மத்திய அரசின் தேர்வுகளை சந்திக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

பதிவு செய்த நாள் : 03 ஜூன் 2019 11:41

சென்னை,

மத்திய அரசு கொண்டு வரும் தேர்வுகளை சந்திக்கும் வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

+ 2  உள்ளிட்ட 8 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடந்த கல்வி ஆண்டில்  1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு பாட மாற்றம் உருவாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

பள்ளிகள் திறக்கப்பட்ட இன்றே புதிய பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்

புதிய பாடத்திட்டத்தை படிக்க மாணவர்களுக்கு 220 நாட்கள் தேவை என்பதால், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டே, திட்டமிட்டபடி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு, குடிநீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் பதிலளித்தார்.

எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தி விட்டதால், அதுபற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழ்நாட்டில் இருமொழி கல்விக் கொள்கையே தொடரும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய பாட புத்தகங்களை அமைச்சர் வெளியிட்டபோது, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மேலாண்மை இயக்குநர் எஸ். ஜெயந்தி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி. இராமேஸ்வரமுருகன், தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் சி. உஷாராணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலர் எம். பழனிச்சாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.