![]() | ![]() | ![]() |
திரை உலகில் வந்த திருப்ப காட்சி !
இலையுதிர் காலத்தில் விழும் தழைகளைப்போல், கடந்துபோன காலங்களின் நினைவுகளும் அழகானவை, இனிமையானவை. சினிமாக்காரர்களும் இப்படிக் கடந்த காலத்தை நினைத்து அதில் லயிக்கும் போது, அவர்கள் பார்த்து ரசித்த திரைப்ப டங்களை மீண்டும் படமாக்குவதுண்டு.
நாற்பதுகளில் புராண காலம் ஒருவிதமாகக் கடந்து சென்ற பின்பு, இந்த முறையில் கடந்தகால படத்தின் இன்னொரு பதிப்பாக முதலில் வெளிவந்த படம், ‘ராஜாம்பாள்’ (1951).
பிரபல துப்பறியும் நாவலாசிரியர் ஜே.ஆர். ரங்கராஜூ ‘ராஜாம்பாள்’ என்ற தலைப்புடன் எழுதிய நாவலை அடிப்படையாகக்கொண்டிருந்தது இந்தப் படம். தமிழில் 1935ல் எடுக்கப்பட்ட சமூகப்படமான ராஜாம்பாளின் அடுத்த அவதாரமாக இது அமைந்தது.
ஐம்பதுகளின் தொடக்கத்தில், ஒளிப்பதிவாளர் ஆர்.எம்.கிருஷ்ணசாமியும் ஒலிப்பதிவாளர் எம். ராதாகிருஷ்ணனும் வி.சி.சுப்பராமன் என்பவருடன் இணைந்து அருணா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய போது, ஏற்கனவே திரைப்படமாக எடுக்கப்பட்ட ‘ராஜாம்பாள்’ கதையைத் மீண்டும் எடுக்க முடிவு செய்தார்கள். அவர்கள் எடுத்த ‘ராஜாம்பா’ளின் கதாநாயகனாக அறிமுகமானவர்,
ஆர். எஸ். மனோகர். இவர் பின்னாளில் பிரபல வில்லனாக பரிணமித்தார். இரண்டாவது ‘ராஜாம்பா’ளின் வெற்றி, அருணா பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து சில படங்களை எடுக்க வழிவகுத்தது.
இந்த முறையில் அருணா பிலிம்ஸ் எடுத்த அடுத்த வெற்றி படம், ‘தூக்குத் தூக்கி’ (1954). தலைமை வேடத்தில் நடித்த சிவாஜி கணேசனுக்கு டி.எம்.சவுந்தரராஜன் பல பாடல்கள் பாடி, வெற்றிகரமாக பின்னணிக் குரல் கொடுத்த முதல் படம் இது.
‘தூக்குத் தூக்கி’ படக்கதையை அருணா பிலிம்ஸ் ஆர்.எம்.கிருஷ்ணசாமி ஏன் தேர்ந்தெடுத்தார்? அவருடைய பழைய நினைவுகள்தான் காரணம். அவர் பழம்பெரும் இயக்குநர் ஆர்.பிரகாஷிடம் பணியாற்றியவர். பிரகாஷ் கேமரா வேலை செய்து இயக்கி வெற்றியடைந்த படம், 1935ல் வந்தது ‘தூக்குத் தூக்கி’. காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் செய்து இந்தப் படத்தை எடுத்தால் அது வெற்றியடையும் என்று ஆர்.எம்.கிருஷ்ணசாமி நினைத்தார். பழைய ‘தூக்குத் தூக்கி’யின் நாயகன் மூன்று நாயகிகளை மணந்துகொள்கிறான். மூன்று பெண்களிடம் மாட்டிக்கொண்டு விழிக்கிறான் என்று நகைச்சுவைப் பாணியில் காட்டி படத்தை முடித்திருந்தார்கள். இதை மாற்றி, நாயகன் ஒரே நாயகியை மணப்பதுபோல் சிவாஜி கணேசன் நடித்த ‘தூக்குத் தூக்கி’ நிறைவடைந்தது. இந்த வெற்றிப்படத்தின் கதை, வசனத்தை ஏ.டி.கிருஷ்ணசாமி எழுதியிருந்தார்.
