ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 5–6–19

பதிவு செய்த நாள் : 05 ஜூன் 2019

என் ஒவ்­வொரு பாட­லுமே சினி­மா­தான்!

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

நீங்­கள் இசை­ய­மைத்த படங்­க­ளில் இருக்­கும் ‘தீம்’ இசை­களை மட்­டும் தொகுத்து ஒரு ஆல்­ப­மாக தரும் திட்­டம் இருக்­கி­றதா?

நல்ல திட்­டம்­தான். அப்­படி வெளி­யிட்­டால் அதை எடுத்­துத் தொலைக்­காட்­சித் தொடர்­க­ளில் பயன்­ப­டுத்தி வீண­டித்­து­வி­டு­வார்­கள் என்­ப­தற்­கா­கவே நான் அதைச் செய்­யா­மல் வைத்­தி­ருக்­கி­றேன். அப்­ப­டி­யி­ருந்­தும் திரைப்­ப­டங்­க­ளில் எடுத்­தாள்­கி­றார்­கள். எடுத்­தா­ளப்­ப­டும் என் இசை இடம்­பெ­றும் காட்­சி­கள் வரும்­போது இசைக்­கா­கக் காட்­சி­யின் அபத்­தங்­க­ளைப் பார்­வை­யா­ளர்­கள் மன்­னித்­து­வி­டு­கி­றார்­கள். எனது இசை­யின் பாதிப்­பி­லி­ருந்து தொலைக்­காட்­சித் தொடர் இயக்­கு­நர்­கள் மட்­டு­மல்ல, திரை இயக்­கு­நர்­க­ளும் வெளியே வர முடி­யாத நிலை­தானே இருக்­கி­றது?

* இன்று திரை­யி­சை­யின் ஒரு பகு­தி­யா­கவே நாட்­டுப்­பு­றப் பாடல்­கள் மாறி­யி­ருக்­கின்­றன. அதற்­கான அஸ்­தி­வா­ரத்­தைப் போட்­டுத் தந்­த­வர் நீங்­கள். உங்­க­ளுக்கு உந்­து­சக்­தி­யாக இருந்த, நாட்­டுப்­புற இசை­யின் அச­லான வேர்­க­ளைத் தொகுக்­கும் எண்­ணம் இருக்­கி­றதா?

இசையை நான் பிரித்­துப் பார்க்க விரும்­ப­வில்லை. நான் போட்ட பாடல்­கள் நாட்­டுப்­புற இசை என்று நீங்­கள் சொல்­கி­றீர்­கள். அது கிளா­சிக் என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யாது. ‘மாங்­கு­யிலே பூங்­கு­யிலே’ பாடல் எந்த நாட்­டுப்­புற இசை? அதற்கு எங்கே ரெப­ரன்ஸ் இருக்­கி­றது? அது நான் போட்­டது. அதைப் போல ஒரு கிளா­சிக் கிடை­யவே கிடை­யாது. நாட்­டுப்­புற இசை என்­றால், பத்­துப் பதி­னைந்து பாடல்­க­ளோடு முடிந்­து­போய்­வி­டும். நாட்­டுப்­புற இசையை மட்­டுமே நான் பயன்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றேன் என்­றால், அந்­தப் பதி­னைந்து பாடல்­க­ளுக்­குப்­பின் எங்கே போவது? தவி­லை­யும் உரு­மி­யை­யும் பயன்­ப­டுத்­திப் பாடி­னால் அது நாட்­டுப்­புற இசை­யா­கி­வி­டுமா? காந்தி கிரா­மம் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் அண்­ண­காமு என்­ப­வர் இருந்­தார். அவர் தமி­ழ­கம் முழு­வ­தும் பாடப்­பட்ட கிரா­மி­யப் பாடல்­க­ளைத் தேடித் தொகுத்­தி­ருந்­தார். அதை பத்மா சுப்­ர­ம­ணி­ய­மும் அவ­ரது அண்­ணி­யார் ஷியா­மளா பால­கி­ருஷ்­ண­னும் சுரப்­ப­டுத்தி ஆல்­ப­மாக வெளி­யிட்டு விட்­டார்­கள். சினி­மா­வுக்கு வரு­வ­தற்கு முன்பே அந்த ஆல்­பத்­துக்கு வேலை­செய்து கொடுத்­து­விட்­டுத்­தான் வந்­தேன்.

