பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை!’ – 87

பதிவு செய்த நாள் : 19 மே 2019

உடனே சாரதி, `ஈஸ்வரி பிக்சர்ஸ் அதிபர் என் நண்பர். பெங்களூருக்கு வந்துவிட்டு அவரைப் பார்க்காமல் போனால் வருத்தப்படுவார். ஒரு நிமிஷம் `ஹலோ’ சொல்லிவிட்டு வந்து விடுகிறேன்.’’ என்று கூறி காரை நிறுத்தச் சொல்லி இறங்கிச் சென்றார்.

 போனவர் சற்று நேரத்தில் ஈஸ்வரி பிக்சர்ஸ் அதிபர் என். வீராசாமியுடன் காருக்குத் திரும்பி வந்தார். வீராசாமி,`நீங்க காரில் காத்திருக்கிறதா சாரதி சொன்னார். நான் இருக்கும் போது நீங்க ஏன் இன்னொரு விநியோகஸ்தரை தேடி அலையணும். ரூமுக்குப் போங்க. நான் சாயந்திரம் வந்து பார்க்கிறேன்’ என்றார்.

சொன்னபடியே வீராசாமி வந்துவிட்டார். கதையைக் கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது.

நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்று என்பார்களே அப்படித்தான் ஒரு வெற்றி படத்துக்கு நாங்கள் யாருமே  சற்றும் எதிர்பாராத விதத்தில் வீராசாமி கை கொடுத்து உதவினார்.

 வீராசாமி எனக்கு எப்படி பழக்கமானார் என்பது தனிக்கதை.ஸ்ரீதருக்குத் திருமணம் ஆன புதிது. ஒரு இந்தி தயாரிப்பாளர் ராஜேந்திர குமார், வைஜயந்திமாலா நடிக்க, நவுஷாத் இசையமைக்க, நான் ஒரு இந்தி படம் அவருக்காக டைரக்ட் செய்து தரவேண்டுமென கேட்டுக்கொண்டார். வெளிப் படங்களை ஸ்ரீதர் வழக்கமாக ஒப்புக்கொள்வதில்லை.  இந்தி பட தயாரிப்பாளர் சார்பாக திலீப்குமார் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜேந்திரகுமார் என்று நாலாபக்கமிருந்து சிபாரிசு. ஸ்ரீதரும் ஒப்புக்கொண்டார்.

அப்போதுதான் தயாரிப்பாள ருடன் வந்திருந்த வீராசாமியின் அறிமுகம் ஏற்பட்டது.  ஸ்ரீதருக்கு  25 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார் தயாரிப்பாளர். அதே சமயத்தில் தான் ராஜேந்திர குமாருக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.

அப்புறம் ஆறுமாதங் களாகியும் அந்த தயாரிப்பாளரிட மிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. திடீரென்று ஒரு நாள் வீராசாமி வந்து ஸ்ரீதரை சந்தித்தார்.

`அட்வான்ஸ் கொடுத்த 25ஆயிரம்  ரூபாய் திரும்ப வேண்டும்’ என்றார். ` அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளரிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. நான் எப்படி உங்களிடம் பணம் திருப்பித் தரமுடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர், `அந்த தயாரிப்பாளரிடம் ஒரு காலத்தில் நான் ரெப்ரசண் டேட்டிவ்வாக வேலை பார்த்தேன். அவர் பணசிக்கலால் பாதிக்கப்பட்டபோது, `நீங்கள் தனியாகப் போய் ஏதாவது பிசினஸ் செய்து கொள்ளுங்கள்’ என்றார். நான் அவரை விட்டு வெளியேறினேன்அதன் பிறகு விநியோகஸ்தராகி நான் தயாரிப்பாளராகி நல்ல நிலைக்கு உயர்ந்தேன். பழைய முதலாளியை நான் சமீபத்தில் சந்தித்தபோது தன் நெருக்கடியான நிலையைக் கூரி, ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று கேட்ட போதுஎன்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை’

` நீங்கள் ஒரு படம் எடுங்கள் நான் உதவி செய்கிறேன்’ என்று நான் கூறியதன் அடிப்படையில்தான் அவர் உங்களை அணுகினார். நீங்களும் ஒப்புக்கொண்டீர்கள். என்னிடமிருந்து இருப்பத்தி ஐயாயிரம் ரூபாய் வாங்கி உங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்தார்.’ நானும்  பணத்தைத் திருப்பித் தர ஒப்புக்கொண்டேன்.

 இரண்டு தடவையாக ஐயாயிரம் ரூபாய் திருப்பித் தந்தார் ஸ்ரீதர். அதற்குப்பிறகு பண நெருக்கடியால் கொடுக்க முடியவில்லை. இது பழைய கதை.

 இப்போது எதேச்சையாய் அவரை சந்தித்து, கதை சொல்ல அது அவருக்கு பிடித்துப் போய்விட்டது. கன்னடத்தில் படத்தை எடுக்க தீர்மானித்தார். ஆனால் அப்போது அவர் போட்ட ஒரு நிபந்தனை பழைய பாக்கி பதினைந்தாயிரத்தைக் குறைத்துக்கொண்டுதான் உங்களுக்குத் தருவேன்; என்றார்.  ஸ்ரீதரும் ஒப்புக்கொண்டார்.

