அரவக்குறிச்சி தொகுதியில் திமுக, அதிமுக பரஸ்பரம் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 19 மே 2019 10:14

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 9:00 மணி நிலவரப்படி அரவக்குறிச்சி தொகுதியில் 12.67% வாக்குகள் பதிவாகியுள்ளது.

திமுக – அதிமுக புகார்

 அரவக்குறிச்சி தொகுதி தோட்டக்குறிச்சியில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியுடன் திரண்டிருந்த தொண்டர்களை கலைந்துபோக போலீசார் வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்று அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவது உறுதி எனவும் அவர் தெரிவித்தார். அதேசமயம், அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திமுகவினர் முயற்சித்து வருவதாக அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆம்னி பேருந்தில் வந்தவர்கள் தடுத்து நிறுத்தம்

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க ஆம்னி பேருந்தில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.