பாட்டிமார் சொன்ன கதைகள் – 219 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2019

குருவின் சொல்லை தட்டாத சிஷ்யன்!

அப்படிச் செய்து அவன் புஷ்டியாகவேயிருந்ததைக் கண்டு குரு,`நீ இப்போது எப்படி ஜீவனம் செய்து வருகிறாய்?’ என்று கேட்டார். அதற்கு அவன், ` மறுபடியும் போய் பிச்சை எடுக்கிறேன்’ என்று பதில் சொன்னான். அப்போது குரு, `இது ஒரு பிரம்மசாரிக்குச் சரியன்று. கிரகஸ்தர்களிடம் அடிக்கடி பிச்சை கேட்பதால், நீ பேராசைக்காரனாகிறாய்‘ என்று சொன்னார்.

சரியென்று சொல்லி, அவன் மறுபடியும் பசுக்களை மேய்க்கப் போனான். அவன் இன்னும் உடம்பில் அதிக வாட்டமில்லாமலேயேயிருந்தான். எனவே குரு, `நான் உன் பிச்சை முழுவதையும் எடுத்துக் கொள்ளுகிறேன். நீயோ வேறு பிச்சையும் எடுக்கிறதில்லை. இப்போது எப்படி நடக்கிறது உன் ஜீவனம்?’ என்று கேட்டார். உடனே சிஷ்யன் அவரைப் பார்த்து `ஐயா அந்தப் பசுக்களின் பாலைக் கொஞ்சம் கறந்து பசி தீர்த்துக் கொள்கிறேன்‘ என்றான். உடனே உபாத்தியாயர் `அப்படியா செய்தி?’ கூடாது. கூடாது. என் வீட்டுப் பாலை உபயோகிக்க நான் அனுமதி கொடுக்கவில்லை’ என்று சொன்னார். அவனும் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டிக் கொண்டு, காட்டுக்குப் போய் வழக்கம் போல் மாடுகளை மேய்ந்து வந்தான். பிறகு உணவுக்கு ஒன்றும் தோன்றாததால் பட்டினி கிடந்தான்.

 ஒரு நாள் சிலர் இவனிடம் வந்து, `இதோ இந்த்  பட்சணத்தைச் சாப்பிடு‘ என்று வேண்டிக் கொண்டார்கள். அவனோ `நான் குருவுக்குத் தெரியாமல் எதையும் சாப்பிடமாட்டேன்‘ என்று பதில் சொல்லிவிட்டான். அப்போது அவர்கள் சொன்னார்கள் ` முன்னால் உன் உபாத்தியாயரையும் இந்த விதமாகவே அவருடைய குரு சோதித்துப் பார்த்தார். அவருக்கும் நாங்கள் பட்சணங்கள் கொடுத்தோம். தம் குருவுக்குத் தெரியாமலே சாப்பிட்டு விட்டார். உன் உபாத்தியாயர் செய்தது போலவே நீயும் செய்தால், அதில் என்ன தவறு இருக்கிறது? குருவின் கைங்கரியத்திற்காகவாவது உயிரை உடம்போடு ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா?’’

 இவ்வாறு அவர்கள் சொன்ன பிறகு, `நான் என் குருவுக்குத் தெரியாமல் சாப்பிட மாட்டேன்’ என்று பிடிவாதமாகச் சொன்னான் சிஷ்யன். வந்தவர்கள் `நாங்கள் தேவ வைத்தியர்களான அசுவின் தேவர்கள், உன் பசிப்பிணியைப் போக்கவே வந்தோம். தவறான காரியத்தைச் செய்யும்படிச் சொல்லுவோமா? கொஞ்ச சாப்பிடு. இந்த பட்சணத்தை என்று சொன்னார்களாம் அப்பொழுதும்  உபமன்யு என்ற அந்த சிஷ்யன், அப்படி செய்ய மறுத்து அவர்கள் அடியில் விழுந்து ` பெரியோர்களே, அடியேன் பிரதிஞ்சையில் நிலைத்து நிற்கும்படி கிருபை செய்ய வேண்டும்‘ என்று பிரார்தித்தான். தேவர் அவன் குரு பக்தியைப் பெரிது மெச்சி ஆசீர்வதித்தார்கள்.