கதையில் மூன்றே கதா பாத்திரங்கள்.  ஹீரோ, ஹீரோயின், அவரைக் காதலித்து, காதலில் தோல்வியுற்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கேரக்டர், இவைதான் ஸ்ரீகாந்த், யோகேஷ் கன்னட மஞ்சுளா மூவரையும் புக் பண்ணினார்கள். மெர்க்காராவில் பூஜை. பெங்களூரிலிருந்து முக்கால் மணி நேரப்பயண தூரத்தில் ஒரு லோகேஷன். அங்கே செட் போட்டார்கள். படம் ஆரம்பித்தபின் தொடர்ந்து ஒண்ணரை மாதத்திற்கு படப்பிடிப்பு நடந்தது. அதன் பின் ஒரு முறை எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, ஸ்ரீதரைக் கைகுலுக்கி பாராட்டிவிட்டுச் சொன்னார் ` மைசூருக்கு படப்பிடிப்பிற்கு போயிருந்தேன். உங்கள் கன்னடப் படத்தை பார்த்துவிட்டு வந்து யூனிட்டில் அனைவரும் ரொம்பப் பாராட்டினார்கள். உங்கள் படத்தின் வெற்றிகாக மகிழ்ச்சி அடைகிறேன்’

 அடுத்து என்ன படம்? என்று ஸ்ரீதர் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது மதன் என்கிற பைனான்சியரும், சடையப்ப செட்டியார் என்கிற தயாரிப்பாளரும் ஸ்ரீதரை அணுகினார்கள். ` நாம் மூன்று பேரும் பார்ட்னர்களாக இருந்து எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால் என்ன? என்று கேட்டார்கள். ஸ்ரீதரும் ஒப்புகொண்டார்.  எம்.ஜி.ஆரை சந்தித்தார்கள். ` கதையைக் கூட என்னிடம் சொல்ல வேண்டாம் முதல் நாள் வந்து காரெக்டரை மட்டும் விளக்கினால் போதும்’ என்றார் எம்.ஜி.ஆர்.

 இதே நேரத்தில் ஜேயார் மூவிஸ் ஆறுமுகம் ஸ்ரீதரை அணு கினார். எம்.ஜி.ஆரை தாங்கள் எடுக்கவிருக்கும் படத்தை ஸ்ரீதர் தான் டைரக்ட் செய்ய வேண்டும்  என்று சொன்னார்கள். அந்த  படத்துக்கு ` அண்ணா என் தெய்வம்’ என்று பெயர் வைத்தார். எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போனது. ` இந்த படத்தை பிரமாதமாக எடுக்க வேண்டும்’ என்று உற்சாகமாக சொன்னார் எம்.ஜி.ஆர்.

 வேகமாக வளர்ந்து வந்த படம், இடையில் சில மாதங்கள் தடைபட்டு நின்றது. காரணம் ஸ்ரீதருக்கு ஏற்பட்ட ஒரு விபத்து!

 ஒரு நாள் இரவு பாத்ரூமி லிருந்து வெளியே வரும் போது தரை வழுக்கி, தலை குப்புற விழுந்துவிட்டார் ஸ்ரீதர். கிழே கிடந்த இரும்புக் கம்பி இடது கண்களில் குத்தி  அவருடைய விழியே வெளியே வந்துவிட்டது. நடு இரவில் கண் மருத்தவர் பத்ரிநாத்தை  தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து அரசு பொது மருத்துவமனைக்குப் போனார் ஸ்ரீதர். அங்கே அந்த விழியை வைத்து விட்டார்கள். மறுநாள் டாக்டர் பத்ரிநாத்திடம் போனபோது அவர் மிகவும் வருத்தப்பட்டார்.

` உடனே என்னிடம் வந்திருக்க வேண்டி யதுதானே ?’ கண் சிகிச்சை என்பது ஸ்பெஷலிஸ்டுகள் செய்ய வேண்டியது. இது கூட தெரிய வேண்டாமா ? இப்போது விஷயம் சிக்கலாகிவிட்டதே’ என்று சொல்லி, சிகிச்சை ஆரம்பித்தார். அவரிடம் முதலிலேயே சென்றிருந்தால் விரைவில் குண்மாகியிருக்கலாம். இப்போது டிரீட்மெண்ட் முடிய இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

ஸ்ரீதர் இழந்துவிட்ட நேரத்தை திரும்பப் பெறும் முயற்சியில் ஒரே சமயத்தில் இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தார் ஸ்ரீதர்.  எம்.ஜி.ஆர்., லதா, சங்கீதா நடித்த  `அண்ணா நீ என் தெய்வம்’ எம்.ஜி.ஆர்., லதா, வெண்ணிற ஆடை நிர்மலா நடித்த ` மீனவ நண்பன்’ படமும் வளர்ந்தன.                      (தொடரும்)