கேதார்நாத் குகையில் பிரதமர் மோடி தியானம்

பதிவு செய்த நாள் : 18 மே 2019 18:35

கேதார்நாத்,

  கேதார்நாத் குகையில் பிரதமர் நரேந்திர மோடி தியானத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை காலை வரை அவர் தியானத்தில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி வெளியாகின்றன.

தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று காலை கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.

கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்வது இது 4வது முறையாகும். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கேதார்நாத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அதன்பின் பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் குகைக்கு பிரதமர் மோடி 2 கிலோமீட்டர் நடைபயணமாக சென்றார்.

அங்கு காவி உடை அணிந்து தியானத்தில் ஈடுபட்டார். குகையில் மோடி தியானம் செய்யும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில் பிரதமர் மோடி நாளை காலை வரை தியானத்தில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியானது. பிரதமர் மோடி தியானம் செய்யும் குகை அருகே செல்ல ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நாளை பத்திரிநாத் புறப்பட்டு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.