நாட்டின் முதல் தேர்தலில் வாக்களித்த 103 வயது முதியவர், 32-வது முறையாக வாக்களித்தார்

பதிவு செய்த நாள் : 19 மே 2019 15:56

கல்பா,

1951-ல் நடைபெற்ற நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் வாக்களித்தவர்களில் ஒருவரான 103 வயது முதியவர் சியாம் சரண் நேகி, 2019ஆம் ஆண்டு 32-வது முறையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிக் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் .

முதல் தேர்தலுக்குப் பின், 68 ஆண்டுகள் ஆன பிறகும் அவருக்கு உற்சாகம் குறையவில்லை.

இமாச்சலப் பிரதேச மாநிலம் கல்பா கிராமத்தில், நாட்டின் முதல் தேர்தலில் வாக்களித்த அதே வாக்குச் சாவடியிலேயே அவர் இப்போதும் வாக்களித்தார்.

அவரை வீட்டில் இருந்து ஆரம்பப் பள்ளியில் அமைந்திருந்த வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்கு அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். தேவைப்பட்டால் அவருக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக டாக்டர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

இதேபோல், இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் இமாச்சலப் பிரதேச மாநிலம் - 

குல்லு நகரில் 106 வயது நிரம்பிய சாம்ஷிர் சிங் என்ற தாத்தாவும்

குல்லு நகரில் 102 வயது நிரம்பிய துல்கி தேவி என்ற பாட்டியும்

உத்தரப்பிரதேச மாநிலம் - குஷி நகரில் 115 வயதுடைய மைனா தேவி என்ற பாட்டியும் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்துவிட்டு, பின்னர் தங்களது கை விரல்களில் வைக்கப்பட்ட வாக்களித்த அடையாளத்தை புகைப்படத்திற்காக காட்டினர்.