மு.க. ஸ்டாலின் முதல்வர் பதவி வெறி பிடித்து அலைகிறார் - அன்புமணி ராமதாஸ் பேட்டி

பதிவு செய்த நாள் : 19 மே 2019 15:43

தர்மபுரி,

முதலமைச்சர் பதவி வெறி பிடித்து அலைகிறார் மு.க. ஸ்டாலின் என அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி நடைபெற்றது.

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளராக டாக்டர் அன்புமணி போட்டியிட்டார்.

தி.மு.க. சார்பில் டாக்டர் செந்தில்குமார்,

அ.ம.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்,

மக்கள் நீதிமய்யம் சார்பில் ராஜசேகர்,

நாம் தமிழர்கட்சி சார்பில் ருக்மணி தேவி ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

மொத்தம் 15 வேட்பாளர்கள் தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர்.


பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கோவிந்தசாமி,

தி.மு.க. சார்பில் ஆ.மணி,

அ.ம.மு.க. சார்பில் டி.கே.ராஜேந்திரன்,

மக்கள் நீதிமய்யம் சார்பில் நல்லதம்பி,

நாம்தமிழர் கட்சி சார்பில் சதீஷ் ஆகியோர் உள்பட 11 பேர் போட்டியிட்டனர்.


தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் நத்தமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின் போது முறைகேடுகளும், அத்துமீறல்களும் நடைபெற்றதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் 8 வாக்குச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  டி. அய்யம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண் 181, 182 ஆகிய 2 வாக்குச்சாவடிகள், நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண் 192 ,193, 194, 195 ஆகிய 4 வாக்குச்சாவடிகள், 

ஜாலிப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண் 196, 197 ஆகிய வாக்குச்சாவடிகள் என மொத்தம் 8 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியது.

பொதுமக்கள் விறுவிறுப்புடன் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

அன்புமணி ராமதாஸ் ஆய்வு

தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் மறுவாக்குப்பதிவு மையங்களில் அன்புமணி ராமதாஸ் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் தொடரும். மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வருவார்.

முதலமைச்சர் பதவி வெறி பிடித்து அலைகிறார் ஸ்டாலின்; மறுவாக்குப்பதிவுக்கு திமுகவே காரணம் என்று அன்புமணி கூறினார்.