வறட்சியைப் போக்க மேக விதைப்பு திட்டம் மூலம் மழை பெய்விக்க கர்நாடக அரசு முடிவு

பதிவு செய்த நாள் : 15 மே 2019 20:32

பெங்களூரு,

   கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவும் சூழ்நிலையில் இந்த ஆண்டு பருவமழை சராசரியை விட குறைவாகவே பெய்யும் என வானிலை ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. எனவே, மேக விதைப்பு திட்டம் மூலம் செயற்கை முறையில் மழை பொழிய வைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் அதற்கான செயல்பாடுகள் துவங்கும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் நிலவும் வறட்சி குறித்து முதல்வர் குமாரசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாவட்ட துணை ஆணையர்கள், பஞ்சாயத்து தலைமை நிர்வாகிகள் ஆகியோரிடம் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா பையர் கவுடா இந்த ஆண்டு பருவமழை குறைவாக இருக்கும் என செய்தி வெளியாகியுள்ளதால் செயற்கை முறையில் மழை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இது குறித்து செய்தி அமைச்சர் கிருஷ்ணா பையர் கவுடா செய்தியாளர்களிடம் பேசியதன் விவரம்:

இந்த வருடம் மழை பொழிவு குறைவாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேக விதைப்பு (Cloud seeding) திட்டம் மூலம் செயற்கை முறையில் மழை பெய்விக்க அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி 2019 - 20 மற்றும் 2020 - 21 ஆகிய ஆண்டுகளில் மேக விதைப்பு  திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1 வாரம் முதல் 10 நாட்களுக்குள் அதற்கான டெண்டர் வழங்கப்பட்டுவிடும். வரும் ஜுன் மாதம் இறுதிக்குள் மேக விதைப்புக்கான செயல்பாடுகள் துவங்கும். இந்த திட்டத்திற்கான மொத்த செலவு ரூ. 88 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பெங்களூரு மற்றும் ஹுபாலி ஆகிய இரண்டு இடங்களில் மேக விதைப்புக்கான மையங்கள் செய்யப்படும். இரண்டு விமானங்கள் மூலம் மேகங்களில் இந்த திட்டம் வெற்றி பெற்றால் குறைவான மழை பொழிவு உள்ள இடங்களில் கூடுதல் மையங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கிருஷ்ணா பையர் கவுடா தெரிவித்தார்.

இதற்கு முன் மகராஷ்டிரா மற்றும் ஆந்திரபிரதேசத்தில் செயற்கை முறையில் மழை உருவாக்கும் மேக விதைப்பு திட்டம் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.