பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை!’ – 89

பதிவு செய்த நாள் : 02 ஜூன் 2019

அதே சம­யத்­தில் ‘மீனவ நண்­பன்’ படத்­தின் சில காட்­சி­க­ளுக்கு ஸ்ரீதர் தேர்ந்­தெ­டுத்த இடம் மணி­பால். அங்கே இரண்டு நாட்­கள் முன்­ன­தா­கவே ஸ்ரீத­ரும், சடை­யப்ப செட்­டி­யா­ரும் போய்­விட்­டார்­கள். இரு­பது நாட்­கள் ஷூட்­டிங். ஆனால் ஷூட்­டிங் ஆரம்­பிக்க வேண்­டிய நாளன்று சடை­யப்ப செட்­டி­யா­ருக்கு ஹார்ட் அட்­டாக்.

உட­ன­டி­யாக அவரை அங்­குள்ள கஸ்­தூ­ரிபா மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­து­விட்டு சென்­னை­யில் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு போனில் தக­வல் தந்­தார்­கள். அவர் மகன் ஓடோடி வந்­தார்.

எம்.ஜி.ஆரும் குறிப்­பிட்ட நாளில் வந்து சேர்ந்­து­விட்­டார். `ஷூட்­டிங் நடத்­து­வதா, வேண்­டாமா?’ என்று எம்.ஜி.ஆரை கலந்து ஆலோ­சித்­தார் ஸ்ரீதர். `ஷூட்­டிங்கை நிறுத்த வேண்­டாம். செட்­டி­யாரை காலை­யி­லும் மாலை­யி­லும் போய் பாத்து வர­லாம்’ என்று முடிவு செய்­தார்­கள். சடை­யப்ப செட்­டி­யார் மக­னி­டம் ஷூட்­டிங் தொடர்­பான பண விவ­ரங்­களை ஒப்­ப­டைத்­தார் ஸ்ரீதர். ஷூட்­டிங் திட்­ட­மிட்­ட­படி நடப்­ப­தில் செட்­டி­யா­ருக்கு மகிழ்ச்சி.

 இந்த சந்­தர்ப்­பத்­தில்­தான் ஒரு நாள் நம்­பி­யார் ` மூகாம்­பிகை கோயில் பக்­கத்­தில்­தான் இருக்­கி­றது. போய் அம்­மனை தரி­சித்­து­விட்டு வர உங்க அனு­மதி வேண்­டும்’  என்று எம்.ஜி.ஆரி­டம் கேட்­டார்.

`அதற்­கென்ன தாரா­ள­மாக போய் வாங்க’  என்று எம்.ஜி.ஆர் கூற, மறு­நாளே எம்.ஜி.ஆர் தவிர மற்ற அனை­வ­ரும் சென்று வந்­தார்­கள். மூகாம்­பிகை பற்றி எங்­க­ளி­டம் நிறை­யக் கேட்­ட­றிந்­தார் எம்.ஜி.ஆர்.

 சில நாட்­கள் சென்­றன. டைரக்­டர் சங்­கர் மணி­பா­லுக்கு வந்­தார். தானாக  வந்­தாரோ அல்­லது எம்.ஜி.ஆரால் அழைக்­கப்­பட்டு வந்­தாரோ தெரி­யாது . மறு­நாள் காலை அவ­ரும் எம்.ஜி.ஆரும்  மூகாம்­பிகை கோயி­லுக்­குப் போய் தரி­சித்­து­விட்டு வந்­தார்­கள். இது­தான் எம்.ஜி.ஆர். முதல் தட­வை­யாக மூகாம்­பிகை கோயி­லுக்கு போய் வந்த வர­லாறு.

 `மீனவ நண்­பன்’ எடுத்த போது இன்­னொரு சுவை­யான சம்­ப­வ­மும் நிகழ்ந்­தது. இந்­தப் படத்­துக்­காக மூன்று பாடல்­களை எம்.எஸ்.வியை கொண்டு இசை­ய­மைக்­கச் செய்து  பதிவு செய்­தார். பிறகு அவற்றை எம்.ஜி.ஆருக்­குப் கேட்க அனுப்பி வைத்­தார். `உரி­மைக் குரல்’ படத்­த­யா­ரிப்­பின்­போ­தும் இப்­ப­டித்­தான் நடந்­தது.

