பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே குண்டுவெடிப்பு - ஒருவர் பலி

பதிவு செய்த நாள் : 19 மே 2019 13:11

பெங்களூரு,

பெங்களுரில் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டின் அருகே மர்ம குண்டுவெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

பெங்களூர் ராஜேஸ்வரி நகர் சட்டமன்ற தொகுதி வயாலிக்காவல் பகுதியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ முனிரத்னா நாயுடு வீட்டின் அருகே காலை 9:15 மணியளவில் மர்ம குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெங்கடேஷ் (45) என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசாயண பொருள் நிறைந்த கேன்களை குடோனிலிருந்து எடுத்துச்செலும் தினக்கூலியாக வெங்கடேஷ் வேலை செய்பவர் என்பது வெடிகுண்டு வெடித்த சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் தெரிந்தது.

குண்டுவெடித்த சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பெங்களூர் சிட்டி போலீஸ் கமிஷனர் டி. சுனில் குமார் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.