பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத் மைத்துனர் பாகிஸ்தானில் கைது

பதிவு செய்த நாள் : 15 மே 2019 20:27

லாகூர்,

   பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத்தின் மைத்துனரான ஹஃபீஸ் அப்துர் ரகுமான் மாக்கி கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவல்துறை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் பேசிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர்.

அதை தொடர்ந்து உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு பல பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதை தொடர்ந்து மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பு மற்றும் அதன் தொண்டு நிறுவனமான ஃபலாஹ் –இ-இன்சானியாத் ஆகியவை தடை செய்யப்பட்டன. அதன் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மகன் மற்றும் சகோதர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஹஃபீஸ் சயீத் அவர் வீட்டில் பலத்த காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் ஹஃபீஸ் சயீத் மசூதியில் உரையாற்ற பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஹஃபீஸ் சயீத்தின் மைத்துனர் ஹஃபீஸ் அப்துர் ரகுமான் மாக்கி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஹஃபீஸ் சயீத்தின் தடை செய்யப்பட்ட இயக்கமான ஜமாத் உத் தவாவின் அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை தலைவராக பணியாற்றி வந்தவர் ஹஃபீஸ் அப்துர் ரகுமான் மாக்கி.

அவர் கைது செய்யப்பட்டதை பஞ்சாப் மாகாணத்தின் காவல்துறை செய்தி தொடர்பாளர் நபிலா காஜன்ஃபார் இன்று உறுதிப்படுத்தினார். ஆனால் எந்த குற்றச்சாட்டின் கீழ் ஹஃபீஸ் அப்துர் ரகுமான் மாக்கி கைது செய்யப்பட்டார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

லாகூரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஜ்ரன்வாலா என்ற நகரில் மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டும் வகையில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பேசியதால் தான் ஹஃபீஸ் அப்துர் ரகுமான் மாக்கி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.