 நடந்ததையெல்லாம் கேள்விப்பட்ட தெளம்யர் ஓடி வந்து சிஷ்யனைத் தழுவிக் கொண்டு `` நீயே என் ஸ்தபுத்திரன். உன்னைப் போன்ற சிஷ்யர்கள் குருவையும் கரையேற்றுகிறார்கள். இம்மையிலும் மறுமையிலும் நான் தவறிய பரீட்சையில் கூட நீ தேறி விட்டாய்‘ என்று குதூகலத்தோடு சொன்னார்.

 இந்த மூன்று சிஷ்யர்களும் நாளடைவில் ஆசிரியர்களானார்கள். பல சிஷ்யர்களுக்கும் கல்வி கற்பித்து வந்தார்கள். ஆனால் இவர்களில் ஒருவராவது தன்னுடைய சிஷ்யனை இவ்விதமான பரீட்சைகளுக்கு உட்படுத்தவில்லை.

கருணையில் மலர்ந்த காதல்

`எத்தனையோ ரிஷிபுத்திரர்களைப் பார்த்தி ருக்கிறேன்.  ஆனால் அவரைப் பார்த்ததும் ஏன் அப்படி மயக்கமாய் வந்தது? விஷம் ஏறுவது போல் ஏறுகிறதே அந்த உணர்ச்சி இன்னமும்‘ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் ரிஷி புத்திரி.

 அந்த ரிஷி புத்திரனோ பிரமசரிய விரதம் பூண்டு கல்வியையே காதலித்து வந்த போதிலும், எல்லாப் பிராணிகளின் நன்மையிலும் கருத்துள்ளவராய் எவரை யும் அன்போடு அருளோடும் நோக்குவான். அவரவர் குறைகளை விசாரித்துத் தம்மால் இயன்ற அளவு உதவி செய்வதற்காகவே ஜென்மமெடுத்திருப்பதாக நம்பி னான். அந்த உக்கிரமான தவமுடைய மகரிஷியின் தபோவனத்திலே அவனைப் பார்த்ததும் விசேஷ இரக்கம் உண்டாகிவிட்டது.

 `அந்தப்  பிரம்ம ரிஷியின் புத்திரிதானா, தேவகன்னிகைபோல் ஜொலிக்கிற அந்தப் பெண்மனி ‘ என்று அங்கே குருகுல வாசம் செய்து கொண்டிருந்த சில பிரமசாரிகளை விசாரித்தான். அவர்கள் சொன்னார்கள் `ஆம். தேவ கன்னிகைதான். மனுஷ்ய சஞ்சாரமில்லாத ஒரு நதிக்கரையிலே அவளைக் குழந்தையாகக் கண்டார் பிரம்மரிஷி. எந்த தாயோ தயையில்லாமல்  போட்டுவிட்டுப் போய்விட்டாள்! தேவ தாசியான மேனகைதான் அப்ப்டி செய்திருக்க வேண்டுமென்று சொல்கி றார்கள். இந்தப் பெண்ணின் தெய்வீக அழகைப் பார்த்து, தேவதாசியானாலும் தாசிதானே? லஜ்ஜை ஏது? இரக்கம் ஏது? அந்தக்  குழந்தையைத்தான் அந்த முனி சிரேஷ்டர் கிருபையோடு எடுத்து வளர்த்து வருகிறார்.. தம் சொந்த புதல்வியைப் போல. அழகைப் போலவே குணமும் சுபாவமும். பிரமத்வரை என்று பேரிட்டிருக்கிறார். அதற்குப் `பெண்ணில் சிறந்தவள்’ என்று பொருளல்லவா? அபிமானத்தால் அப்படி பேர் கொடுத்திருந்த போதிலும், உண்மையும் அதுதான். உள்ளபடியே பெண்களில் சிறந்தவள். ரூப சவுந்தரி யத்திலும் குண செளந்தரியத்திலும்.

 இந்த வரலாற்றைக் கேட்டதும் குரு என்ற அந்த ரிஷி புத்திரனுக்கு இரக்கம் இன்னும் அதிகமாயிற்று. அவளுடைய தனிமையை அடிக்கடி நினைத்துப் பார்த்தான். அவளுக்கு ரிஷி புத்திரிகளான தோழிகள் இருக்கக் கூடுமேயென்பதை அவன் நினைத்துப் பார்க்கவேயில்லை.

(தொடரும்)