பத்ரிநாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

பதிவு செய்த நாள் : 19 மே 2019 12:54

பத்ரிநாத் (உத்தரகாண்ட்),

இமயமலைப் பகுதியில், கேதார்நாத் கோயில் அருகே உள்ள ஒரு புனிதக் குகையில், சனிக்கிழமை 15 மனித நேரம் அமர்ந்து தியானம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை பத்ரிநாத் சென்று அங்குள்ள கோயிலில் வழிபாடு செய்தார்.

பத்ரிநாத் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, துளிசி மாலை அணிந்தபடி பிரதமர் மோடி வெளியே வந்தார்.

2 நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலம் சென்றிருந்த மோடி, மாலையில் டெல்லி திரும்புகிறார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், கார்வால் இமயமலைத் தொடர் பகுதியில், 10 ஆயிரம் அடி உயரத்தில் பத்ரிநாத் கோயில் அமைந்துள்ளது.

கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை `4 புனிதத் தலங்கள்’ என பொருள்படும் வகையில் `சார் தாம்’ என அழைக்கப்படுகின்றன.

கேதார்நாத் கோயில், இமயமலைப் பகுதியில் 11 ஆயிரத்து 755 அடி உயரத்தில் மந்தாகினி நதி அருகே அமைந்திருக்கிறது.

15 மணி நேர தியானத்தை ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவு செய்த பிரதமர் மோடி, பின்னர் பக்தர்களுடன் கலந்துரையாடினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த மோடி, கேதார்நாத் கோயிலுக்கு பல தடவை வரும் அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார். கேதார்நாத்துடன் தனக்கு தனிப் பிணைப்பு இருப்பதாகக் கூறினார்.

கோயிலை வலம் வந்த மோடி, உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். அந்தப் பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

தேர்தல் ஆணையத்துக்கு மோடி நன்றி

`தேர்தல் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தீர்களா?’ என்று கேட்டதற்கு, ``பாபா கேதார்நாத்திடம் நான் எதுவும் கேட்கவில்லை. கேட்கும் நிலையில் வைக்காமல் கொடுக்கும் ஆற்றல் படைத்த தன்னிறைவு பெற்ற மனிதர்களாக கடவுள் எங்களை ஆக்கியிருக்கிறார்’’ என்று பிரதமர் மோடி பதில் அளித்தார்.

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது, கேதார்நாத் கோயிலுக்கு வருவதற்கு அனுமதி அளித்ததற்காக, தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அவருக்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையம், அதே வேளையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தது.

கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி கேதார்நாத் வருவது இது 4-வது முறை.