கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 180

பதிவு செய்த நாள் : 20 மே 2019

தாயில்லாமல் நானில்லை!

நவீன காலத்­தில் ஒவ்­வொன்­றுக்­கும் ஒரு நாள்.  அந்த வகை­யில் தாய்­மார்­க­ளுக்­கும் ஒரு நாள், ‘மதர்ஸ் டே.’ அது அண்­மை­யில் மே 12 அன்று வந்­தது.

முன்­னூறு நாட்­கள் சுமந்­த­வ­ளுக்கு ஒரு நாளா? நீ மூச்சு விடத் தொடங்­கும் முன்­பி­ருந்து அவள் மூச்­சு­வி­டு­வதை நிறுத்­தும் வரை­யில் உன்­னையே நினைத்­த­வ­ளுக்கு ஒரே ஒரு நாளா என்று வச­னம் பேச­லாம். ஆனால் பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்று ஒரு சொல் வழி­வ­ழி­யாக வந்­துள்­ளது. ஈன்­ற­வளை  நினைக்க மறந்­த­வர்­க­ளுக்கு சென்ற மதர்ஸ் டே ஒரு வாய்ப்பு. அன்று மட்­டும்­தான் நினைக்­க­வேண்­டும் என்­றில்லை. அடுத்த நாளும் அதற்­க­டுத்த நாளும் என்று நினைத்­துக் கொண்­டே­யி­ருக்­க­லாம்.

உல­கத்­தில் சிறந்­தது எது என்று தொடங்­கு­கி­றது  ‘பட்­ட­ணத்­தில் பூதம்’  என்ற படத்­தில் வரும் ஒரு திரைப்­பா­டல். நல்ல பட்­டி­மண்­ட­பத் தலைப்பை பாட­லின் பல்­ல­வி­யாக்­கி­னார் கண்­ண­தா­சன்.

‘‘ஆளுக்கு ஆளு தரு­வ­துண்டு, அச­லுக்கு மேலும் வளர்­வ­துண்டு, நாட்­டுக்கு நாடு பெறு­வ­துண்டு, நல்ல நல்ல திட்­டங்­க­ளும் வரு­வ­துண்டு’’ என்­றெல்­லாம் வட்­டி­யின் முக்­கி­யத்­து­வத்தை அடுக்கி, வட்­டி­தான் உல­கத்­தில் சிறந்­தது என்று முத­லில் முன்­வைத்­தார் கண்­ண­தா­சன். ஒரு காலத்­தில் வட்­டிக்­கொ­டுப்­ப­தையே தொழி­லா­கக் கொண்­டி­ருந்த சமூ­கத்­தில் பிறந்­தா­லும், வட்­டிக்­குப் பணம் வாங்­க­மட்­டும் அறிந்­தி­ருந்­த­வர் கண்­ண­தா­சன்.

தொழில்­கள் பெரு­கி­னால்­தான் மக்­கள் வள­மு­டன் வாழ முடி­யும். தொழில்­கள் பெருக, முதல் வேண்­டும். அந்த முதல் கிடைக்­க­வேண்­டும் என்­றால் அதைக் கொடுப்­ப­வர்­கள் வேண்­டும். அப்­ப­டிக்­கொ­டுப்­ப­தில் ஏதா­வது பயன் இருக்­க­வேண்­டும். அந்­தப் பயனை நல்­கு­வ­து­தான் வட்டி. கந்து வட்டி போன்ற அநி­யாய வட்­டி­தான் கெடு­தலே தவிர, ஏனைய வட்­டி­கள் அவ­சி­ய­மா­னவை என்­ப­து­தான் இன்­றைய பொரு­ளா­தார உண்மை.

ஆனால் வட்டி,  வியா­பா­ரம், லாபம் என்­ப­தை­யெல்­லாம் தாண்டி, மனி­தனை உந்­து­கிற உணர்ச்­சி­கள் உண்டு. அவற்­றில் முக்­கி­ய­மா­னது, காதல். இந்த  உணர்ச்­சி­யின் வேகத்தை, ஆழத்தை, ‘காதல் காதல் காதல், காதல் போயின், காதல் போயின், சாதல் சாதல் சாதல்’ என்று குறிப்­பிட்­டார் பார­தி­யார்.  

இந்­தக் காதல் எத்­தனை வலி­மை­யா­னது என்று கூறும் ஒரு திரைப்­பாட்டு,

‘‘தாய் தடுத்­தால் கேட்­ப­தில்லை  ஒரே ஒரு பாட்டு, பெற்ற தந்­தை­யை­யும் மதிப்­ப­தில்லை  ஒரே ஒரு பாட்டு’’ என்று காதல் பாட்டை வர்­ணித்­தது. இத்­த­னைக்­கும் இந்­தப் பாடல் இடம்­பெற்ற படத்­தின் தலைப்பு, ‘தாய் சொல்­லைத் தட்­டாதே!’