![]() | ![]() |
இந்த ‘தூக்குத் தூக்கி’ வெற்றி வாகை சூடிக்கொண்டிருக்கும் போதுதான், ‘கூண்டுக்கிளி’ எடுத்துவிட்டு அதன் தோல்வியால் துவண்டு போயிருந்தார் டி.ஆர்.ராமண்ணா. அவரும் அருணா பிலிம்சார் கடைப்பிடித்த பார்முலாவை பயன்படுத்தி வெற்றியடைய நினைத்தார். இந்த வகையில் பழைய காலத்து வெற்றிப் படங்களில் வரிசையை அவர் புரட்டிப்பார்த்து, ‘குலேபகாவலி’ எடுக்க முடிவு செய்தார். அந்தக்கால ஜோடியான வி.ஏ.செல்லப்பா, டி.பி. ராஜலட்சுமி நடித்த ‘குலேபகாவலி’ (1935) திரைப்படத்தின் அடிச்சுவட்டில் எம்.ஜி.ஆர்., டி.ஆர். ராஜகுமாரியை வைத்து புதிய ‘குலேபகாவலி’ எடுத்தார். வெற்றி மலர்வதைக் கண்டார். பழைய சரக்கைப் புதிய கோப்பையில் ஊற்றித்தந்து ஒரு புதிய தொடக்கத்தை ராமண்ணா கண்டார். கதை சுருக்கமானது, படம் நீளமானது, அளவை வெட்டியிருந்தால்
அழகைக்கூட்டியிருக்கலாம் என்ற விமர்சனம் வந்தாலும், அடைந்த வெற்றி சுவையானது என்று ராமண்ணா முன்னேறினார்.
ஒரு பக்கம் ‘பராசக்தி’ வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்து, அரசியல் மேடையின் பிரசார வசனங்கள், திரைப்பட முற்றத்தில் பட்டாசுகள் போல் வெடித்துக் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம், பழைய திரைப்படங்களின் புதிய பதிப்புகளைத் தயாரித்து வெற்றி அடையும் தந்திரத்தைத் திரைப்பட தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக்கொண்டே இருந்தார்கள்.
எல்.வி.பிரசாத் இயக்கத்தில் சிவாஜி தலைமை வேடத்தில் நடிக்க, மு.கருணாநிதி வசனம் எழுதிய ‘மனோகரா’ (1954), பழசை புதிய தாக்கும் இந்தப் போக்கில் ஈடுபட்டு மிகப்பெரிய வெற்றியை அடையலாம் என்று மீண்டும் நிரூபித்திருந்தது.
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய ‘மனோகரா’ நாடகத்தை மேடையில் நடிக்காதவர்கள் இல்லை என்று கூறும் அளவுக்கு பல்லாயிர மேடைகள் கண்ட பிரபல நாடகம் அது. ஆனால், தமிழ் பேசும்பட அத்தியாயத்தின் முதல் பாகத்தில், பம்மல் முதலியாரே மனோகராவின் முதல் திரை அவதாரத்தில் நடித்து, படம் மண்ணைக் கவ்வியிருந்தது (1936).
ஆனால் பிரசாத்தின் திறமையான இயக்கம், மனோகரன் என்ற பொருத்தமான வேடத்தில் சிவாஜியின் நடிப்பு, மு.கருணாநிதியின் காட்டமான வசனம் ஆகியவற்றுடன் வெளிவந்த ஐம்பதுகளின் ‘மனோகரா’ நல்ல வரவேற்பை பெற்றது.
‘மனோகரா’, ‘தூக்குத் தூக்கி’, ‘குலேபகாவலி’ முதலிய படங்களின் வெற்றியால் ஐம்பதுகளில் திரைப்படத்துறையில் இயங்கிக்கொண்டிருந்தவர்கள், மறுபதிப்புப் படங்களில் கூடுதல் ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள்.
