பாட்டிமார் சொன்ன கதைகள் – 218 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 31 மே 2019

 மாடா? மனிதனா?

ஆசைகளை  ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம் ?

அதனால்தான் ` தாமரை இலைத் தண்ணீர் போல்’ என்று போதித்தது இந்து மதம்.

 நேரிய வழியில் ஆசைகள் வரலாம்.

 ஆனால் அதில் லாபமும் குறைவும், பாபமும் குறைவு.

 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால் அந்த ஐநூறு உனக்குப் பணமாகத் தெரியாது.

 இருநூறு எதிர்பார்த்து உனக்கு ஐநூறு கிடைத்தால், நிம்மதி வந்துவிடுகிறது.

 `எதிர்பார்ப்பதைக் குறைத்துக் கொள். வருவது மனதை நிறைய வைக்கிறது ‘ என்பதே இந்துக்கள் தத்துவம்.

 எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன் ?

லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன் மேலும் ஒர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே ஏன் ?

அது ஆசை போட்ட சாலை.

 இப்படி இந்துமதம் பல விஷயங்களை சம்பவங்கள் மூலமாக, கதைகள்  மூலமாக போதித்து வந்திருக்கிறது.

` என் குரு என்னை எவ்வளவு கடுமையான பரீட்சைக்கு உட்படுத்தினார். நானும் அப்படியெல்லாம் முன்னேறச் செய்ய வேண்டும் என் சிஷ்யர்களையும்’’ என்று சங்கற்பம் செய்து கொண்டார் தெளம்யர் என்ற ரிஷி. அந்தக் குருகுலம் பிரசித்தி பெற்றுவிட்டது. பாஞ்சால நாடு முதல் பாண்டிய நாடு வரையிலும்.

` ஐயோ இப்படியும் சுமை சுமப்பதுண்டோ?  வேலைக்காரனைவிட கேவலமா?’ என்று பரிதாபமடைந்தார்கள் அந்த உத்தம சீடரைக் கவனித்தவர்கள் பலரும். ` மாடா? மனிதனா? நல்ல குருகுலம். நல்ல வாசிப்பு ‘ என்று பரிகசித்தவர்களும் உண்டு.

`அவன் நிலையென்ன? அவர் நிலையென்ன? தரித்திர புத்தி ‘ என்று தூஷித்தவர்களும் உண்டு. அவனோ வெயிலென்றும் மழையென்றும் பாராமல், பிறர் பேச்சையும் ஏச்சையும் பொருளாகக் கொள்ளாமல் பசி தாகம் முதலிய கஷ்டங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு, குரு கையால் இட்ட வேலையெல்லாம் தலையாலே செய்து வந்தான். ` நாம் செல்வர் குலத்திலே பிறந்து எவ்வளவு செல்வமாக வளர்ந்தோம்; வேதாந்தங்களைப் படிக்கத்தானே வந்தோம். ஏன் இப்படி உழைக்க வேண்டும்’ என்று எண்ணியதே கிடையாது. ` தடை சொல்லாமல் குருநாதனுக்குப் பணிவிடை செய்வதே  வித்தைக்கு வழி’ என்று உறுதியான தீர்மானத்தோடு நீண்டு காலம் உழைத்துக் கொண்டிருந்தான்.

 ஒரு நாள் குருவுக்கு பரம சந்தோஷம் உண்டாகிவிட்டது. சிஷ்யனை அழைத்து,` அப்பா! பரீட்சையில் தேறிவிட்டாய்’ என்று விடை கொடுத்தனுப்பினார். பைதன் என்ற பெயருள்ள அந்த சிஷ்யன் பின்னாளில் பிரசித்தமான அறிவுச் செல்வர்களில் ஒருவனாக விளங்கினான்.