இந்­தக் காத­லுக்­கும் ஒரு நாள் இருக்­கி­றது. ‘வாலென்­டைன்ஸ் டே.’ அது ஒரு திரு­நாளா? அது ஒரு வெறு­நாள் என்று கூறு­ப­வர்­க­ளின் அணி­யும் இருக்­கி­றது!  எப்­ப­டி­யும் காதல் என்­ப­தும் ஒரு மிகப்­பெ­ரிய சக்­தி­தான் – அது வெறும் உரு­வக்­கா­த­லா­க­வும் பரு­வக்­கா­த­லா­க­வும் இல்­லா­மல், நல்ல பண்­பு­க­ளின் அடிப்­ப­டை­யில் அமை­யும் காத­லாக இருந்­தால்.

‘உல­கத்­தில் சிறந்த எது?’ பாடல், இந்­தக் கேள்­விக்­கான  மிகச் சிறப்­பான பதி­லா­க­வும் இந்­தப் பல்­லவி இட்­டுச் செல்­லும் கோபுர கருத்­தா­க­வும் தாய்­மையை முன்­வைக்­கி­றது. அதற்­கான கார­ணங்­க­ளைப் பாட­லில் கண்­ண­தா­சன் அடுக்­கு­கி­றார்.

‘‘உள்ளே உயிர் வளர்த்து, உதி­ரத்­தால் பால் கொடுத்து

அள்­ளி­யி­டும் போதெல்­லாம் அன்­பையே சேர்த்­தெ­டுத்து

தொல்லை தனக்­கென்­றும் சுகம் எல்­லாம் உனக்­கென்­றும்

சொல்­லா­மல் சொல்­லி­வி­டும் தேவ­தை­யின் கோயி­லது...’’

என்று தாய்­மைக்­கும், வாய்­மைக்­கும், உள்­ளத்­தூய்­மைக்­கும் உள்ள தொடர்பை அவர் விளக்­கு­கி­றார்.

அன்பு காட்­டு­வோ­ரி­டம் அன்பு காட்­டு­வது, பாசம் கொண்­டோ­ரி­டம் பதி­லுக்­குப் பரிவு காட்­டு­வது, இணக்­கம் கொள்­வோ­ரி­டம்  இனி­மை­யா­கப் பழ­கு­வது என்­ப­தெல்­லாம் சரி­தான்...நல்­ல­து­தான்.

ஆனால் ‘‘பண்பு தெரி­யாத மிரு­கம் பிறந்­தா­லும், பால் தரும் கரு­ணை­யாக, பசித்த முகம் பார்த்து, பத­றும் இனம் பார்த்து பழம் தரும் சோலை­யாக, இருக்­கும் பிடி­சோறு தனக்­கென்று எண்­ணா­மல் கொடுக்­கின்ற தெய்­வ­மாக’’,  தலை­யாய தெய்­வீ­க­மாக தாய்மை விளங்­கு­கி­றது. இதைத்­தான், ‘கொண்டு வந்­தா­லும் வரா­விட்­டா­லும் தாய்’ என்­றது, ‘தூக்­குத்­தூக்கி’ (1954) என்ற படத்­தின் இரண்­டா­வது வாச­கம்.

