தகுதி அடிப்படையில் வழங்கும் அமெரிக்க குடியுரிமை எண்ணிக்கை 57 சதவீதமாக அதிகரிக்கப்படும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 17 மே 2019 18:25

வாஷிங்டன்,

  தகுதி அடிப்படையில் வழங்கப்படும் அமெரிக்க குடியுரிமைக்கான எண்ணிக்கை 12 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதிபர் டிரம்பின் இந்த முடிவு அங்குள்ள இந்தியர்களுக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் குடியேற்ற விதிமுறைகளில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில் வெளிநாட்டு குடியேறிகளில்  கல்வி, வேலை, ஆங்கில அறிவு உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் திறமைசாலிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் குடியேற்ற நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

இந்த புதிய விதிமுறைகளின் கீழ் வெள்நாட்டு குடியேறிகளின் வயது, கல்வி, பணி அனுபவம், நல்ல ஆங்கில அறிவு ஆகியவற்றின் கீழ் மதிப்பெண்கள் வழங்கப்படும். அமெரிக்க குடிமகனுக்கான கடமைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான சிவிக்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

இது அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்களுக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது.

எச்1பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்று வரும் இந்தியர்கள் பலர், அமெரிக்காவின் குடியுரிமையான கிரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள்.

தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களில் 66 சதவீதம் பேர் குடும்ப உறவுகள் அடிப்படையிலும், 12 சதவீதம் பேர் தகுதி அடிப்படையிலும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள்.

இந்நிலையில் அதிபர் டிரம்பின் புதிய திட்டத்தின்படி கல்வித் தகுதி மற்றும் பணியில் சிறந்துவிளங்கும் நபர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான முன்னுரிமை 12 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக அதிகரிக்கப்படும். அதேசமயம் குடியுரிமை வழங்குவதற்கான எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் ‘‘இந்த புதிய சீர்திருத்தம் உலகளவில் மற்ற நாடுகளுக்கு இணையாக அமெரிக்காவை நிலைநிறுத்தும். அமெரிக்காவுடனான போட்டித்தன்மையை அதிகரிக்கும். அமெரிக்காவின் இந்த புதிய குடியேற்ற விதிமுறைகள் நவீன உலகை பொறாமை கொள்ள செய்யும்’’ என தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப்பின் இந்தத் திட்டத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் சம்மதம் தெரிவிப்பார்களா என்று பெரும் கேள்வி எழுந்துள்ளது.

இத்திட்டத்துக்கு ஜனநாயகக் கட்சியினர் ஒப்புக்கொண்டால், அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். மறுத்துவிட்டால் இந்த விவகாரத்தை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தல் பிரசாரத்தில் முக்கியப் பிரச்னையாக எழுப்பவும் குடியரசுக் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் அதிபர் டிரம்பின் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.