புதிய பாடத் திட்டப்படி அச்சிடப்பட்ட புத்தக விநியோகம்: செங்கோட்டையன் துவக்கினார்

பதிவு செய்த நாள் : 03 ஜூன் 2019 14:49

சென்னை,

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை புதிய பாடத் திட்டப்படி நடப்பு கல்வியாண்டிற்கு 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு  தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் விநியோகத்தை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  இன்று துவக்கி வைத்தார். வகுப்புக்கு ஒரு மாணவர் வீதம் 8 மாணவர்களுக்கு புத்தகங்களை அமைச்சர் வழங்கினார்.

புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் அச்சிடப்பட்ட 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் கடந்த கல்வியாண்டில் 4.5.2018 அன்று வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கு ரூ. 195.25 கோடி செலவில் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,

புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள பாடங்களை படிக்க 220 நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் ஜூன் 3ந் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டன என்றார்.

பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக போக்க உள்ளாட்சித் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை இணைந்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மத்திய அரசால் நடத்தப்படும் எந்த போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள ஆற்றல் பெறும் வகையில் இந்த புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கல்வித் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும், மாற்றங்களையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.