மேற்குவங்கத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

பதிவு செய்த நாள் : 15 மே 2019 20:46

கொல்கத்தா,

   மேற்கு வங்கத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 9 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்பாக நாளை இரவுடன் முடித்துக் கொள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை தேர்தலின் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் நேற்று பாஜக தலைவர் அமித் ஷா தேர்தல் பேரணி நடத்தினார். அப்போது கொல்கத்தா பல்கலைகழகம் அருகே பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினர் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மேற்குவங்கத்தின் சமூக சீர்த்திருத்தவாதியான ஈஸ்வர் சந்திர வித்தியாசாகரின் சிலை உடைக்கப்பட்டது.

இந்த கலவரத்துக்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த கலவரம் தொடர்பாக இரு கட்சியினரும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். இதற்கிடையில் கொல்கத்தாவில் தொடர்ந்து பதற்ற நிலை நீடிக்கிறது.

கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறை காரணமாக மேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 9 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை 1 நாள் முன்பாகவே முடித்துக்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது.

மே 17ம் தேதி வரை தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்குவங்கத்தில் மட்டும் நாளை இரவு 10 மணியுடன் தேர்தல் பரப்புரையை முடிக்க தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.