ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் தமிழக மாணவர் தற்கொலை : மு.க ஸ்டாலின் இரங்கல்

பதிவு செய்த நாள் : 18 மே 2019 20:16

சென்னை,

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த வேலூரைச் சேர்ந்த ரிஷி ஜோஸ்வா என்ற மாணவர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரிஷி ஜோஸ்வா. இவர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலம் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று ரிஷி பல்கலைகழகத்தில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மாணவர் ரிஷி இறக்கும் முன் தனது ஆங்கில பேராசிரியருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிவிட்டு இறந்துள்ளார். அதில் ‘’ எனக்கு மரணத்தை உணர்ந்து பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது

இந்த மின்னஞ்சலை நீங்கள் படிக்கும் முன் நான் இறந்திருப்பேன். எனது பெற்றோரை கவனித்துக் கொள்ளவும்’’ என்று எழுதியுள்ளார்.

அவர் பேராசிரியருக்கு தெளிவாக மின்னஞ்சல் அனுப்பி வைத்து இறந்துள்ளதால் மாணவரின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக எதுவும் தெரியவில்லை. இருப்பினும் மாணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் அவருக்கு ஏதேனும் மனரீதியான பிரச்சினை இருந்ததா என்ற ரீதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னால் 2017-ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் இரங்கல்

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் படித்து வந்த மாணவர் ரிஷி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்களையும் அவரது குடும்பத்தினருக்கு தன் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளி மாநிலங்களில் உயர் கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் விவரம் :

டில்லியில் உள்ள “எய்ம்ஸ்” மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழக மாணவர் சரவணனும், டில்லி பல்கலை கழக மருத்துவ கல்லூரியில் பயின்ற சரத் பிரபுவும் ஏற்கனவே மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர்.

அவ்வாறு நடைபெற்ற மர்ம மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மையைக் கண்டறிந்து, தமிழக மாணவர்களின் மத்தியில் நிலவும் மனரீதியான குழப்பத்தையும் அச்சத்தையும் போக்குவதற்கு மத்தியில் உள்ள பாஜக அரசும் முன்வரவில்லை. இங்குள்ள மாணவர் விரோத அதிமுக அரசும் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

தமிழக மாணவர்களால் டில்லி மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப் படுகிறது என்ற விஷம பிரச்சாரம் நடைபெற்று வருகிற நேரத்தில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்திட வேண்டியது மிக முக்கியமாகும்.

எனவே வெளி மாநிலங்களில் கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அமைப்பு ரீதியான கட்டமைப்பை உருவாக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.