இப்படியே, கேக் பகுதி, அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் என, எல்லா இடத்திலும், அதட்டல் சத்தம்.

'சே... இந்த குழந்தை பாவம்' என்று நினைத்த மேலாளர், அந்த பாட்டியிடம், 'நீங்கள் அனுமதி கொடுத்தால், இந்த ஐஸ்கிரீமை, உங்கள் பேத்தி நிரஞ்சனாவுக்கு தர ஆசைப்படுகிறேன்...' என்றார்.

உடனே, அந்த பாட்டி கூறிய பதிலைக் கேட்டு, 'இப்படி ஒரு பாட்டியா' என்று அதிர்ந்தார்; பாட்டி அப்படி என்ன சொல்லுச்சுன்னு சொல்லுங்க பார்ப்போம்!

நண்பேன்டா!

அது ஒரு கிராமம்!

அந்த ஊர் பணக்காரரிடம் ஒரு, 'ஹெலிகாப்டர்' இருந்தது.

இரண்டு நண்பர்கள் இருந்தனர்; பயங்கர வாலுகள்; அவர்கள் இருக்கும் இடத்தில், கூச்சல், கலாட்டா, களேபரம் என, அல்லோகலப்படும். இவர்களுக்கு, ஹெலிகாப்டரில் பறக்க ஆசை. பணக்காரரிடம் சென்று, தங்கள் ஆசையைக் கூறினர்.

அதற்கு, அவர், 'நான் யாரையும் பணம் வாங்காமல், ஹெலிகாப்டரில் ஏற்றி செல்வதில்லை; இருந்தாலும், உங்களுக்கு ஒரு சலுகை தருகிறேன்...

'ஹெலிகாப்டரை கன்னாபின்னாவென்று வேகமாக ஓட்டியே நான் பழகி விட்டேன். தவிர, நான் ஹெலிகாப்டர் ஓட்டும் போது, பக்கத்தில் யாராவது பயத்தில் கத்தினால், நான் பதற்றமாகி விடுவேன். அதனால், பயணம் செய்யும் போது, நீங்கள் ஒரு துளி சத்தம் கூட எழுப்ப கூடாது; இதை மீறி, யாராவது கத்தினால், அபராதமாக, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்...' என்றார். இருவரும் ஒப்புக் கொண்டனர்; பயணம் துவங்கியது.

தான் கூறிய மாதிரியே ஹெலிகாப்டரை தாறுமாறாக ஓட்டினார் பணக்காரர். வானத்தில் கரணம் அடித்தார். தரை இறங்கியதும், 'பரவா யில்லையே... இவ்வளவு பயங்கர பயணத்திலும், நீங்கள் ஒரு சின்ன முனகல் சத்தம் கூட எழுப்ப வில்லையே...' என்று பாராட்டியவர், திகைத்து போனார். இருவரில் ஒரே ஒருவர் தான் இருந்தார்.

'என்ன... உன் நண்பனை காணோம்...' என்று அதிர்வுடன் கேட்டார்.

அவன் கூறிய பதிலைக் கேட்டு, 'நல்ல நண்பேன்டா...' என்று கூறினார் பணக்காரர்.

இரு நண்பரில் ஒருவன் அப்படி என்ன கூறினான்!

    புதிர் கதை விடைகள்!

* 'மன்னிக்கவும்... என் பெயர் தான் நிரஞ்சனா...' என்றார் அந்த பாட்டி.

* 'என் நண்பன் ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழுந்து விட்டான்... 'நண்பா...' என்று கத்தினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டச் சொல்வீர்கள் என்பதால், கஷ்டப்பட்டு என்னை கட்டுப்படுத்தி கொண்டேன்!' என்றான் நண்பன்.