ரம்ஜான் மாதத்தில் ``பேஸ்புக்’’ பார்ப்பது 5.8 கோடி மணி நேரம் அதிகரிப்பு

பதிவு செய்த நாள் : 28 மே 2019 15:33

துபாய்,

மத்தியக் கிழக்கு நாடுகளில், ரம்ஜான் மாத நோன்புக் காலத்தில், முஸ்லிம் மக்கள் `பேஸ்புக்’ பார்ப்பது 5.8 கோடி மணி நேரம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அழகுக் குறிப்புகள் முதல் விளையாட்டுச் செய்திகள், டி.வி. தொடர்கள் வரை எல்லாவற்றையும் `யூ டியூப்’ வீடியோக்களில் பார்ப்பதும் பெருகியிருக்கிறது.

வருடத்தின் மற்ற மாதங்களை விட ரம்ஜான் மாதத்தில்தான் இதெல்லாம் அதிகமாக இருப்பதால், விளம்பரதாரர்களுக்கு இந்த மாதமே ஆண்டின் `பிரைம் டைம்’ ஆக மாறியிருக்கிறது.

இதனால், இன்ஸ்டாகிராமின் உரிமையாளரான `பேஸ்புக்’ நிறுவனம், `யூ டியூப்’-ன் உரிமையாளரான கூகிள் நிறுவனம் ஆகியவற்றின் வர்த்தகம்   மத்தியக் கிழக்கு நாடுகளில் பெரிதும் வளர்ந்திருக்கிறது.

ரம்ஜான் மாதத்தில், முஸ்லிம் மக்கள் இரவில் தூங்கச் செல்லாமல் அதிக நேரம் விழித்திருக்கிறார்கள். பகல் முழுக்க உண்ணா நோன்பு இருந்து மாலையில் நோன்பு துறந்து எடுத்துக் கொள்ளும் இப்தார் உணவுக்கு முன்பும், அதிகாலையில் உண்ணா நோன்பு தொடங்கும் முன் எடுத்துக் கொள்ளும் சஹர் உணவுக்கு முன்பும் அவர்களுக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கிறது. மேலும் ரம்ஜான் மாதத்தில் பலரும் குறைந்த நேரமே வேலை செய்கிறார்கள்.

பேஸ்புக்

இவற்றின் காரணமாக,  மத்திய கிழக்கு நாடுகளில் ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் மக்கள் பேஸ்புக் தளங்களில் 5 சதவீத நேரம், அதாவது 5.8 கோடி மணி நேரம் அதிகமாக செலவிடுகிறார்கள். வேறு வகையில் சொன்னால், ஏறக்குறைய 20 லட்சம் மணி நேரம் தினசரி கூடுதலாக பேஸ்புக்கில் செலவிடுகிறார்கள் என மத்திய கிழக்கு நாடுகளுக்கான பேஸ்புக் நிறுவன மேலாண்மை இயக்குநர் ரமீஸ் ஷெகாதி தெரிவித்தார்.

யூ டியூப்

இதே போல, யூ டியூப்-ல் டி.வி. தொடர்கள், நாடகங்கள், சினிமாக்கள் பார்ப்பது 151 சதவீதம் அதிகரித்திருப்பதாக, மத்திய கிழக்குப் பகுதிக்கான கூகிள் நிறுவனத்தின் தகவல் தொடர்பு தலைவர் ஜாய்ஸ் பாஸ் கூறினார். மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை யூ டியூப்-ல் பார்ப்பதற்கு 27 சதவீத நேரம் அதிகமாக செலவிடுகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

ரம்ஜான் மாதத்தில் எகிப்து, சவுதி அரேபியா, எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் யூ டியூப்-ல் விளையாட்டு வீடியோக்களை பார்ப்பது 22 சதவீதமும், பயண வீடியோக்கள் பார்ப்பது 30 சதவீதமும், வீடியோ கேம்ஸ் பார்ப்பது 10-20 சதவீதமும் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

கூகிள்

எகிப்து, ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் கேம் ஆப் த்ரோன்ஸ், தொழுகை நேரங்கள், ரம்ஜான் டிவி ஷோக்கள், சினிமா திரையிடும் நேரங்கள், இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டி முடிவுகள் பற்றிய தேடல்கள்தான் ரம்ஜான் முதல் வாரத்தில் கூகிள் தேடலில் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ரம்ஜான் மாதத்தில், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கும், ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், குடும்பத்தினரை விசாரிப்பதற்கும் பேஸ்புக்கை பயன்படுத்துவதாக துபாயில் வசிக்கும் ஜோர்டான் நாட்டுக்காரரான ஹைதம்  குறிப்பிடுகிறார்.

மத்திய கிழக்கு நாடுகள்

பஹ்ரைன், சைப்ரஸ், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், பாலஸ்தீனம், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, துருக்கி, எமிரேட்ஸ், ஏமன் ஆகிய நாடுகள் மத்திய கிழக்கு நாடுகள் என அழைக்கப்படுகின்றன.