அகிலேஷ், மாயாவதியையும் சந்தித்தார் சந்திரபாபு நாயுடு; மத்தியில் ஆட்சி அமைக்க கூட்டணிக்கு தொடர்ந்து முயற்சி

பதிவு செய்த நாள் : 18 மே 2019 20:29

லக்னோ,

   மத்தியில் அடுத்து ஆட்சி அமைப்பதற்கான ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்  மாயாவதி ஆகியோரை  தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.

டெல்லியில் சனிக்கிழமை பகலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சுதாகார் ரெட்டி, டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், லோக் தந்திரிக் ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ் ஆகியோரை சந்தித்துப் பேசிய சந்திரபாபு நாயுடு, மாலையில் டெல்லியில் இருந்து லக்னோவுக்குச் சென்றார்.

லக்னோவின் சவுத்ரி சரண்சிங் விமான நிலையத்துக்கு சென்று இறங்கிய அவர் அங்கிருந்து நேராக சமாஜ்வாதி கட்சி அலுவலகம் சென்றார்.

அங்கு சந்திரபாபு நாயுடுவை அகிலேஷ் யாதவ் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் இருவரும் தனி அறையில் சந்தித்துப் பேசினர். சந்திபாபு நாயுடுவுடன் இருக்கும் படங்களை அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

அதையடுத்து, லக்னோ மால் ரோடு அவென்யூவில் உள்ள மாயாவதியின் இல்லத்துக்கு சந்திரபாபு நாயுடு விரைந்தார். மாயாவதிக்கு மாம்பழங்கள் அடங்கிய பெட்டியை சந்திரபாபு நாயுடு பரிசளித்தார். பிறகு இருவரும் தனியாக சந்தித்துப் பேசினார்.

ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு, ஏற்கெனவே திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் பல சுற்றுக்கள் பேச்சு நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.