நடிகர்கள் : தனுஷ், அனன்யா, உன்னி முகுந்தன், சுஹாசினி மணிரத்னம், ஷீலா, விவேக், இளவரசு மற்றும் பலர்.
இசை : தீனா, ஒளிப்பதிவு : ஸ்ரீநிவாஸ் தேவாம்சம், எடிட்டிங் : ராம் சுதர்சன், தயாரிப்பு: மித் புரொடக்க்ஷன்ஸ், கதை : ரஞ்சித்,
திரைக்கதை, இயக்கம் : சுப்ரமணியம் சிவா.
முதியவர் அமிர்தவள்ளி (ஷீலா) வீட்டில் வேலைக்காரியாக இருந்து அவரை கவனித்துக் கொள்பவள் மகா (அனன்யா). அவரது வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் அனைவரும் மகாவை வேலைக்காரியாக இல்லாமல் வீட்டில் ஒருவராகவே பார்க்கிறார்கள். சமையலோடு வீட்டின் அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்ளும் மகா சிறந்த முருக பக்தை. பழனியில் இருந்தும் மகாவால் முருகனை கோயில் சென்று தரிசிக்க முடியவில்லை. ஒரு நாள் தனக்கு திருமணமாவதாக கனவு காணும் மகா, கனவில் கணவனாக கண்டவரை அடுத்த நாள் தனது வீட்டில் சந்திக்கிறாள். அது அமிர்தவள்ளியின் பேரன் மனோ (உன்னி முகுந்தன்) என்று தெரிய வருகிறது. பாட்டியோடு தங்கும் மனோ மகாவை நேசிக்க தொடங்குகிறான். முதலில் மறுத்தாலும் மகாவும் மனோவை விரும்புகிறாள்.
தங்கள் திருமணத்திற்கு தனது தாய் சம்மதம் தெரிவிப்பார் என்று உறுதியாக நம்பும் மனோ, மகாவுக்கும் தைரியம் சொல்கிறான். ஆனால் மனோ சொல்வதற்கு முன்பே அவனது அம்மா தங்கம் (சுஹாசினி மணிரத்னம்) மனோவுக்கு தனது சிறுவயது தோழியின் மகளை நிச்சயம் செய்துவிடுகிறார். உண்மை தெரிந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் அனைவரும் வருந்துகிறார்கள். இதற்கிடையே நிச்சயிக்கப்பட்ட திருமணம் மணப்பெண்ணால் நின்றுவிட உறவினர்கள் தங்கத்தை குறை சொல்கிறார்கள். வீட்டில் ஒருவராக பழகும் மகாவை வேலைக்காரியாக நடத்தி அவமதிக்கிறார்கள். மனம் வருந்தும் மகா இனி முருகனை பார்க்கப் போவதில்லை என்று முடிவெடுக்கிறாள்.
பழனி மடப்பள்ளியைச் சேர்ந்த சரவணன் (தனுஷ்) சமையல்காரராக வீட்டிற்குள் நுழைய அவரது சமையல் ருசி அனைவருக்கும் பிடித்துவிடுகிறது. குடும்ப நண்பர் மாதவ கவுண்டர் (இளவரசு) சிபாரிசில் வந்த சரவணன் தனக்கு நிம்மதி கொடுக்கும் சமையல் வேலையை பறித்துக் கொண்டதாக மகா குறை சொல்கிறாள். அவர்கள் வீட்டில் ஏற்கனவே தங்கியுள்ள போலி
சாமியார் கும்பிடு சாமியோடு (விவேக்) சரவணன் தங்கிக் கொள்கிறார். அவரது உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாக கூறி அவரை தனது கட்டுப்பாட்டில் சரவணன் வைத்திருக்கிறார். சரவணன் சொல்படி, உறவினர்கள் நிச்சயம் செய்திருக்கும் பெண் மனோவுக்கு பொருந்தி வரமாட்டாள் என கும்பிடுசாமி அனைவரிடமும் கூறி குழப்பம் ஏற்படுத்துகிறார். சரவணன் ஏற்படுத்தும் குழப்பங்களை அடுத்து, ஏற்கனவே உண்மையை உணர்ந்திருந்த அமிர்தவள்ளியும், தங்கமும், மனோவும், மகாவும் இணைய சம்மதம் தெரிவிக்கிறார்கள். திருமணத்தன்று மனோவும், மகாவும் நன்றி தெரிவிக்க சரவணனை தேடுகிறார்கள். அங்கு வரும் புதிய நபர் மாதவ கவுண்டன் சிபாரிசு செய்த மடப்பள்ளியைச் சேர்ந்த சரவணன்தான் என்றும் தன்னால் வேலைக்கு வரமுடியவில்லை என்றும் கூறுகிறார். முதன்முறையாக முருகனை கோயிலில் தரிசிக்கும் மகா சரவணனை அங்கு காண்கிறாள். ஆனால் விரைவிலேயே கண்ணிலிருந்து மறைந்துவிட்ட சரவணன் உண்மையில் தான் வணங்கும் முருகனே என்று உணர்ந்து மகிழ்கிறாள். இந்துமத நம்பிக்கையின் படி தேவைப்படும் இடங்களில் கடவுள் மனித உருவில் வந்து உதவி செய்வார் என்பது ஆழமான நம்பிக்கை.