அமெரிக்கா – ஈரான் பதற்றம் எதிரொலி: ஈராக், தூதரக ஊழியர்கள் நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவு

பதிவு செய்த நாள் : 15 மே 2019 19:33

வாஷிங்டன்,

  அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் ஈரானின் அண்டை நாடான ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் எர்பில் நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அவசரகால ஊழியர்களைத் தவிர்த்து மற்ற பணியாளர்கள் நாடு திரும்ப அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.


ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளுக்கு துணை நிற்பதாகவும் குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா கடந்த ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. அதை தொடர்ந்து ஈரான் மீது பல பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இதனால் அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் போக்கு நிலவியது.

இந்நிலையில் மத்திய கிழக்கு கடல்பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது மிக பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதை தொடர்ந்து மத்திய கிழக்கு கடல்பகுதிக்கு தன் போர்கப்பல் ஒன்றை அமெரிக்கா அனுப்பியது. இதன் காரணமாக இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

பதற்றம் அதிகரித்துள்ளதால் ஈரானின் அண்டை நாடான ஈராக்கின் பாக்தாத் மற்றும் எர்பில் நகரங்களில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகங்களில் உள்ள அவசரகால ஊழியர்களை தவிர்த்து மற்ற அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்த ஈராக் நாட்டில் குறிப்பாக அதன் தெற்கு பகுதியில் ஈரான் அரசுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகள் அதிகம். அதனால் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு தூதரக ஊழியர்களை நாடு திரும்பும்படி அமெரிக்க அரசு ஆணையிட்டுள்ளது.