அதிகரித்து வரும் மதுப்பழக்கம்: தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை தேவை - ராமதாஸ் கவலை

பதிவு செய்த நாள் : 19 மே 2019 10:15

சென்னை,

இந்தியாவில் அதிகரித்து வரும் மதுப்பழக்கம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பவையாக உள்ளன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

இந்தியாவில் அதிகரித்து வரும் மதுப்பழக்கம் குறித்து லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பவையாக உள்ளன. இந்தியாவில் தேசிய அளவில் மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதையே புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

மருத்துவ உலகின் புனித இதழாகப் போற்றப்படும் லான்செட் இதழில் உலக அளவிலான மதுநுகர்வு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள டி.யூ. டிரெஸ்டன் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், இந்தியாவில் மதுநுகர்வு கடந்த 7 ஆண்டுகளில் 38 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2010-ஆம் ஆண்டில் இந்தியாவில் வயதுக்கு வந்தவர்களிடையே சராசரி தனிநபர் மதுநுகர்வு 4.30 லிட்டராக இருந்தது. 2017-ஆம் ஆண்டில் இது 5.90 லிட்டராக அதிகரித்திருக்கிறது. இந்தியர்கள் மது குடிக்கும் அளவு மட்டுமின்றி, குடிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தான் இதற்குக் காரணம் என்பதை உணர முடிகிறது.

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிலும் மதுவின் பயன்பாடு குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. ஐரோப்பாவிலும், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் மதுநுகர்வு மாறாமல் அதே அளவில் தான் நீடிக்கிறது. உதாரணமாக அமெரிக்காவில் மது நுகர்வு 5% மட்டுமே அதிகரித்துள்ளது. சீனாவின் மதுநுகர்வு 4.22% மட்டும் தான் உயர்ந்துள்ளது. ஆனால், குறைந்த, நடுத்தர வருவாய் நாடுகளில் மதுநுகர்வு அதிகரிப்பின் அளவு இரட்டை இலக்கத்தில் உள்ளது. இந்தியாவில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மது அரக்கன் விசுவரூபம் எடுத்திருக்கிறான். இதேநிலை தொடர்ந்தால் விரைவில் இந்தியா குடிகார நாடு என்ற பெயரைப் பெறும் என்பது உண்மை.

உண்மையில் ஆபத்தை ஏற்படுத்தும் மதுநுகர்வை 2025-ஆம் ஆண்டுக்குள் 10% குறைக்க வேண்டும் என்பது தான் உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கமாகும். அதற்காக உலக நாடுகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கி வருகிறது. ஆனால், 2025-ஆம் ஆண்டில் இந்த இலக்கை எட்டுவது இப்போது சாத்தியமற்றதாகியிருக்கிறது.

மதுவால் ஏற்படும் தீமைகளை 38 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நான், அதற்கு ஒரே தீர்வு மதுவிலக்கு தான் என்பதையும் அறிவுறுத்தி வருகிறேன். மது குடிப்பதால் சிறிது நேரம் கிடைக்கும் போதை மட்டும் தான் குடிகாரர்களுக்கு பெரிதாக தெரிகிறது. ஆனால், மது அருந்துவதால் 200 வகையான நோய்கள் தாக்குகின்றன; குடிகாரர்களை நம்பியிருக்கும் குடும்பங்கள் சீரழிகின்றன; களவு முதல் பாலியல் வன்கொடுமை வரை அனைத்து வகையான குற்றங்களும் நிகழ்கின்றன. இந்தத் தீமைகள் எதுவும் குடிக்கு அடிமையானவர்களுக்கு உரைப்பதில்லை. இது தான் என்னை வாட்டும் கவலையாகும்.

தமிழ்நாட்டில் மதுவிலக்குக்காக போராடி வரும் நிலைமை மாறி, நாடு முழுவதிலும் மதுவிலக்குக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தான் லான்செட் இதழ் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. நாடு முழுவதும் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இப்போதாவது விழித்துக் கொண்டு மதுவிலக்கு பாதையில் பயணிக்க வேண்டியது மிக மிக மிக அவசியமாகும்.

தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்த ஆட்சியாளர்கள் தயாராக இருந்தும், அதற்கு தடையாக இருப்பது மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் தான். அதனால் தான் மது விலக்கை நடைமுறைப்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில் மானியங்களை வழங்குதல், வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமாவது மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

மத்தியில் மீண்டும் அமையவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இவற்றை மீண்டும் வலியுறுத்தி, தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை உருவாக்க பாமக நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு, ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.