கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடை கோரி முறையீடு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரிப்பு

பதிவு செய்த நாள் : 16 மே 2019 11:58

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு தடைவிதிக்க கோரிய முறையீட்டை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்துவிட்டது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பள்ளபட்டியில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அண்மையில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என கருத்து தெரிவித்தார். கமல்ஹாசனின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

கமல்ஹாசன் பிரசாரம் செய்ய தடைவிதிக்க கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று முறையீடு செய்தார்.

ஆனால், பிரச்சாரத்திற்கு தடைவிதிக்க, தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அவரின் முறையீட்டை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.