அருணா பிலிம்சிலிருந்து பிரிந்து சென்ற வி.சி.சுப்பராமன், தன்னுடைய புதிய ஸ்தாபனமான கஸ்தூரி பிலிம்ஸ் சார்பில் ‘மேனகா’ (1955) என்ற படம் எடுத்தார். அவர் கையாண்டதும் பழைய திரைக்கதை யைப் புதிய படம் ஆக்கும் உத்தியைத்தான்.
ஆனால், தமிழ் திரைப்பட
வரலாற்றில் வந்த முதல் சமூகப்படம் என்று கூறப்ப டுகிற ‘மேனகா’வின் கதையை அவர் புதிய திரைப்பதிப்பாகக் கொண்டுவந்த போது அது எடுபடவில்லை.
முதல் ‘மேனகா’ (1935), தமிழ் சினிமாவில் பாரதிப் பாடலைப் பயன்படுத்திய முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது. டி.கே. சண்முகம், என்.எஸ்.கிருஷ்ணன் முதலிய கலைஞர்களை அறிமுகப்படுத்தியது.
முன்னோடி இயக்குநரான ராஜா சாண்டோ இயக்கிய (இரண்டாவது) தமிழ்ப் படமாக அமைந்தது. இதுபோன்ற எந்தப் பெருமையும் இரண்டாவது ‘மேனகா’விற்கு கிடைக்க வில்லை. சினிமாக்காரர்கள் பிரதானமாக நினைக்கும் வசூலையும் அது குவிக்கவில்லை. துள்ளி எழுந்த பிறகு துவண்டு விழும் நீளமான படம் என்று புதிய ‘மேனகா’வை ஒரு வார இதழ் விமர்சித்தது.
ஆனால், பழைய சோற்றை நம்பி ஏமாந்தோமே என்று சுப்பராமன் தளர்ந்துவிடவில்லை. நாடக உலகில் வலம் வந்தபின் திரையிலும் ஒரு முறை வெளிவந்திருந்த ‘சதாரம்’ (1933) கதையைத் தன்னுடைய அடுத்த தயாரிப்பிற்காக அவர் தேர்ந்தெடுத்தார். பானுமதிதான் சதாரம். ஜெமினி கணேசன் அவருக்கு ஜோடி. தன்னுடைய ‘சதாரம்’ (1956) படத்திற்கு ஜி.ராமநாதனை இசையமைப்பாளராக வி.சி.சுப்பராமன் நியமித்தார். தன்மேல் வைக்கப்பட்ட நம்பிக்கையை ராமநாதன் பொய்யாக்கவில்லை.
‘நினைந்து நினைந்து நெஞ்சும் உருகுதே’ (டி.எம்.சவுந்தரராஜன்), ‘புதுமையை என்ன சொல்வே’ன் (டி.எம்.எஸ்), ‘பொங்கி வரும் புது நிலவே’ (டி.எம்.எஸ், பானுமதி) என்று மனதைக் கவரும் பாடல்களைத் தந்தார் ராமநாதன். ஆனால் படம் மக்களைக் கவரவில்லை.
இயற்கையாகவே திரைத்துறை
யினருக்குப் புதியவர்களையும் புதிய போக்குகளையும் கண்டால் ஒரு
அச்சம் இருக்கும். முதலுக்கு மோசம் வந்துவிடுமோ என்ற பயம்தான் அந்த அச்சத்திற்கு அடிப்படை. அதனால் அரைத்தமாவை இடைவிடாமல் அரைத்துக் கொண்டிருப்பது அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. திரைத்துறையைக் கனவுத் தொழிற்சாலை என்று கூறுவதும் உண்டு. அதைப் போலவே பழைய மாவை அரைத்துக் கொண்டே இருப்பதால், அதை ஒரு ‘அரவை நிலையம்’ என்று கூறுவதும் பொருந்தும். சிலர் அதை ‘அறுவை நிலையம்’ என்று கூறுவது இந்தக் காரணத்தினால்தான்.
வி.ஏ.செல்லப்பாவும் டி.பி.ராஜலட்மியும் நடித்த ‘மதுரை வீரன்’(1939), நாட்டுப்புற இசை மணத்துடன் நிரம்பியிருந்த பாடல்களின் வாயிலாக மகத்தான் வெற்றியடைந்தது.