 அதே குருகுலத்தில், ஆருணி என்ற பெயருள்ள வேறொரு சிஷ்யனும் வாசித்துக் கொண்டிருந்தான். ஒரு நான் அவனை நோக்கி ஆசிரியர் ` போ, நமது வயலிலுள்ள அந்த மடையை அடைத்துவிட்டு வா’ என்று சொல்லி அனுப்பினார். நீண்ட நேரம் ஆகியும் அவன் திரும்ப வரவில்லை. குரு மற்ற மாணாக்கர்களைப் பார்த்து, ` ஏன் அவன் இன்னும் வரவில்லை?’ என்று கேட்டார். அவர்களுக்கும் அவன் வராதது அதிசயமாக இருந்தது. பிறகு அவன் போன இடத்திற்கே நாம் எல்லோரும் போய்ப் பார்க்கலாம் என்று குரு சொல்ல, அவர்களும் அப்படியே புறப்பட்டார்கள்.

 வயற்காட்டிலே அவனைக் காணாமல் கவலையோடு, ` ஓ ஆருணியே! எங்கே இருக்கிறாய் ? குழந்தாய் எங்கே போய்விட்டாய் என்று  குரு கூவினார். உடனே ` இதோ இருக்கிறேன் ‘ என்று கழனி மடையிலிருந்து பதில் வந்தது. குருவுக்கும் மற்ற சிஷ்யர்களுக்கும் ஆச்சரியம் அதிகப்பட்டது. அதே சமயத்தில் உடம்பெல்லாம் சேறும் தண்ணீருமாகச் சிஷ்யன் ஓடி வந்து குருவின் அடிகளில் வணங்கி நின்றான் குரு சிரித்துக்கொண்டே, ` ஏன் இப்படிச் செய்தாய் ‘ என்று கேட்டார். அப்போது சிஷ்யன் பதில் சொன்னான், ` அந்த மடையிலே வெளியில் போகும் தண்ணீரை அடைக்க முயன்றேன். முடியாததால் மடையிலேயே படுத்திருந்தேன். தேவரீர் சப்தம் கொடுத்ததைக் கேட்டதும் மடையைப் பிளந்து கொண்டு வந்தேன் ! இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்? கட்டளையிட்டதும் செய்வேன்.

 குரு கண்ணீர் பெருக ` சிஷ்ய ரத்தினமே, நீ சகல பாக்கியங்களையும் பெரும் புகழையும் அடைவாய். பரீட்சையில் தேறிவிட்டாய் ‘ என்று அனுக்கிரகம் செய்தார். அவனிடம் விஷேஷ அபிமானம் கொண்டு வேத ரகஸ்யங்களையும் தரும சாஸ்திரங்களின் ஸாரமான கொள்கைகளையும் உபதேசம் செய்யத் தொடங்கினார்.

மற்றொரு சிஷ்யனான உபமன்யுவைப் பார்த்து  உபாத்தியாயர் ` குழந்தாய், நம் வீட்டு பசு மாடுகளை மேய்த்து வா ‘’ என்று அனுப்பினார். அவன் பகலில் காடுகளிலே மாடுகளை மேய்த்துவிட்டு சாயங்காலத்தில் குருவின் வீட்டுக்குத் திரும்புவான்.

 ஒரு நாள் திரும்பி வந்து நமஸ்கரித்ததும் ஆசிரியர், ` பையா,  மிகவும் புஷ்டியாகயிருக்கிறாயே! எப்படி ஜீவனம் செய்கிறாய் ‘ என்று கேட்டார்.` ஐயா பிச்சையெடுத்து சாப்பிடுகிறேன் ‘ என்று பதில் சொன்னான். உபாத்தியாயர்  ` நீ டுத்து வரும் பிச்சையை இனி என்னிடம் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் ‘ என்று கட்டளையிட்டார். பிறகு அவன் கொண்டு வரும் பிச்சை முழுவதையும் தாம் வாங்கிக்கொண்டு அவனைப் பசியோடு அனுப்பிவிடுவார். அவனோ கொஞ்சமும் பதில் சொல்லாமல் மாடு மேய்த்து வந்தான்.

                                                                                (தொடரும்)