துணை முதல்வர் மகன் எம்.பி. என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்த முன்னாள் காவல்துறை அதிகாரி கைது

பதிவு செய்த நாள் : 18 மே 2019 16:05

தேனி, 

  தேனி மாவட்டம் குச்சனூர் கோயில் கல்வெட்டில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கல்வெட்டை வைத்த கோவில் நிர்வாகியான முன்னாள் காவல்துறை அதிகாரி வேல்முருகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் குச்சனூர் காசி அன்னபூரணி ஆலயத்தில் நன்கொடை வழங்கியோரின் பெயர் பொறித்த கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டது.

அதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஓ.பி.எஸ் மகனை பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் குறிப்பிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கல்வெட்டின் புகைபடம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கல்வெட்டில் ரவீந்திரநாத் குமாரின் பெயர் மறைக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத் குமார் ‘‘தேர்தல் முடிவு வெளிவராத நிலையில் எம்.பி என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது தவறானது. கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த கல்வெட்டை வைத்தது கோவில் நிர்வாகியான முன்னாள் காவல்துறை அதிகாரி வேல்முருகன் என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.