ஒடிசா ஃபானி புயலில் வீட்டை இழந்து கழிப்பறையில் வசிக்கும் தலித் குடும்பம்

பதிவு செய்த நாள் : 18 மே 2019 19:28

கெண்டிராபாரா (ஒடிசா)

    ஒடிசாவின் கெண்டிராபாரா மாவட்டத்தில் வசிக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த கிரோத் ஜெனா என்பவரின் வீடு சமீபத்தில் தாக்கிய ஃபானி புயலால் சேதமடைந்தது. அதன் காரணமாக தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் அவருக்கு கட்டி கொடுக்கப்பட்ட கழிப்பறையில் தன் குடும்பத்துடன் கிரோத் ஜெனா வசித்து வருகிறார்.

கடந்த மே 3ம் தேதி அதிதீவிர புயலான ஃபானி புயல் ஒடிசாவில் கரையை கடந்தது. புயல் தாக்கியதில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கெண்டிராபாரா மாவட்டத்தில் உள்ள ரகுதெய்பூர் கிராமத்தில் வசிப்பவர் கிரோத் ஜெனா (58). கூலி தொழிலாளியான கிரோத் ஜெனா தலித் சமூகத்தை சேர்ந்தவர்.

இவரது குடிசை வீடு ஃபானி புயலால் முற்றிலும் சேதமடைந்தது. அதனால் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அவருக்கு கட்டித்தரப்பட்ட 42 சதுர அடி கழிப்பறையில் தன் மனைவி மற்றும் வளர்ந்த இரு மகள்களுடன் கிரோத் ஜெனா தற்போது வசித்து வருகிறார்.

இது குறித்து கிரோத் ஜெனா செய்தியாளர்களிடம் கூறுகையில் :

புயல் எனது குடிசை வீட்டை முற்றிலும் நாசமாக்கிவிட்டது. ஆனால் கான்கிரீட்டால் கட்டப்பட்ட கழிப்பறை எங்களை காப்பாற்றிவிட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இரண்டு வருடங்கள் முன்பு இந்த கழிப்பறை கட்டித்தரப்பட்டது. தற்போது இதுவே எங்களது இருப்பிடமாக மாறிவிட்டது. இன்னும் எத்தனை நாட்கள் இங்கு தங்கியிருப்போம் என தெரியாது.

அரசு அதிகாரிகள் புயலுக்கான நிவாரண தொகை வழங்கும் வரை இந்த கழிப்பறை தான் எங்கள் வீடு. தற்போது கழிப்பறையில் நாங்கள் வசிப்பதால் இயற்கை உபாதைகளுக்கு திறந்தவெளியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நான் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மற்றும் மாநில அரசின் பிஜூ புக்கா கார் திட்டத்தின் கீழ் வீடு கட்ட மானியம் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் எனக்கு மானியம் கிடைக்கவில்லை.

ஒருவேளை மானியம் கிடைத்து எனது குடிசை வீடு கான்கிரீட் வீடாக மாறியிருந்தால் புயலில் அது சேதமடைந்திருக்காது என்று கிரோத் ஜெனா கூறினார்.

கிரோத் ஜெனா குறித்து மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஏ வின் திட்ட இயக்குனர் திலிப் குமார் பாரிதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

‘‘புயலால் வீடு இழந்த குடும்பம் ஒன்று கழிப்பறையில் வசித்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்களுக்கு புயல் நிவாரண நிதி மற்றும் வீடு கட்டுவதற்கான மானியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்று திலிப் குமார் பாரிதா தெரிவித்தார்.