மக்கள் நலப் பணிகளை செயல்படுத்துவதில் நல்லாட்சி நடத்தி வருகிறோம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை

பதிவு செய்த நாள் : 16 மே 2019 11:47

சென்னை,

தமிழகத்தின் மக்கள் நலப் பணிகளை செயல்படுத்துவதில் உடனுக்குடன் முடிவெடுத்து நல்லாட்சி நடத்தி வருகிறோம் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கையின் விவரம்

 நம் அனைவரது அன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய, அம்மாவின் சூளுரைக்கு ஏற்ப, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று உளமாற உணர்ந்து ஜனநாயக நெறிப்படி நல்லாட்சி நடத்தி வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிச் சின்னமாம் “இரட்டை இலை’’ சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்ளவே இந்த மடலினை உங்களுக்கு எழுதுகிறோம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் தலைமையின் கீழ் நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுகள், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றவும் உருவாக்கி செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம்.

அந்த இருபெரும் தலைவர்கள் காட்டிய வழியில் சிறிதளவும் பிறழாமல் மக்களுக்குத் தொண்டு செய்வது ஒன்றே தலையாய லட்சியமாய்க்கொண்டு நடைபெற்று வரும் கழக அரசு தொடர்ந்து சிறப்புடன் பணியாற்றிட, இந்த இடைத் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை ``இரட்டை இலை’’ சின்னத்தில் அளிப்பது மிகவும் அவசியமானது.

கடுமையான கோடை காலத்திலும், திமுக ஆட்சியில் நிலவிய மின்வெட்டால் தமிழ் நாடே அல்லல்பட்டதை மறக்க முடியுமா? ஊருக்கு ஊர் கட்டப் பஞ்சாயத்து, ரவுடிகள் ராஜ்ஜியம், அவரவர் சொத்து அவரவருக்குச் சொந்தம் என்ற சட்டத்தின் உத்தரவாதம் தகர்ந்துபோய் தமிழ் நாடெங்கும் நிலவிய நில அபகரிப்பு, அதற்கு துணைபோன திமுக முக்கியப் புள்ளிகளின் அராஜகம் போன்றவை எல்லோருடைய மனதிலும் பசுமையாக இருக்கின்றன.

வன்முறையும், அராஜகமும் திமுக-வுடன் ஒட்டிப் பிறந்த பிறவி குணங்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் அந்தக் கட்சியினரின் அடாவடிகளும், குற்றச் செயல்களும், சட்டத்தை மீறும் போக்கும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பதை செய்திகளில் பார்க்க முடிகிறது. பிரியாணி கடையில் அடிதடி, மகளிர் ஒப்பனை நிலையத்தில் அராஜகம் என்று திமுக-வினர் தங்கள் சுயரூபத்தைக் காட்டி வருகின்றனர். இத்தகைய மனநிலையில் வாழ்பவர்கள் சிறிதளவு வெற்றியைச் சுவைத்தாலும், அதனால் சமூகத்திற்கு ஏற்படும் கேடுகளை யாரேனும் மறுக்க முடியுமா? இவர்கள் தலையெடுத்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு, வாக்காளப் பெருமக்களாகிய உங்களுக்கு இருக்கிறது.

அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியே தொடரட்டும் என்று நீங்கள் அளித்த வெற்றிக்கு உண்மையுள்ள அரசாக நடைபெறும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இன்னும் நூறாண்டு கடந்தும், தொடர்ந்து தமிழ் நாட்டில் நடைபெறும் என்றும், “கழகம் ஆயிரம் காலத்துப் பயிர்; இது என்றென்றும் ஆலமரமாய் நிலைத்து நிற்கும், மக்களுக்குத் தொண்டாற்றும்’’ என்றும் புரட்சித் தலைவி அம்மா சட்டமன்றத்தில் சூளுரைத்தார்.

மக்கள் நலப் பணிகளை செயல்படுத்துவதில் எவ்வித சுணக்கமும் இன்றி விரைவாகவும், தேக்கமின்றியும், உடனுக்குடனும் முடிவுகளை எடுத்து நல்லாட்சி நடத்தி வருகின்றோம். அத்திக்கடவு - அவினாசி நீர்ப்பாசனத் திட்டம்; எதிர்காலத் தமிழகத்தின் தண்ணீர் தேவைகளை நிறைவு செய்ய காவேரி - கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டம்; சுற்றுச் சூழலை பாதுகாத்திட பிளாஸ்டிக் ஒழிப்பு; ஏழை எளியோர் நலன் காக்க பொங்கல் பரிசாக 1,000/- ரூபாய் வழங்கும் திட்டம்; வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்கு உதவிட, குடும்பத்திற்கு 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் என்று, எண்ணற்ற திட்டங்களை மக்கள் நலனுக்காக தீட்டி செயல்படுத்தி வருகின்றோம்.

மக்கள் பணிகளை சிறப்புடன் செயல்படுத்தும் மாநில அரசு என்ற நற்பெயர் பெற்ற அரசாக தமிழ் நாடு அரசும் எந்நாளும் விளங்கும்.  

 19.5.2019 அன்று நடைபெற உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிச் சின்னமாம் ``இரட்டை இலை’’ சின்னத்திற்கு வாக்களிக்கும்படி உங்களை பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு, ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.