கெட்டிக்கார நீதிபதி!

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2019

ஒரு ஊரில், நேர்மையான நீதிபதி வாழ்ந்து வந்தார். மிகவும் புத்திசாலியான அவர், நாடி வருவோர் வழக்குகளை தீர்த்து வைத்தார். அவர் புகழ் பரவியது. அவரைக் காண, அந்நாட்டு மன்னருக்கும் ஆவல் ஏற்பட்டது.

ஒரு நாள் -

வியாபாரி போல வேடமிட்ட மன்னர், நீதிபதியைக் காண குதிரையில் புறப்பட்டார்.

வழியில், நடக்க முடியாமல் ஒரு ஏழை அவதிப்பட்டான். இரக்க சுபாவமுள்ள மன்னர், அவனுக்கு தங்க காசுகள் கொடுத்தார்.

அவன், 'ஐயா... அடுத்த ஊர் வரை குதிரையில் அழைத்துச் செல்லுங்கள்...' என்றான்.

அழைத்து சென்று, அந்த ஊர் வந்ததும், இறங்க சொன்னார். கொடிய எண்ணம் கொண்ட அவன், 'இது என் குதிரை...' என, இறங்க மறுத்து உரிமை கொண்டாடினான். அவனை, நீதிபதியிடம் அழைத்துப் போனார், மன்னர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 'குதிரையை, என் வீட்டில் விட்டு செல்லுங்கள்; நாளை தீர்ப்பு சொல்கிறேன்...' என்றார்.

மறுநாள் -

நீதிபதி வீட்டில் பல குதிரைகளின் நடுவே, அந்த குதிரை கட்டப்பட்டிருந்தது. எளிதில் அடையாளம் காண முடியாதவாறு செய்திருந்தார். இருவரையும் தனித்தனியாக, குதிரையை அடையாளம் காட்டச் சொன்னார்.

கூர்ந்து பார்த்த ஏழை, சற்று சிரமத்துடன் அடையாளம் காட்டினான். தன் குதிரையை, எளிதாக கண்டுபிடித்தார், மன்னர்.

அப்போது நீதிபதி, பொய் வழக்கு போட்ட ஏழைக்கு, 50 கசையடி வழங்க உத்தரவிட்டார்.

வியந்த மன்னர், 'இருவருமே குதிரையை அடையாளம் காட்டிவிட்டீர்களே... எப்படி உண்மையை கண்டுபிடித்தீர்கள்...' என, கேட்டார்.

புன்னகைத்த நீதிபதி, 'உங்களுக்கு குதிரையை தெரிந்திருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்கு இந்த சோதனை நடத்தவில்லை; குதிரைக்கு, உங்களை தெரிகிறதா என, அறியத்தான். குதிரை அருகில் சென்ற போது, உங்களை திரும்பி பார்த்து, காதுகளை ஆட்டியது. ஏழையைத் திரும்பி கூட பார்க்கவில்லை...' என்றார்.

அவரது அறிவு கூர்மையைப் பாராட்டிய மன்னர், அரசவையில் பிரதான நீதிபதியாக நியமித்தார்.

குட்டீஸ்... அறிவுக் கூர்மைக்கு கிடைத்த பரிசை பார்த்தீர்களா... நீங்களும் நன்றாக சிந்தித்து முடிவு எடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.