மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 156

பதிவு செய்த நாள் : 04 ஜூன் 2019

பிறகு, தூண்டு சோதிமணி விளக்குப் போன்ற பரவையார் தம் வாழ்க்கைத் துணைவரின் சொற்படி விருந்து சமைக்கத் தொடங்கினார்.

சேர மன்னருக்கும், அவருடைய பரிசனங்களுக்கும், மற்ற அடியார்களுக்கும் பொருந்தும்படி அப்பொற்கொடியார் பெரும் விருப்போடும் பெருகும் அன்போடும் விதவிதமான காய்கறிகளும் பானகமும் தயாரித்து விருந்து அமைத்து அனைவருக்கும் திருவமுது செய்வித்தார். பிறகு வளர்பிறை போன்ற அழகு முகம் வாய்ந்த பரவையார் தன் கணவரைப் புன்முறுவலுடன் பார்த்து, பன்னீரும், சந்தனமும், கஸ்தூரியும், நறும் பூமாலைகளும், தாம்பூலமும் அனைவருக்கும் வழங்கினார். அவருடைய மாளிகையிலேயே சேரமான் பெருமான் தங்கியிருந்து நம்பியாரூரரின் நட்பில் திளைத்து, திருவாரூர் இறைவரை நாள்தோறும் சேவித்து மனமகிழ்ந்து வந்தார். இவ்வாறு நண்பர்கள் இருவரும் மகிழ்ந்து வாழும்போது ஒரு நாள், ‘‘மதுரை முதலிய திருப்பதிகளைக் கண்டு தொழுதல் வேண்டும்’’ என்றும் வன்தொண்டரான  சுந்தரனார் விருப்பங் கொண்டார். அவரைப் பிரிய முடியாத நட்பினால் சேரமான் பெருமானும் அவருடன் சென்று அந்தத் திருப்பதிகளை வணங்குவதற்கு விரும்பினார். இருவரும் புறப்பட்டார்கள். வழிப்பயணத்திற்குத் தேவையான வாகனங்களை பணியாட்கள் பொன், பொருட்கள் முதலானவற்றை எல்லாம் ஏராளமாகக் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்தார்கள்.

 திருவாரூரை இருவரும் வணங்கிச் சென்று, திருக்கீழ்வேளூர் என்னும் தலத்திலுள்ள இறைவனைப் பணிந்து, பின் அங்கிருந்து புறப்பட்டு திருநாகைப்பட்டிணத்தில் திருக்காரோணக் கோயிலிலுள்ள சிவபெருமானைப் பணிந்தார்கள். அப்போது நம்பியாரூரர் ‘அடியார்களது உள்ளமுருக்கும் திருக் காரோணத்து இருப்பீரே!’ என்னும் மகுமுடைய திருப்பதிகத்தைப் பாடினார். பிறகு அவரும் சேரமான் பெருமானும் அங்கிருந்து அகன்று சென்று திருமறைக்காடு சென்றார்கள். முன்பொரு சமயம், அங்குள்ள கோயிலின் திருவாயிற்கதவு வேதங்களால் மூடப்பட்டிருந்து திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இறைவரை நேர்முகமாகத் தரிசிக்க விரும்பி அக்கதவு திறக்கவும் அடைக்கவும் பாடினார்களல்லவா? கண்களிலே ஆனந்தக்கண்ணீர் சொரிய, அப்பெரியவர்களை மனதால் தியானித்துப் பணிந்தார்கள். நம்பியாரூரர் ‘யாழைப் பழித்தன்ன’ என்னும் பாடலடி எடுத்துத் திருப்பதிகம் பாடினார். சேரர் பெருமான், தாம் பாடிய பொன் வண்ணத்தந்தாதியில் இறைவரைச் சிறப்பித்துப் பாடியவற்றையே ஓதி வணங்கினார். பிறகு இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று திருவகத்தியான் பள்ளியை அடைந்தார்கள். திருக்கோடிக்குழகர் – இதை ‘குழகர் கோயில்’ என்றும் சொல்வார்கள். இந்தக் கோயிலைப் பூஜித்தார்கள். பிறகு திருப்பத்தூர் பதிக்கு வந்து இறைவனை வணங்கிச் சென்று மதுரை மாநகரை வந்தடைந்தார்கள். பாண்டிய மாமன்னரால் இருவருக்கும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள ஆலவாய்க் கோயிலில் சொக்கலிங்கப் பெருமானை வணங்கி, இருவரும் தமிழ்ப் பதிக பாமாலை பாடிக் களித்தார்கள்.