அதே போல் இப்­போ­தும் எம்.ஜி.ஆர். பாடல்­க­ளைக் கேட்­டு­விட்டு ஓகே சொல்­லி­விட்­டார். நான்­கா­வ­தாக ஒரு பாட­லைப் பதிவு செய்து டேப் – ரிக்­கார்­டர் சகி­தம் சடை­யப்ப செட்­டி­யாரை அனுப்­பி­னார் ஸ்ரீதர். பாட்­டைக் கேட்ட எம்.ஜி.ஆர். `டியூன் சரி­யில்லை. எம்.எஸ்.வியி­டம் சொல்லி  வேறு நாலைந்து டியூன் போட்டு அனுப்பி வையுங்­கள், நான் தேர்ந்­தெ­டுத்த பிறகு பாடல் எழுதி ரிக்­கார்ட் பண்­ண­லாம் ‘ என்று கூறித் திருப்பி அனுப்­பி­விட்­டார்.

 ஸ்ரீத­ருக்கு இது அதிர்ச்­சி­யாக இருந்­தது. எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யம் பாடிய அந்த அற்­பு­த­மான பாடலை நிரா­க­ரிக்க எம்.ஜி.ஆருக்கு எப்­படி மனம் வந்­தது என்றே ஸ்ரீத­ருக்­குப் புரி­ய­வில்லை.

 எம்.எஸ்.விக்கு விஷ­யம் தெரி­விக்­கப்­பட்­டது. அவர் மறு­ப­டி­யும் ட்யூன் போட உட்­கார்ந்­த­போது என்­னை­யும்  உட­னி­ருக்­கச் சொன்­னார், ஸ்ரீதரோ, `நீங்க ட்யூன் போடப் போறீங்க. எம்.ஜி.ஆர் செலக்ட் பண்­ணப் போறாரு  இடை­யிலே நான் எதற்கு?’ என்று சொல்லி நகர்ந்­து­விட்­டார். எம்.எஸ்.வி போட்ட ட்யூன்­க­ளில் ஒன்றை எம்.ஜி.ஆர். தேர்ந்­தெ­டுக்க, அதற்கு வாலி பாட்டு எழுதி, பாடல் பதி­வுக்கு நாளும் குறிக்­கப்­பட்­டது.

இந்த சம­யத்­தில் எஸ்.பி.பி. பாடிய பாடலை எம்.ஜி.ஆர் ஏன் நிரா­க­ரித்­தார் என்­ப­தற்­கான பின்­ன­ணி­யும் ஸ்ரீத­ருக்­குத் தெரி­ய­வந்­தது. யாரோ எம்.ஜி.ஆரி­டம் போய் `வழக்­க­மாக நீங்க நடிக்­கிற படங்­க­ளுக்கு உண்­டான பாடல் டியூன்­களை நீங்­க­தானே செலக்ட் பண்­ணு­வீங்க? இந்த ஸ்ரீதர் படங்­க­ளுக்கு அவரே செலக்ட் பண்­றாரே? உங்­களை விட அவர் பெரிய ஆளா? எம்.ஜி.ஆர். படங்­க­ளுக்கே நான்­தான் டியூன் செலக்ட் பண்­றேன் என்று அவர் சொல்­லிக்­கிட்டு திரி­ய­றாரு’ என்று கோள் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். ஸ்ரீத­ருக்கு ஒரு கெட்ட பெயரை  சம்­பா­தித்­துத் தரும் நோக்­கில் பேசப்­பட்ட இந்த பொய் எம்.ஜி.ஆரை சற்று கலக்­கி­விட்­டது. நமது சுப்­பீ­ரி­யா­ரிட்­டியை நிலை­நாட்ட வேண்­டும் என்­ப­தற்­காக அவர் டியூன் சரி­யில்லை என்று கூறி எஸ்.பி.பி. பாடிய பாடலை நிரா­க­ரித்­தி­ருக்­கி­றார்.

 மாற்­றுப்­பா­டலை பதி­வாக வேண்­டிய நாளன்று  காலை­யில் சத்யா ஸ்டூடி­யோ­வில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்­தித்­தார். `மத்­தி­யா­னம் ரிக்­கார்­டிங் இருக்கா ?’ என்று கேட்­டார்

எம்.ஜி.ஆர்.

