அரசியல்மேடை : மேஜிக் ‘23’

பதிவு செய்த நாள் : 18 மே 2019

ஓவ்வொரு பொதுத் தேர்தல் முடிந்தவுடன் ஆட்சி மாற்றம் ஏற்படுவதும் அதைத் தொடர்ந்து அரசியல் மாற்றம் உருவவாதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் ஆட்சிக் கட்சியே மக்கள் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதும் சகஜம்.

தற்போது நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் ஆகியவை இந்தியா மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கும் மே 23ம் தேதி என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்புதான் அது. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜ. அமோக வெற்றி ஆட்சி அமைத்தது. 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்குரிய வாய்ப்பு இருந்தபோதும் தேர்தலில் தம்மோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளித்து ஒரு புதிய அரசியல் மாற்றத்தை பா.ஜ ஏற்படுத்தி இருந்தது.

நூற்றாண்டு கண்ட காங்., கட்சி கடந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெற முடியாத அளவிற்கு படுதோல்வியை சந்தித்தது. தமிழ்நாட்டில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு 39 தொகுதி களிலும் அதிமுக போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்று ஒரு அசுர சாதனையை படைத்தது. அதுமட்டுமல்ல, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் மொத்தமாக 50 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சி என்கிற அந்தஸ்த்தை மாநில கட்சிக்கு உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவை சாரும்.

இப்போது நடை பெற்று முடிந்துள்ள 17வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜ, அணியும், காங்., அணியும் கடுமையாக களத்தில் மோதுகின்றன. நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசை அகற்றியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தேசிய அளவில் 24 கட்சிகளின்  துணையோடு காங்., களத்தில் நிற்கிறது. பாஜ.வும் சுமார் 21 கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜ ஆட்சி யின்  சாதனைகளையும் இனி அடுத்து தொடரும் ஆட்சியில் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பாதுகாப்பிற்காக வும் மேற்கொள்ளவிருக்கிற நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி மக்கள் மீண்டும் தங்களுக்கே வாய்ப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு பாஜ காத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மீதும் பாஜ கட்சியின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் காங்., மற்றும் அதன் தோழமை கட்சிகள் ஆட்சி மாற்றம் உறுதி என்கிற அடிப்படையில் மே 23ம் தேதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள். இந்தியா முழுமைக்குமான 543 நாடாளுமன்ற  தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆந்திர, ஓடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டமன்ற  பொதுத்தேர்தலும், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலோடு 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மினி பொதுத் தேர்தல்போல நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல்களுக்கான முடிவும் மே 23ம் தேதி தெரிய வரும். கடந்த 2014 தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்ற பாஜ., இந்த முறை குறைந்தபட்சம் 200 தொகுதிகளையாவது பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக பாஜவினரும் வடநாட்டைச் சேர்ந்த சில ஊடகங்களும் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.

அகில இந்திய அளவில் காங்., கட்சியின் செல்வாக்கு சரிந்து மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அந்த மாநில கட்சிகளின் துணையோடு மீண்டும் காங்., கூட்டணி அரசு ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக காங்.,கும் அதன் கூட்டணி கட்சிகளும் இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமை கட்சியினரும் கருதுகின்றனர்.

தமிழ்நாட்டை பொருத்தவரை தற்போது நடைபெற்று வரும் இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி தொடருமா அல்லது ஆட்சி கவிழுமா என்கிற ஒரு மிகப் பெரிய கேள்விக்கு விடையளிக்கக் கூடிய தேர்தலாகவே இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.

22 சட்டமன்ற தொகுதிகளுக்கான  இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 8 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால்தான் 2021ம் ஆண்டு வரை இந்த ஆட்சி நீடிப்பதற்கான வழி உண்டு. அதற்கு குறைவான இடங்களை பெற்றால் நிச்சயம் ஆட்சி கவிழக்கூடிய அபாயமும் உண்டு. ஆட்சி கவிழ்ப்பை பிரதானப்படுத்தி பிரசாரம் மேற்கொண்ட திமுக மற்றும் அமமுக  ஆகிய கட்சிகள் சட்டமன்ற தொகுதிகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், இருவரும் இணைந்து அரசை கவிழ்ப்பதற்கான கூடுதல் வாய்ப்பும் உண்டு.

தமிழ்நாட்டின் ஆகப் பெரிய ஆளுமைகளாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைவிற்குப் பிறகு நடைபெற்றுள்ள முதல் பொதுத்தேர்தல் என்பதால், இந்தத் தேர்தலில் மக்கள் என்ன முடிவெடுத்து யாருக்கு ஆதரவாக, வாக்களித்திருக்கிறார்கள் என்பது மே ௨௩ம் தேதி தெளிவாகிவிடும்.

மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் பாஜ, ஆட்சி அமையுமா காங்., தலைமையிலோ அல்லது மாநில கட்சிகளின் தலைமையிலோ கூட்டணி ஆட்சி அமையுமா என்பதை தீர்மானிப்பதும் மே ௨௩தான். அதேபோல, தமிழ்நாட்டின் இபிஎஸ் தலைமையிலான ஆட்சி தொடருமா அல்லது கவிழுமா என்பதையும் மே ௨௩தான் வெட்டவெளிச்சமாக்கும். எனவேதான் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மேஜிக் எண் ‘௨௩’க்காக காத்திருக்கிறார்கள்.