மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்ட 5 ரஷ்யர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

பதிவு செய்த நாள் : 17 மே 2019 16:49

வாஷிங்டன்,

  ரஷ்யாவில் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து ரஷ்யர்கள் மற்றும் ஒரு நிறுவனம் மீது வியாழக்கிழமை அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அமெரிக்கா – ரஷ்யா இடையே நடந்த உயர்மட்ட கூட்டத்திற்கு பின் பதற்றம் சற்று தணிந்திருந்த நிலையில் அமெரிக்கா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ஆக்கிரமித்தது, அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மூன்று நாட்கள் முன்பு ரஷ்யா சென்றார். அங்கு அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இருநாடுகள் இடையேயான உறவை சீர் செய்ய முயற்சிகள் மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

அதிபர் புதினுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இரு வல்லரசுகளும் ஒன்றாக ஒருங்கிணைந்து சிரியாவில் அரசியல் தீர்வு காணவும் வடகொரியாவில் அணு ஆயுதங்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மைக் பாம்பியோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ரஷ்யாவுடன் சுமூக உறவை ஏற்படுத்தி கொள்ள விரும்புவதாக அதிபர் டிரம்பும் டுவிட்டரில் செய்தி வெளியிட்டார்.

இந்த உயர்மட்ட கூட்டத்தின் காரணமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான பதற்றம் சிறிது தணிந்தது.

இந்நிலையில் ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரை கொன்றது உள்ளிட்ட சில மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்ட 5 ரஷ்யர்கள் மற்றும் ஒரு ரஷ்ய நிறுவனம் மீது வியாழக்கிழமை அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

தடைவிதிக்கப்பட்ட ஐந்து நபர்களில் ரஷ்யாவின் பதற்றம் நிறைந்த வட கவுகாஸ் பகுதியின் தலைவர் ரம்ஜான் காடிரோவின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ருஸ்லான் ஜெரெமெயேவும் ஒருவர்.

அதிபர் விளாதிமிர் புதினுக்கு எதிராக கருத்து கூறி வந்த முன்னாள் துணை பிரதமர் போரிஸ் நேம்ட்சோவை 2015ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ருஸ்லான் ஜெரெமெயே என்பது குறிப்பிடத்தக்கது.