தமிழ் நாடக வர­லாற்­றி­லும் திரைப்­பட வரி­சை­யி­லும் முக்­கி­ய­மான இடம் பெற்­றது, பம்­மல் சம்­பந்த முத­லி­யார் எழு­திய  ‘மனோ­கரா’ நாட­கம்.  முத­லி­யாரே 1936ல் ‘மனோ­கரா’ படத்­தில் நடித்­தார். அவ­ருக்கு அப்­போது வய­தா­கி­விட்­டி­ருந்­த­தால், வேஷப்­பொ­ருத்­தம் இல்­லா­மல் போனது. ஆனால் 1954ல் சிவாஜி கணே­சன் நடித்த ‘மனோ­கரா’ அந்த ஆண்­டின் வெற்­றிப்­ப­ட­மா­கத் திகழ்ந்­தது. கதை­ய­மைப்­பின்­படி, மனோ­க­ர­னுக்­குத் தன் தாயார் மீது அள­வில்­லாத பாசம். ஆனால் ஒரு வேஷக்­கா­ரி­யின் வலை­யில் விழுந்து தன்­னை­யும் தன்­னாட்­டை­யும் சீர­ழி­வுக்கு இட்­டுச் செல்­லும் தந்தை மீது தீராத கோபம். ‘‘புரு­ஷோத்­த­மரே, புரட்­டுக்­கா­ரி­யின் உருட்­டும் விழி­யிலே உல­கத்­தைக் காண்­ப­வரே !  மானம் ஒன்றே நல்­வாழ்­வெ­னக்­கொண்டு வாழ்ந்த மற­வேந்­தர் பரம்­ப­ரைக்கு மாசாக வந்­த­வரே!  மயி­லுக்­கும் மந்­திக்­கும் வித்­தி­யா­சம் தெரி­யாத மதி­வா­ணரே!  குளிர் நில­வைக் கொள்­ளிக்­கட்­டை­யெ­னக் கூறிய குரு­டரே!  என் தாய், அன்­பின் பிறப்­பி­டம், அற­நெ­றி­யின் இருப்­பி­டம், கருணை வடி­வம், கற்­பின் திரு­வு­ரு­வம், மாசற்ற மாணிக்­கம், மாற்­றுக்­கு­றை­யாத தங்­கம், அவர்­களை அவ­தூறு கூறிய உமது அங்­கங்­க­ளைப் பிளந்­தெ­றி­ வேன்.....’’ என்று பொரிந்து தள்ளி, தந்­தை­யைக் குற்­ற­வா­ளிக்­

கூண்­டிலே வைக்­கி­றான்.

சில படங்­க­ளி­லும் சில­ரு­டைய வாழ்க்­கை­யி­லும் இந்த மனோ­கரா எபெக்ட் தூக்­க­லாக இருந்­து­வி­டு­வ­துண்டு. அம்மா தெய்­வம், அப்பா வில்­லன் என்­ப­து­போன்ற நிலை அமைந்­து­வி­டு­கி­றது. அப்பா மரி­யா­தைக்­கு­ரிய அப்­பா­வாக இல்­லா­மல், அம்­மாவை சமூ­கம் மதிக்­கும் வகை­யில் வைக்­கா­மல் போகும் போது,  இத்­த­கைய பிள்­ளை­க­ளின் சுய­க­வு­ர­வம் பாதிக்­கப்­ப­டு­கி­றது. ‘அக்னி நட்­சத்­தி­ரம்’ படத்­தில் கார்த்­திக் நடிக்­கும் கதா­பாத்­தி­ரத்­திற்கு இந்த நிலை­தான் நேர்­கி­றது.

அப்­பாக்­க­ளின் தப்­பான உற­வு­க­ளால் சமூ­கத்­தின் கோணப்­பார்வை அடுத்த தலை­முறை மீது விழும்­போது, அன்னை மீதான பாசம் தந்தை மீதான கோப­மாக பரி­ண­மித்­து­வி­டு­கி­றது. என்­ன­தான் அப்பா உதவி செய்­வ­தற்­குத் தயா­ராக இருந்­தும், ‘நீ என் பையன்­க­றதை சொல்­ல­வேண்­டாம்’ என்று கூறும்­போது, அப்­பா­வுக்கு அப்­பா­வுக்­கான மரி­யா­தையை எப்­ப­டிக் கொடுக்க முடி­யும்? இது­போன்ற ஒரு திரைக்­க­தைக்கு ஒரு புதிய டுவிஸ்ட் கொடுத்து எடுக்­கப்­பட்­ட­து­தான், ‘எம். கும­ரன், சன் ஆப் மகா­லட்­சுமி’. இந்­தப் படத்­தில், தன்னை தனி ஒருத்­தி­யாக வளர்த்து பெரி­ய­வ­னாக்­கிய தாய்க்கு, ‘நீயே நீயே நானே நீயே, நெஞ்­சில் வாழும் உயிர் தீயே’ என்ற பிறந்த நாள் வாழ்த்தை மகன் பாடு­கி­றான். அப்பா விஷ­யத்­தில், ‘நீ யார் நீ யார், நான் யார் நான் யார்’ என்­று­தான் பாட­வேண்டி வந்­தி­ருக்­கும்.

‘அன்­னை­யும் பிதா­வும் முன்­னறி தெய்­வம்’ என்று தமிழ் நீதி­நூல் கூறு­வ­தா­லும், ‘மாதா, பிதா, குரு, தெய்­வம்’ என்று வாய்­மொழி பேசு­வ­தா­லும், ‘மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ’ (தாயைத் தெய்­வ­மா­கக் கொள், தந்­தை­யைத் தெய்­வ­மா­கக்­கொள்) என்று வேதம் வகுப்­ப­தா­லும், எந்த வரி­சை­யி­லும் தாய்க்­குத்­தான் முத­லி­டம் என்று பொருள் கொள்­வது சரி­தான்.  