 பாண்டிய மன்னனின் புதல்வியை சோழ மன்னன் மணம் புரிந்து கொண்டிருந்ததால்,  அவனும் அப்போது மதுரையில் தங்கியிருந்தான். அதனால் முடிமன்னர்கள் மூவரும் ஒன்றுகூடி நம்பியாரூரரோடு மதுரை ஆலவாய்ச் சொக்கலிங்கம் பெருமானை வணங்கி வழிபட்டு வந்தார்கள். பாண்டியனின் அரண்மனையிலேயே அனைவரும் தங்கியிருந்தார்கள். பிறகு நம்பியாரூரர் முடிமன்னர்கள் மூவரோடும் மதுரையிலிருந்து புறப்பட்டுத் திருப்புவனம் என்னும் தலத்திற்கு வந்து சேர்ந்தார். அங்குள்ள இறைவனைத் தொழுது ‘திருவுடையார்’ என்று தொடங்கி ‘பூவண மீதோ?’ என்று முடியும் திருப்பதிகம் பாடி முடிமன்னர் மூவருடனே, அவ்வூரில் சில நாட்கள் தங்கியிருந்தார்.  பிறகு  நம்பியாரூரர்  தமிழ்  மூவேந்தருடன்   திருப்பு வனத்தினின்று புறப்பட்டு மதுரைக்குச் சென்றார். அங்கிருந்தவாறே திருவாப்பனூர், திருவேடகம்  முதலான பதிகளுக்குச் சென்று வணங்கினார். பிறகு மூவேந்தருடன சேர்ந்து, திருப்பரங்குன்றத்தை அடைந்தார். அங்குள்ள இறைவனின் திருவடிகளை வணங்கி, ‘ஆட்செய அஞ்சுதும்’ என்று இறுதியில் அமைத்து ‘கோத்திட்டையும்’ என்று தொடங்கும் திருப்பதிகத்தை மூவேந்தர் முன்னிலையில் இசையுடன் பாடித் துதித்தார்.

 பாண்டிய நாட்டிலுள்ள திருத்தலங்கள் முதலியவற்றையும் வணங்க, சேரமான் பெருமான் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் சென்றார்கள். சோழர், பாண்டியர் இருவரும் தென்னாட்டிலே அவர்களுக்கு வேண்டுவனவற்றைச் செய்தமைத்ததற்குரிய பரிசனங்களை, அவர்களுடன் அனுப்பி வைத்து மதுரைக்கு மீண்டனர். நம்பியாரூரர், சேரமான் பெருமான்  நாயனாரோடு,  தலயாத்திரை சென்று திருக்குற்றாலம்,  திருநெல்வேலி, திருராமேஸ்வரம் போன்ற பல சிவத்தலங்களை வணங்கித் தமிழ்ப்பதிகப் பாமாலைகளைச் சாத்தினார். ராமேஸ்வரத்தில் இருந்தபடியே ஈழநாட்டிலுள்ள மாதோட்டத்தொ கேதீச்சுரத்தை, மனத்தால் நினைத்து, தொழுது, திருப்பதிகம் பாடினார். பிறகு நம்பியாரூரர், அங்கிருந்து புறப்பட்டு  திருச்சுழியல் என்னும் தலத்தை அடைந்தார். அங்கு, நம்பியாரூரர், கருக்குழியில் விழாமல் காப்பவரான சிவபெருமானைத் தொழுது, ‘ஊனாய் உயிர் புகலாய்’ என்னும் திருப்பதிகத்தைப் பாடி, சேரமான் பெருமான் நாயனாருடன் அவ்வூரில் தங்கியிருந்தார். அப்பொழுது, சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரின் கனவில் காளையாகிய திருவடிவத்துடன் தோன்றினார். திருக்கரத்தில் பொற்செண்டும், திருமுடியிலே சுழியமும் ஆகிய இவற்றுடன் வேறெங்கும் காணமுடியாத திருவேடத்தைக் காட்டி,  ‘நாமிருப்பது கானப் பேர்’ என்று சொல்லி மறைந்தார். உடனே நம்பியாரூரர் கனவில் கண்ட அதிசயத்தை வியந்து கொண்டே கண்விழித்து எழுந்தார்.

 பிறகு நம்பியாரூரர், தாம் கணட கனவைச் சேரமான் பெருமான் நாயனாருக்குச் சொல்லி மகிழ்ந்து, திருசுழியற் பெருமானை வணங்கித் தொழுது விடைபெற்று, ‘திருக்கானப்பேர்’ என்னும் கோயிலை (காளையார் கோயில்) அடைந்தார். அங்குள்ள இறைவரை வணங்கி, தமிழ் மாலை பாடிப் பரவினார். சேரரும், ஆரூரரும், அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து விட்டுத் ‘திருப்புவனவாயில்’ என்னும் பதியை அடைந்தார்கள்.