தேச பாதுகாப்பு பற்றி பேசாமல் இருக்க முடியாது: பிரதமர் மோடி பதில்

பதிவு செய்த நாள் : 15 மே 2019 19:17

பாலிகான்ஜ் (பீகார்)

   இந்திய ராணுவம், பாலகோட் தாக்குதல் உள்ளிட்டவற்றை குறித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசுவதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்தால் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் தேச பாதுகாப்பு பற்றி பேசாமல் இருக்க முடியாது என கூறியுள்ளார்.

பீகாரின் பாலிகான்ஜ் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லோக் ஜன்சக்தி கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதன் விவரம்:

மக்களவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் நான் மேற்கொள்ளும் இறுதி பிரச்சாரம் இது. ஆனால் நான் மத்தியில் ஆட்சி அமைத்த பின் பல நலத்திட்டங்களுடன் இங்கு மீண்டும் வருவேன்.

உங்களின் அன்பு எனக்கு வெற்றி வாய்ப்பு மீது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் நடக்கபோகும் இறுதிகட்ட தேர்தலில் பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்த அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ஜ்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் பாலகோட் விமானப்படை தாக்குதல்கள் குறித்து அடிக்கடி பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

தேசத்தின் பாதுகாப்பு தேர்தல் பிரச்சாரத்திற்கான விவகாரம் இல்லை என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இது எவ்வாறு சாத்தியம்?

பயங்கரவாத தாக்குதலில் பல அப்பாவி மக்கள் கொல்லப்படும் சூழ்நிலையில் தேசத்தின் பாதுகாப்பு குறித்து எப்படி பேசாலாமல் இருக்க முடியும்? பாஜக அரசை போல் பயங்கரவாதிகளை அவர்கள் மறைவிடத்தில் இருந்தப்படியே அழிக்க வேண்டும் என மோடி தெரிவித்தார்.

பிரச்சாரத்தில் சீக்கிய கலவரம் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட சாம் பித்ரோடாவை பிரதமர் மோடி கடுமையாக சாடினார். மேலும் பீகாரில் சாதி அரசியல் மூலம் அதிகாரம் பெற நினைக்கும் கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் என்று அதன் தலைவர் லல்லு பிரசாத் யாதவின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார் 

ஊழலற்ற அரசு

பீகாரை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் தியோகர் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மோடி உரையாற்றினார். அப்போது கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு ஊழலற்ற ஆட்சியை வழங்கியுள்ளது என பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார்.

காங்கிரஸ் கட்சியால் 55 ஆண்டுகளில் செய்ய முடியாததை வெறும் 55 மாதங்களில் பாஜக செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. அரசின் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

நேர்மையான அரசை தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்பை மக்கள் எனக்கு அளித்துள்ளதை நினைத்து பெருமை படுகிறேன் என மோடி தெரிவித்தார்.

மேலும் சீக்கிய கலவரம் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட சாம் பித்ரோடா மற்றும் தன்னை பற்றி மீண்டும் அவதூறாக பேசிய காங்கிரஸ் தலைவர் சங்கர் ஐயர் ஆகியோரை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

குடும்ப ஆட்சியை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் நியமித்த இரண்டு பாதுகாவலர்கள் இவர்கள். தேர்தலில் நிலவும் மோசமான சூழ்நிலைக்கு பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி இவர்களை நியமித்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.