நடிகர்கள் : விமல், பரணி, நிஷாந்த், கவுரவ் நாராயணன், சிதம்பரம் செட்டியார் (கமலா தியேட்டர் உரிமையாளர்), அஞ்சலி மற்றும் பலர். இசை : சுந்தர் சி. பாபு, ஒளிப்பதிவு : விஜய் உலகநாத், எடிட்டிங் : டி.எஸ். சுரேஷ், தயாரிப்பு : கிளவுட் நைன் மூவீஸ் (தயாநிதி அழகிரி), திரைக்கதை, இயக்கம் : கவுரவ் நாராயணன்.
துாங்காநகரமான மதுரையில் நடக்கும் சம்பவங்களே கதை. கண்ணன் (விமல்), அய்யாவு (பரணி), ராஜாமணி (கவுரவ் நாராயணன்) மற்றும் மாரியப்பன் (நிஷாந்த்) நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார்கள். வீடியோகிராபரான கண்ணன் கல்யாணம் மற்றும் விசேஷங்களுக்கு கவரேஜ் செய்கிறார். தனது சிறுவயது தோழியான ராதாவை (அஞ்சலி) சந்திக்கிறார். லோக்கல் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருக்கும் ராதாவும் கண்ணனும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். தவறான நோக்கத்தோடு வீடியோவை வைத்து ஒரு பெண்ணை மிரட்டும் இளைஞனை கண்ணன் அடித்து துவைக்கிறார். இந்த சம்பவத்தால் நண்பர்களின் வாழ்க்கை திசைமாறுகிறது. காயம்பட்ட இளைஞனின் தந்தையான சக்திவாய்ந்த பெரிய மனிதர் (சிதம்பரம் செட்டியார்) மகனுக்காக பழிவாங்க துடிக்கிறார். தப்பிக்க நினைக்கும் நண்பர்கள் ஒளிந்து வாழ்கிறார்கள்.
கண்ணனுக்கும் ராதாவுக்கும் இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். திருமணத்திற்கு வரும் நண்பர்கள் கண்ணனை கொல்ல முயற்சிக்கி றார்கள். அதனால் ஏற்படும் விபத்துக்களால் திருமண வீட்டில் கவலை ஏற்படுகிறது. பெரிய மனிதரால் மிரட்டப்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கண்ணனை கொல்ல நினைப்பதைப் பற்றி பேசுகிறார்கள். இருள் சூழ்ந்த ஒரு மழை இரவில் நன்பர்கள் ஒரு பிணத்தை எரிக்கிறார்கள். பின்னணியில் கதையின் திருப்பமாக, நண்பர்கள் கண்ணனிடம் உண்மையை கூற, அனைவரும் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். அதன்படி, நண்பர்கள் அப்பெரியவரின் மகனை எரித்து அழிக்க, அவரது வீட்டுக்குள் ரகசியமாக நுழைந்து அவரை கொன்று தங்களை சூழ்ந்து இருந்த ஆபத்தை போக்குகிறான் கண்ணன். அடுத்தநாள் காலை திட்டமிட்டபடி கண்ணனுக்கும் ராதாவுக்கும் திருமணம் நடக்க அனைவரும் நிம்மதியுடன் மகிழ்கிறார்கள்.