தெருக்கூத்துக்களிலும் மிகவும் பிரபலமான ‘மதுரை வீரன்’ கதையை லேனா செட்டியாரின் கிருஷ்ணா பிக்சர்ஸ், எம்.ஜி.ஆர், பானுமதி, பத்மினி என்ற நட்சத்திர வரிசையுடன் திரைக்கு மீண்டும் கொண்டு வந்தது. ஜி. ராமநாதனின் இசையில் ‘நாடகமெல்லாம் கண்டே’ன், ‘அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி’, ‘ஆடல் காணீரோ’, ‘வாங்க மச்சான் வாங்க’ முதலிய பாடல்கள் வெற்றியடைந்தன.
நடிப்புக் கலையிலே முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் முயற்சியும் எனக்குக் குறைவு என்று எம்.ஜி.ஆரே தன்னைப் பற்றிக் கூறுவது போல் ‘மதுரை வீர’னில் எம்.ஜி.ஆரின் நடிப்பைக் குறித்து ஒரு பத்திரிகை விமர்சனம் எழுதியது.
ஆனால் ‘மதுரை வீர’ன் வெளியிடப்பட்ட 36 திரை அரங்கங்களிலும் நூறு நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது! பொருத்தமான முறையிலும் சரியான நடிகர்களுடனும் பழைய கதையை வழங்கினால் புதிய சரித்திரம் படைக்க முடியும் என்று நிரூபித்தது எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’.
தியாகராஜ பாகவதருக்கு வெற்றிப்படமாக அமைந்த ‘அம்பிகாபதி’ (1937), அதே பெயரில் இருபது வருடங்களுக்குப் பிறகு வந்தது. சிவாஜி தலைமை வேடம் ஏற்றார். பானுமதி அமராவதியாக நடித்தார். முதல் அம்பிகாபதிக்குக் கிடைத்த ஜெயம், இரண்டாம் அம்பிகாபதிக்குக் கிடைக்கவில்லை.
‘சிந்தனை செய் மனமே’, ‘வடிவேலும் மயிலும் துணை’, ‘மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு’, ‘வாடா மலரே தமிழ்த்தேனே’ போன்ற பாடல்களின் ரீங்காரம் இன்றும் கேட்கிறது. ஆனால் பாடல்களின் வெற்றி, ‘அம்பிகாபதி’ திரைப்படத்தைக் காப்பாற்றவில்லை.
இதே போலத்தான் சின்னப்பாவின் அபாரமான வெற்றிப்படமான ‘ஆர்யமாலா’ திரைப்படம், 1957ல் ‘காத்தவராயன்’ ஆனபோது அது எடுபடாமல் போனது. ஆனால் பி.யு.
சின்னப்பா 1940ல் இரண்டு
வேடங்களில் நடித்த ‘உத்தமபுத்திரன்’, சிவாஜியின் தேர்ந்த நடிப்பில் 1958ல் வந்தபோது இன்னும் கூட பொலிவுபெற்றது. ‘முல்லை மலர் மேலே’, ‘யாரடி நீ மோகினி’, ‘அன்பே அமுதே அருங்கனியே’,
காத்திருப்பான் கமலக்கண்ணன் என்று ராமநாதன் அளித்த சிங்காரமான பாடல்கள், இரண்டாம் ‘உத்தமபுத்திர’னை உயரத்தில் நிலைநிறுத்த உதவின.
கடந்த காலத்தை மறக்காமல் அதன் முன்னுதாரணங்களை மதித்து செயல்படுவது நல்லதுதான். ஆனால் புதிய உத்வேகத்துடனும், புதிய தெம்புடனும் செயல்படவேண்டும்.
புதிய முயற்சிகளை, புதிய திசைகளைக் காணும்படி முன்னெடுத்
துச் செல்லவேண்டும். அப்படிச்
செய்தால் வெற்றிக்கான வாய்ப்புகள் கூடும்.
(தொடரும்)