ஆசியாவில் முதல்முறையாக தன்பாலினத்தவர் திருமணத்திற்கு தைவான அரசு அனுமதி

பதிவு செய்த நாள் : 17 மே 2019 20:52

தாய்பேய்,

தன்பாலினத்தவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கும் மசோதா தைவான் நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம் ஆசியாவில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய முதல் நாடு என்று தைவான் பெயரெடுத்துள்ளது.

தைவானில் அதிகளவில் தன்பாலினத்தவர் வசித்து வருகிறார்கள். அங்கு தன்பாலித்தவர்கள் திருமணம் செய்துகொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டங்கள், அமைதி பேரணிகள் நடந்து வருகின்றன.

இந்த விவகாரம் குறித்த வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு தைவான் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தன்பாலினத்தவர்களை திருமணம் செய்ய தடை விதிப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டது. தன்பாலின திருமணத்திற்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி உத்தரவிட்டது.

மேலும் 2019ம் ஆண்டு மே 24ம் தேதிக்குள் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ள தைவான் அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

அதை தொடர்ந்து தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் மசோதா தைவான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

இந்த மசோதாவிற்கு பழமைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தது.

வாக்கெடுப்பின் முடிவில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தன்பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடாக தைவான் விளங்குகிறது.

இந்த மசோதாவின்படி இனி தைவானில் தன்பாலினத்தவர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படும்.

மசோதா நிறைவேறியதை தொடர்ந்து நாடாளுமன்றம் வெளியே மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்த ஆயிரக்கணக்கான தன்பாலினத்தவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இந்த மசோதா வரும் மே 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.