தேர்தல் ஆணைய குழுவில் கருத்து மோதல் : கூட்டங்களை புறக்கணித்து வரும் அசோக் லவாசா

பதிவு செய்த நாள் : 18 மே 2019 13:28

புதுடில்லி,

   பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா இருவர் மீதான தேர்தல் விதிமீறல் புகார்களை தள்ளுபடி செய்யும் தேர்தல் ஆணைய குழு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா. இந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மே 4ம் தேதி முதல் தேர்தல் குழு கூட்டங்களை அசோக் லவாசா புறக்கணித்து வருகிறார்.

மகராஷ்டிரத்தில் கடந்த மாதம் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை, பாகிஸ்தான் பாலக்கோட்டில் தாக்குதல் நடத்திய இந்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று பேசினார்.

மோடியின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன.

இதேபோல், மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, இந்திய ராணுவத்தை பிரதமர் மோடியின் படை என்று குறிப்பிட்டார். அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார்கள் குறித்து ஆய்வு நடத்திய மூன்று தேர்தல் ஆணையர்கள் கொண்ட தேர்தல் விதிமீறல் கமிட்டி மே 3ம் தேதி பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என அறிவித்தது.

தேர்தல் ஆணைய குழுவின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீதான தேர்தல் விதிமீறல் புகார்களை தள்ளுபடி செய்யும் முடிவுக்கு தேர்தல் விதிமீறல் குழுவை சேர்ந்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசா எதிர்ப்பு தெரிவித்தார். பிரதமர் மோடி மீதான புகார்களை தள்ளுபடி செய்யும் முடிவை அசோக் லவாசா ஏற்கவில்லை என்று ஊடகத்தில் செய்தி வெளியானது.

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீதான புகார்களை ரத்து செய்யும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் அசோக் லவாசாவின் எதிர்ப்பு குறிப்பிடப்படவில்லை.

அதன் காரணமாக மே 4ம் தேதி முதல் தேர்தல் ஆணைய குழு கூட்டத்தை அசோக்லவாசா புறக்கணித்து வருகிறார்.

தேர்தல் ஆணைய குழு உத்தரவில் குழு உறுப்பினர்களின் வேறுபட்ட கருத்துகளும் சிறுபான்மை முடிவுகளும் இடம்பெற வேண்டும். அப்போது தான் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று அசோக் லவாசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிற்கு மூன்று கடிதங்களை அசோக் லவாசா அனுப்பியுள்ளார்.

அசோக்லவாசாவின் முடிவு காரணமாக மே 4ம் தேதி முதல் தேர்தல் விதிமீறல் குழு கூட்டம் நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுனில் அரோரா பதில்

அசோக் லவாரா விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் குழு உறுப்பினர்கள் ஒரேமாதிரியான குளோன்கள் அல்ல என கூறினார்.

‘‘தேர்தல் ஆணைய குழுவின் மூன்று உறுப்பினர்களும் ஒருவரின் பிரதிபிம்பங்கள் இல்லை. இதற்கு முன் பல தடவை குழு உறுப்பினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. அவ்வாறு இருப்பது வழக்கமான ஒன்றுதான்’’ என்று சுனில் அரோரா தெரிவித்தார்.

அதேசமயம் இந்த விவகாரம் குறித்து அசோக் லவாசாவிடம் பேச்சுவார்த்தை நடத்த சுனில் அரோரா அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் சாடல்

தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தேர்தல் கமிட்டி கூட்டத்தை புறக்கணித்து வருவது தொடர்பாக பாஜக அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடலுக்கு மற்றொரு உதாரணம் இது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்ட காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா ‘‘ தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் புகார்களை தள்ளுபடி செய்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் தேர்தல் குழு கூட்டத்தின் உறுப்பினர் அசோக் லவாசா’’

‘‘தன் கருத்து ஏற்கப்படாததால் தேர்தல் குழு கூட்டத்தை அசோக் லவாசா புறக்கணித்துள்ளார். இது ஜனநாயகத்தின் மற்றொரு கறுப்பு நாள். அரசு நிறுவனங்களின் நேர்மை இவ்வாறு சீரழக்கப்படுவதே மோடி அரசின் தனி சிறப்பு’’

‘‘உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொதுமக்களுக்கு செய்தி வெளியிடுவது, ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் ராஜினாமா செய்வது, சிபிஐ இயக்குனர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது, மத்திய விஜிலன்ஸ் கமிஷன் வெற்று அறிக்கைகளை அளிப்பது. இவற்றின் வரிசையில் தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையம்’’ என்று ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

அசோக் லவாசாவின் எதிர்ப்பை பதிவு செய்வதன் மூலம் அவமானத்தை துடைக்க தேர்தல் ஆணையம் முன்வருமா ? என்றும் ரந்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.