பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத புதிய அரசு மத்தியில் ஆட்சி அமைக்கும்: குலாம் நபி ஆசாத்

பதிவு செய்த நாள் : 15 மே 2019 18:12

பாட்னா

இந்த மக்களவை தேர்தலுக்குப் பின், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத புதிய அரசு, மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் 6 கட்ட தேர்தல் நிறைவடையவுள்ள நிலையில், 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. பின்னர், மே 23ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசையும் கடுமையாக சாடினார்.

அதில் பேசிய குலாம் நபி ஆசாத்,

”இந்த தேர்தலுக்குப் பின், நரேந்திர மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது. ஏனென்றால், தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத, பாஜக அல்லாத புதிய அரசு மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ளது” என்று கூறினார்.

”நாம் கடைசி கட்ட தேர்தலில் இருக்கின்றோம். நாடு முழுவதும் பிரச்சாரங்கள் மேற்கொண்டுள்ளதை வைத்து நான் ஒன்றை கூறுகிறேன். மத்தியில் பாஜகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது” என்று உறுதியாக கூறினார்.

”மத்தியில் அமையும் புதிய ஆட்சியை காங்கிரஸ் தலைவர் வழிநடத்தினால் நன்றாக இருக்கும். எனினும், தேர்தல் முடிவுகளுக்குப் பின், இதை வைத்து நாங்கள் பிரச்சனை செய்யமாட்டோம். காங்கிரஸ் தலைவரை தவிர வேறு யாரும் பிரதமராகக்கூடாது என்று கூறமாட்டோம்” என்று தெரிவித்தார்.

”காங்கிரஸ் கட்சியின் பிரதான இலக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதுதான். அதோடு, தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத புதிய அரசு ஆட்சி அமைக்கப்படவேண்டும்” என்று கூறினார்.

“பாஜக அரசு 2014ம் ஆண்டு ஆட்சி அமைத்ததில் இருந்து, வெறுப்பு மற்றும் பிளவுபடுத்தும் கொள்கைகளை மட்டுமே பின்பற்றி வருகிறது. தொழிலதிபர்களுக்கான இந்த பாஜக கட்சியின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் அறிந்துகொண்டனர்” என்று பேசினார்.

”விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்து சமூக மக்களும் மத்திய பாஜக அரசின் தவறான கொள்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று சாடினார்.

“பாலக்கோட் தாக்குதல் நடத்த அறிவியல் ரீதியிலான பிரதமரின் அறிக்கையை நான் பார்த்ததும், ஒன்றை செய்திருக்கவேண்டும். தற்கொலை செய்திருக்கவேண்டும்” என்று குலாம் நபி ஆசாத் கடுமையாக விமர்சனம் செய்தார்.