துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 29

பதிவு செய்த நாள் : 18 மே 2019

சுதந்திர தியாகி ரா.கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வாழ்ந்த ஏராளமான பெருமக்கள் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு பல தியாகங்களை செய்துள்ளனர். இவர்களில் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியை சேர்ந்த ரா.கி. என்றழைக்கப்படும் ரா. கிருஷ்ணமூர்த்தியும் குறிப்பிடத்தக்கவர்.

1922–ம் ஆண்டு முதல் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று, பலமுறை சிறை சென்ற கிருஷ்ணாசாமி நாயுடு, சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் பங்கேற்று சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அவரது வாழ்க்கை குறிப்புகள் சிலவற்றை இந்த வாரம் காண்போம்.

முந்தைய திருநெல்வேலி மாவட்டம், இப்போதைய விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிப்புத்தூர் வட்டத்திற்குட்பட்ட பி.ராமச்சந்திரபுரம் எனும் கிராமத்தில் 1902ம் ஆண்டு ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கிருஷ்ணசாமி. சொந்த ஊரில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், பின்னர் பல்வேறு அறிஞர்கள், ஆன்றோர்கள் உதவியுடன் உயர் கல்வி கற்று புலவரானார்.  இசை ஞானமும், மிகுந்த பக்தி உணர்வும் கொண்ட இவர் 1922ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.

அண்ணல் காந்தி அடிகள் மீதும், கதர் பக்தி இயக்கத்திலும் ஈடுபாடு கொண்ட கிருஷ்ணசாமி 1930ம் ஆண்டு நடைபெற்ற சட்டமறுப்பு இயக்கம், 1940ம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் சக்தியாக்கிரகம், 1942ம் ஆண்டு நடைபெற்ற ஆகஸ்டு இயக்கம் ஆகிய சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.

1924ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கிருஷ்ணசாமி, 1926ம் ஆண்டு தனது சொந்த கிராமமான பி. ராமச்சந்திரபுரத்தில், அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களில் குறிப்பிடத்தகுந்தவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவருமான சேலம் பெ. வரதராஜூலு நாயுடு தலைமையில் தேசிய காங்கிரஸ் மாநாட்டை மிகச் சிறந்த முறையில் நடத்தியுள்ளார். இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்களும், தமிழகத்தின் முக்கிய  தலைவர்களும், பிரமுகர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.

அந்த காலகட்டத்தில் ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவராக காமராஜர் இருந்தபோது மாவட்ட செயலாளர் பொறுப்பில் அவரோடு இணைந்து பணியாற்றியவர் கிருஷ்ணசாமி. இவருடைய  அர்ப்பணிப்பு உணர்வு, கடும் உழைப்பு, தேச சேவையின் ஈடுபாடு ஆகியவற்றை உணர்ந்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை இவருக்கு கட்சியிலும், தேர்தலிலும் பல வாய்ப்புகளை வழங்கியது.

இதன் விளைவாக, 1959ம் ஆண்டு முதல் 62–ம் ஆண்டு வரையிலும் தமிழ்நாடு காங். கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், 1962ம் ஆண்டு முதல் 1967 வரை அதன் தலைவராகவும் சிறந்த முறையில் கிருஷ்ணசாமி பணியாற்றியுள்ளார்.

அது மட்டுமல்ல சுதந்திரத்திற்கு பிறகு 1952ம் ஆண்டு (1951–52) நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் விருதுநகர் பகுதியிலுள்ள எதிர்க்கோட்டை தொகுதியில் இருந்தும், 1957ம் ஆண்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் தொகுதியில் இருந்தும், 1962ம் ஆண்டு ராஜபாளையம் தொகுதியில் இருந்தும் தமிழக சட்ட மன்றத்துக்கு கிருஷ்ணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச்சிறந்த முறையில் பணியாற்றியவர்.

1952ம் ஆண்டு முதல் 1967 வரை அப்போதைய ஆட்சி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக 15 ஆண்டுகள் இருந்த போதும், அவருக்கு என சொந்த வாகனம் எதுவும் இல்லை. மக்களோடு மக்களாக பேருந்தில்தான் பயணம் செய்துள்ளார்.

மகாத்மாகாந்தி, காமராஜர் போன்ற தலைவர்களை மிகவும் மதித்துப்போற்றி, அவர்களின் வழியில் செயல்பட்ட கிருஷ்ணசாமி பொதுப்பணத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதில் எல்லோருக்கும் முன்னுதாரணமாக விளங்கினார்.

அவருடைய சிக்கனத்தைப் பாராட்டி பேசிய காமராஜ், இந்த வகையில் மகாத்மா காந்தியின் உண்மை வாரிசாக ரா.கி. செயல்படுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட காங் தலைவராக, இருந்த காமராஜ், மாவட்டச் செயலாளராக இருந்த கிருஷ்ணசாமி நாயுடு ஆகிய இருவரும், காங். கட்சி சார்பாக நடைபெறும் பொதுக் கூட்டம், ஊழியர் கூட்டம், மாநில, மாவட்ட, வட்டார மாநாடு என எந்த நிகழ்ச்சி நடந்தாலும், வாடகை சைக்கிளில் சென்றுதான் இருவரும் பங்கேற்றுள்ளனர். சில நேரங்களில் நடந்தும், மாட்டு வண்டியில் சென்றும் கட்சிப் பணியாற்றியுள்ளனர்.

தேசப்பற்றும், தெய்வ பக்தியும் உள்ளவரான ரா.கிருஷ்ணசாமி நாயுடு ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபட்டுள்ளார். தாம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய கால கட்டங்களில் கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்காகவும், அங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதி கிடைத்திடவும் பாடுபட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில் கூட்டுறவு அமைப்புகளில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த கிருஷ்ணசாமி நேர்மை தவறாமல் நடந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார்.

பூமிதான இயக்கம் நடத்தி வந்த ஆச்சார்ய வினோபாபாவே, தமிழ் நாட்டுக்கு வருகை தந்த போது, அவரிடம் தமது சொந்த நிலத்தை தானமாக வழங்கிய கிருஷ்ணசாமி, அதை அந்த பகுதியின் ஏழை, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பிரித்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார். நாடும், மக்களும் முக்கியம் என வாழ்ந்த நல்ல பல தியாகத் தலைவர்களின் வரிசையில் ரா. கிருஷ்ணசாமி நாயுடுவும் – இடம் பெற்றுள்ளார். அவருடைய அப்பழுக்கற் தியாக வாழ்வைப் போற்றுவோம்.