அதே நேரத்­தில், தாயும் தந்­தை­யும் தனித்­த­னி­யா­கக் கொள்­ளப்­ப­ட­வேண்­டி­ய­வர்­கள் அல்ல...மொழி­யின் வரி­சை­யில் ஒன்­றன்­பின் ஒன்­றைத்­தான் கூற­மு­டி­யும் என்­கி­ற­ப­டி­யால், தாய், தந்தை என்று கூறு­கி­றோமே தவிர, அவர்­கள் தனித்­த­னி­யா­ன­வர்­கள் அல்ல...பெற்­றோர் என்று இணைத்தே கரு­தப்­ப­ட­வேண்­டி­ய­வர்­கள்.  இந்த வகை­யில்­தான்,    சிவ-­­­­சக்தி வடி­வத்தை இணைத்­து  பார்த்து, அம்­மை­யப்­பன் என்று நம் நாட்­டில் வழி­பட்­ட­னர்.

‘அம்­மையே அப்பா, ஒப்­பிலா மணியே,  அன்­பி­னில் விளைந்த ஆர­முதே’ என்று ‘திரு­வா­ச­கம்’ இறை­வனை தாய்- – தந்தை வடி­வ­மா­கப் பார்க்­கி­றது.

‘தந்தை கோபித்­தால் தாய் இறங்­கு­வாள், தாய் சினந்­தால் தந்தை  அர­வ­ணைப்­பான், எனக்­குத் தாயும் தந்­தை­யும் நீ ஆத­லால் அடித்­த­து­போ­தும் அணைத்­தி­டல் வேண்­டும்’ என்று வள்­ள­லார் அம்­மை­யப்­ப­ரா­கிய சிவ­பெ­ரு­மா ­னைப் பிரார்த்­திக்­கி­றார்.

தெய்­வத்­தையே அம்மை - அப்­ப­னா­கப் பாவிப்­ப­தைப் போல, அன்னை தந்­தை­யைத் தெய்­வ­மா­கக் கொள்­ளும் சமய நெறி­யும், செறி­வான இந்­திய ஆன்­மிக மர­பு­க­ளில் உண்டு. இதைத்­தான் அமோக வெற்­றி­ய­டைந்த ‘ஹரி­தாஸ்’ படத்­தில் நாம் பார்க்­கி­றோம்.

‘புண்­ட­லீக சரி­தம்’ என்ற மகா­பக்த விஜய வர­லா­று­க­ளி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட இந்­தத் திரைக்­கதை, தாய் தந்­தை­ய­ரைத் தெய்­வ­மாக மதித்து சேவை செய்­கி­ற­வ­னின் வாச­லில் தெய்­வமே காத்­தி­ருக்­கி­றது என்று கூறு­கி­றது. இந்த நிலை­யைத்­தான், ‘அன்­னை­யும் தந்­தை­யும் தானே, பாரில் அண்ட சரா­ச­ரம், கண்­கண்ட தெய்­வம்’ என்ற தியா­க­ராஜ பாக­வ­த­ரின் திகட்­டாத பாடல் காட்­டு­கி­றது. ‘என்­னு­டல் தனில் ஈ மொய்த்த போது’ என்று தொடங்­கும் விருத்­தம், சேயின் பால் பெற்­றோ­ரின் வாஞ்­சையை எடுத்­துக்­கூ­று­கி­றது. ‘அம்­மை­யப்பா உங்­கள் அன்பை மறந்­தேன்’ என்று முன்­வைத்து, ‘தாயே தந்­தையே’ என்று பெற்­றோரை இணைத்தே பேசு­கி­றது இந்­தப் பாடல்.

தாய் செய்த மகத்­தான உத­வி­க­ளுக்கு நன்­றி­யைக் காட்ட முடி­யா­மல் போகும் போதும், தாய் மகனை விட்டு நிரந்­த­ர­மா­கப் பிரி­யும் போதும், துக்­கம் வெடித்­துக் கிளம்­பு­கி­றது. இந்த வகை­யில் தமிழ்த் திரைப்­பா­டல்­கள் நிறைய இருக்­கின்­றன. ‘அன்­னை­யின் ஆணை’­­­­யில் ‘அன்­னை­யைப் போல் ஒரு தெய்­வ­முண்டோ’, ‘தாயின் மடி­யில்’ படத்­தில் ‘தாயின் மடி­யில் தலை வைத்­தி­ருந்­தால்’, ‘என்னை விட்­டுப் போகாதே’ என்ற படத்­தில் ‘பொன்ன போல ஆத்தா’...என்று தாயை சோக­மாக எண்­ணும் பாடல்­கள் அதி­கம்.