* இளை­ய­ராஜா எனும் கவி­ஞரை, பாட­லா­சி­ரி­யரை அறி­வோம். ஆனால், இளை­ய­ராஜா எனும் கதா­சி­ரி­யர் ‘நாடோ­டித் தென்­றல்’ படத்­துக்­குப் பின் முகம் காட்­டவே இல்­லையே?

‘நாடோ­டித் தென்­றல்’ என்­னு­டைய கதையே அல்ல. எனது பெய­ரைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்­ப­தற்­காக போட்­ட­னர். நான் கூறிய கதையை அவர் எடுக்­க­வே­யில்லை. அந்­தக் கதை இன்­னும் காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. அதைப் பட­மாக்க விரும்­பும் யாரும் என்­னி­டம் அதைக் கேட்க வர­லாம். அது­வொரு கிளா­சிக். அது மாதி­ரி­யான படங்­களை எடுக்க இப்­போது யாரும் வர­மாட்­டார்­கள்.

* உங்­க­ளது சில மேடைக்­கச்­சே­ரி­க­ளில் கவ­னித்­தி­ருக்­கி­றேன். இசைக் கலை­ஞர்­கள் வாசிப்­ப­தில் சின்ன தவறு வந்­தா­லும் அந்த இடத்­தி­லி­ருந்து மீண்­டும் வாசிக்க வைத்­து­வி­டு­வீர்­கள். இது தரத்­துக்­கான பிடி­வா­தமா, ரசி­கர்­க­ளுக்­குப் புதிய அனு­ப­வ­மாக இருக்­கட்­டும் என்­ப­தற்­கா­கவா?

நீங்­கள் மார்க்­கெட்­டிங் செய்­கி­றீர்­களா என்­ப­து­போல் கேட்­கி­றீர்­கள். என்­னைப் போன்ற ஒரு கலை­ஞ­னு­டைய உண்­மை­யான மன­நி­லையை உங்­க­ளால் புரிந்­து­கொள்ள முடி­யாது. முப்­பது வரு­டங்­க­ளுக்கு முன் போட்ட பாடலை, தின­சரி கேட்­கும் பாடலை மறு­ப­டி­யும் தவ­றாக வாசித்­தால் அதை எப்­ப­டிச் சகித்­துக்­கொள்­வது? இப்­படி தவ­று­கள் நடக்­கும்­போது என்­னால் சகிக்க முடி­ய­வில்லை.

* உங்­க­ளது இசைக்­காக ஏங்­கும் ரசி­கர்­க­ளுக்கு நீங்­கள் இசை­ய­மைத்த சிம்­பொ­னியை எப்­போது கொடுக்­கப்­போ­கி­றீர்­கள்?

எனது ஒவ்­வொரு பாட­லுமே சிம்­பொ­னி­தான். இது­வரை உல­கம் முழு­வ­தும் உள்ள கம்­போ­சர்­கள் உரு­வாக்­கிய சிம்­பொ­னி­க­ளைக் கேட்­டுக் கேட்டு ரசித்து, சிம்­பொனி என்­றால் என்­ன­வென்று புரி­கிற ஒரு காலம் இங்கே வரும்­போது அதை வெளி­யி­டு­வ­து­தான் சரி­யாக இருக்­கும். அந்­தக் கால­மும் நேர­மும் கூடி வரும்­போது கண்­டிப்­பாக அது வெளியே வரும். அந்த சூழல் சீக்­கி­ரமே உரு­வாக வேண்­டும் என்று இறை­வ­னைப் பிரார்த்­திக்­கி­றேன்.