 ` ஆமாம்’

`ட்யூன் எப்­படி?’

 ஸ்ரீதர் சற்­றும் தயங்­கா­மல் ` எனக்­குத் திருப்தி இல்லை’ என்­றார்.

 ஒரு நிமிட மவு­னத்­துக்­குப் பிறகு எம்.ஜி.ஆர் ` அப்­ப­டி­யா­னால் ரிக்­கார்­டிங்கை கேன்­சல் செய்­தி­டுங்க’ என்­றார்.

` வேண்­டாம். நீங்க தேர்ந்­தெ­டுத்த டியூன் பாட­லையே ரிக்­கார்ட் பண்­ணு­வோம்’  என்­றார் ஸ்ரீதர்.

 அடுத்த சில நிமி­டங்­கள் அவர்­க­ளுக்­குள் வாக்­கு­வா­தம்  தொடர்ந்­தது.

 இறு­தி­யாக எம்.ஜி.ஆர் சொன்­னார், `நாளைக்­குப் பழைய டியூ­னைக் கொண்­டாங்க. இன்­னொரு தடவை கேட்­டுப்­பார்ப்­போம்’  என்­றார்.

மறு­நாள் சடை­யப்ப செட்­டி­யார் முந்­தைய கேசட்டை திரும்­ப­வும் எடுத்­துக் கொண்டு போனார். பாட்­டைக் கேட்ட எம்.ஜி.ஆர் `டியூன் பிர­மா­தமா இருக்கே. இதையா நான் வேண்­டாம் என்­றேன்! அன்­றைக்கு டேப் – ரிக்­கார்­ட­ரில் ஏதா­வது கோளாறு இருந்­தி­ருக்­கும்’ என்று ஒரு போடு போட்­டார். தோல்­வியை ஒப்­புக்­கொள்­வ­தி­லும் அப்­படி சாணக்­கி­யம். ‘மீனவ நண்­ப’­னில் எம்.ஜி.ஆரால் முத­லில் நிரா­க­ரிக்­கப்­பட்டு பிறகு ஏற்­க­பட்ட எஸ்.பி.பியின் பாடல் இடம்­பெற்ற கதை இது­தான்.

 இன்­னொரு பக்­கம் `அண்ணா என் தெய்­வம்’ படப்­பி­டிப்­பும் நடந்து கொண்­டி­ருந்­தது. அவுட்­டோர் லொக்­கே­ஷ­னுக்­காக மெர்க்­காரா போனார்­கள். அங்கே நாலைந்து நாட்­கள் ஷூட்­டிங் நடந்­தது. இடை­யில் பெங்­க­ளூ­ரு­வில் லதா­வுக்கு ஒரு நடன நிகழ்ச்சி. அதற்கு எம்.ஜி.ஆர் தலைமை வகித்­த­தால் இரு­வ­ரும் புறப்­பட்­டுச் சென்­றார்­கள்.

 அடுத்த நாள் –

 `தமிழ்­நாட்­டில் தேர்­தல்’  என்­ப­தாக அறி­விப்பு வந்­தது.

 சட்­ட­சபை தேர்­தல் வேலை­களை கவ­னிக்க எம்.ஜி.ஆர். பெங்­க­ளூ­ரு­வி­லி­ருந்து நேரே சென்னை சென்­று­விட்­டார். எம்.ஜி.ஆர் ஷூட்­டிங் தொடர வழி­யின்றி எல்­லோ­ருமே `பேக் – அப்’ செய்து கொண்டு சென்னை திரும்­பி­னார்­கள்.

 இன்­னும் கிளை­மாக்ஸ் காட்சி மட்­டுமே எடுக்­கப்­பட வேண்­டிய நிலை­யில் ‘மீனவ நண்­பன்’ பட­மும் சுமார் மூவா­யி­ரம் அல்­லது நாலா­யி­ரம் அடியே எடுக்­கப்­பட்ட நிலை­யில் ` அண்ணா என் தெய்­வம்’  பட­மும் நின்று விட்­டது.

 எம்.ஜி.ஆர். தமி­ழ­கம் முழு­வ­தும் சுற்­றுப்­ப­ய­ணம் செய்து தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டார். ஒரு பக்­கம் இதெல்­லாம் பர­ப­ரப்­பாக இருந்­தா­லும்....!

(தொட­ரும்)