ஆனால் எம்.ஜி.ஆர். பாடல்­க­ளில் பொது­வாக இந்த கண்­ணீர் மழை குறைவு. ‘ஜீவ நதி­யாய் வரு­வாள், என் தாகம் தீர்த்து மகிழ்­வாள்’ என்று கூறி, ‘அவள் தான் அன்னை மகா­சக்தி’ என்று அன்­னை­யின் சக்­தியை கொண்­டா­டும் பார்வை எம்.ஜி.ஆரு­டை­யது (‘தாயில்­லா­மல் நானில்லை’). ‘வெற்றி மீது வெற்றி வந்து என்­னைச் சேரும், அதை வாங்­கித்­தந்த  பெரு­மை­யெல்­லாம் உன்­னைச் சேரும்’ என்று தாயின் அன்பை, அருளை, பாசத்தை வெற்­றிக்­கான வாச­லாக எம்.ஜி.ஆர். பார்த்­தார்.  இதில் மிகப்­பெ­ரிய உள்­ளர்த்­தம் உள்­ளது. தன்­னு­டைய தாயை உண்­மை­யி­லேயே நேசிப்­ப­வ­னின் வாழ்க்கை சோடை போகாதே. குடி­ய­ர­சுத்­த­லை­வ­ராக வேண்­டும் என்­றில்லை. இத்­த­யை­க­வர் தன்­னு­டைய இடத்­திலே ஒரு வெற்­றி­யா­ள­ரா­கவே திகழ்­வார்.

தந்­தையை சிறு­வ­ய­தி­லேயே இழந்த ஜெய­ல­லிதா, அன்னை சந்­தியா கலை­யு­ல­கில் அமைத்­துத்­தந்த அஸ்­தி­வா­ரத்­தி­லே­தான் பிர­கா­சித்­தார். ‘அம்மா என்­றால் அன்பு’ என்று அவர் பாடி­ய­தும் இந்த முறை­யில்­தான். இப்­படி ஜெய­ல­லிதா பாடும் போது சந்­தி­யா­வும் உயி­ரோடு இருந்­தார்.

இளை­ய­ராஜா இசை­ய­மைத்­துப் பாடிய அம்மா பாடல்­க­ளில், ‘ஜனனி ஜனனி’ மிக­வும் பிர­ப­லம். இது உல­கத்­தா­யான மூகாம்­பி­கை­யைப் போற்­றும் மங்­க­ல­க­ர­மான பாடல்­தான்.  ‘நானாக நானில்லை தாயே, நல்­வாழ்வு தந்­தாயே நீயே’ (‘தூங்­காதே தம்பி தூங்­காதே’) என்ற பாட­லும் அன்னை இருக்­கும் போதே அவ­ளைக் கொண்­டா­டு­வ­தாக அமைந்­தது. அதே போன்­ற­து­தான், ‘நியூ’­­­­வில் வந்த, ‘காலை­யில் தின­மும் கண்­வி­ழித்­தால் நான் கைதொ­ழும் தேவதை அம்மா’. அன்னை இருக்­கும் போதே அவ­ளு­டன் அனு­ச­ர­ணை­யாக இருப்­ப­தைத்­தான் அது வலி­யு­றுத்­து­கி­றது. ‘ஹரி­தாஸ்’ படத்­தில் வரும் பெற்­றோர் குறித்த சேவை மனோ­பா­வம்­தான், மிகப்­பெ­ரிய வர­வேற்பை பெற்ற, ‘அம்மா என்­ற­ழைக்­காத உயிர்

இல்­லையே’ என்ற பாட­லும் முன்­வைக்­கி­றது.

அம்மா பாடல்­கள் வரி­சை­யில் எனக்­கும் ஒரு பாடல், ஒரே ஒரு பாடல், மிக­வும் பிடித்­த­மா­னது. அது­தான், ‘டீச்­ச­ரம்மா’ படத்­தில் வரும், ‘அம்மா என்­பது தமிழ் வார்த்தை, அது­தான் குழந்­தை­யின் முதல் வார்த்தை’.  அம்மா என்­பது, அம்மா இல்­லாத குழந்­தை­க­ளுக்­கும் ஆண்­ட­வன் வழங்­கும் அருள் வார்த்தை என்­கி­றது இந்­தப் பாடல். ஏனென்­றால், உல­கில் தன்­ன­ல­மற்ற அன்பு இருக்­கும் வரை அம்மா இருப்­பாள்.

(தொட­ரும்)