மக்களை வருத்திய வற்கடம்!

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2019

நாட்டில் பருவகாலங்களில் சரிவர மழை பெய்யா விட்டால் வறட்சி, பஞ்சம் ஏற்படும். அந்த வறட்சியைத்தான் பழங்காலத்தில் 'வற்கடம்' என்று குறிப்பிட்டார்கள்.

'வைய மெங்கும் வற்கடமாய்ச்

செல்ல, வுலகோர் வருத்தமுற

நையு நாளிற், பிள்ளையார் தமக்கு நாவுக் கரசருக்கும்'

என்னும் பாடலில், இந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் 'வற்கடம்' என்னும் பஞ்சம் ஏற்பட்டு மக்களை வருத்துகிறது. அந்த நேரத்தில் திருவீழிமிழலையில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தங்கி இருக்கிறார்கள். மக்களின் பஞ்சம் இவ்விரு நாயன்மார்களையும் வருத்துகிறது. இவர்களின் வருத்தத்தைப் போக்க, இறைவனே தினமும் இரண்டு பொற்காசுகளைக் கோவிலில் வைப்பதாக, கனவில் வந்து கூறுகிறார். அந்தக் காசுகளின் உதவியால், அடியார்களுக்கு நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் உணவு கொடுத்து பஞ்சம் போக்கியதாக, பெரியபுராணம் கூறுகிறது.

பல்லவ அரசர் நரசிம்ம வர்மன் காலத்தில் (கி.பி.630 முதல்- 668 வரை) பல போர்கள் நடந்தன. சாளுக்கிய அரசரான இரண்டாம் புலிகேசி, பலமுறை பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தார். அந்தப் போர்களில் அவரை எதிர்த்து நரசிம்ம வர்மன் வெற்றி பெற்றார். நரசிம்மவர்மன் புலிகேசியின் தலைநகரமான வாதாபி நகரைத் தாக்குவதற்குச் சேனையைத் திரட்டிச் சென்று, அந்நகரை தீக்கரையாக்கினார்.

சாளுக்கியருடன் நிகழ்ந்த போர்கள் அன்றி, சோழர், பாண்டியர், சேரர்களுடனும் போர் செய்தார். இப்படி அடிக்கடி பல்லவ நாட்டில் நடைபெற்ற போர்களின் காரணமாகப் பொருள் நெருக்கடி ஏற்பட்டது. அத்துடன் மழையும் பெய்யாமல் வற்கடம் உண்டாயிற்று. நரசிம்ம வர்மன் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப் பற்றி,

'தப்பில் வானம் தரணி கம்பிக்கி லென்

ஒப்பில் வே ந்தர் ஒருங்குடன் சீறிலென்

செப்பமாஞ் சேறை ச் செந்நெறி மேவிய

அப்பனாருளர்; அஞ்சுவ தென்னுக்கே !'

நாட்டில் அரசர்கள் சீறிப் போர் செய்தையும், மழைபெய்யாமல் பஞ்சம் உண்டானதையும் குறிப்பிடுகிறார், தேவாரத்தில் திருநாவுக்கரசர். மா. இராசமாணிக்கம் எழுதிய 'பல்லவர் வரலாறு' என்னும் நூலிலும் இராஜசிம்மன்(பல்லவன்) காலத்தில் (கி.பி.686 முதல் -689 வரை). மூன்று ஆண்டுகள் கடுமையான பஞ்சம் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இந்தப் பஞ்சத்தை இராஜசிம்மனின் அவைக்களப் புலவர் தண்டி, 'வற் கடத்தால், கற்றோரும் பிறரும் நாடெங்கும் அலைந்து திரிந்தனர். குடிகள் பெருந்துன்பத்தில் உழன்றனர். சாலைகள் சீர்கெட்டுக் கிடந்தன. குடும்பங்கள் நிலைகெட்டன. அரசியல் நிலை தடுமாறிற்று' என்று 'அவந்தி சுந்தரி கதா' என்னும் நூலில் கூறியுள்ள தாகக் குறிப்பிடுகிறார்.

பாண்டிய நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் வற்கடம் தோன்றியது. அதனால் தமிழ்ப் புலவர்கள் பாண்டிய நாட்டை விட்டுச் சென்றனர். மழை பெய்து வளமை வந்தவுடன் பாண்டிய அரசன் உக்கிரப்பெருவழுதி, புலவர்களைத் தன் நாட்டிற்குள் அழைத்துக்கொண்டதாகவும் 'இறையனார் களவியலுரை' என்னும் நூல் குறிப்பிடுகிறது.