பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 19–5–19

பதிவு செய்த நாள் : 19 மே 2019

தூத்துக்குடியில் உறவினர் வீட்டில் தங்கிவிட்டு, காலையில் அத்தை மகன் லட்சுமணனிடம் நல்ல டீ சாப்பிட வேண்டும். அந்த சூரியோதயத்திற்கு முன்னால் இளங்காற்று வீசிய கோடை காலையில், அவரது இரு சக்கர வாகனத்தில் அவர் வீட்டைச் சுற்றி வலம் வந்த போதுதான் அந்த கடை கண்ணில் பட்டது. உள்ளூர்காரரான என் அத்தை மகனே அந்தக் கடையை அப்போதுதான் பார்க்கிறார். பச்சை நிறத்தில் பளிச்சென்று எழுதப்பட்ட பலகையில் இருந்தது அந்தக் கடை. பெயர் ‘நல்ல டீ கடை’.

தூத்துக்குடி சிவந்தகுளம் சாலையில், அக்ஸார் பெயிண்ட் நிறுவனத்தின் எதிரே இருந்தது அந்தக் கடை. பெயர் பலகையை அமைந்திருந்த விதமே கவர்ந்தது.

அந்த காலை வேளையில் வாசலில் ஒருவர் ஒரு சில்வர் ஸ்டூலில் அமர்ந்து பேப்பர் வாசித்துக்கொண்டிருந்தார்.  கடையினுள்ளே இரு சிப்பந்திகள். அடுப்பில் பால் பொங்கிக் கொண்டிருந்தது.

அவரிடம் இரண்டு டீ கேட்டோம். ` சில நிமிடங்கள் சார்! பால் இப்பத்தான் வந்தது. கொதிச்சுக்கிட்டிருக்கு’ என்று பவியமாகச் சொன்னார்.

வாசலில் இருந்த புத்தம் புதிய இன்னொரு இரண்டு சிலவர் ஸ்டூலின் இருவரும் அமர்ந்தபோது, கறுப்பு நிறத்தில் காலர் இல்லா பனியன் அணிந்து கொண்டிருந்த ஒரு இளைஞர் அன்றைய நாளிதழ் இரண்டு பிரதிகளை எங்கள் கைகளில் கொண்டு வந்து கொடுத்தார்.

`படிச்சுக்கிட்டிருங்க, அதுக்குள்ள டீ ரெடியாகிவிடும்’ என்றார்.

ஒரு சாதாரண டீ கடை. வாசலில் இருக்கும் வாடிக்கையாளரின் காத்திருக்கும் நேரம் பயனுள்ள தாக கழிய வேண்டுமென்று ஒரே நாளின் இரண்டு நாளிதழ்களை கொண்டு வந்து கொடுக்கிறார். வந்தவர் கடையில் உள்ளே இருந்து வரவில்லை. சட்டென்று இரு சக்கர வாகனத்தை கடை வாசலில் நிறுத்திவிட்டு, எங்கள் கையில் நாளிதழை கொடுத்து, அதன் பக்கங்களை புரட்டு முன்பே சூடான் டீ வந்தது. கடை வாசலின் போர்டிலேயே இயற்கை பொருட்கள் (pure organic) என்றிருந்தது.

 அருமையான டீ. செயற்கை உரங்களினால் ஆன டீக்கும், இதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிந்தது.

 பேப்பர் கொண்டு வந்து கொடுத்த அந்த இளைஞரிடம் பேச்சுக்கொடுத்தேன். அவர் தான் அந்தக் கடையின் உரிமையாளர் என்பதை தெரிந்து கொண்டேன்.

 அவர் பெயர் ராஜேஷ். எம்.எஸ்.ஸி (பவுதிகம்) படித்தவர். கத்தாரில் பணிபுரிகிறார். அங்கே பார்த்த ஒரு பிரபலமான டீ கடையின் பாதிப்பில் தன் உள்ளூரில் இந்தக் கடையை திறந்திருக்கிறார் அந்த இளைஞர். தன் சகோதரர் பிரஸ்னேவ்( முன்னாள் ரஷ்ய அதிபரின் பெயர்) சேர்ந்து இந்தக் கடையைத் துவக்கியிருக்கிறார்கள்.

ஒரு டீக் கடையை எப்படி ஆரோக்கியமாகவும், கலாபூர்வமாகவும் நடத்த முடியும் என்று காட்ட நினைக்கிற துடிப்பு அந்த இளைஞரிடம் இருப்பதைக் கண்டேன்.

`சார்! இன்னொரு டீ தரேன். சும்மா ஒரு சாம்பிள் தான்’ என்றார்.  கேட்பதற்கு முன் அவரே சொன்னார்,` இது செம்பருத்தி டீ சார்’ என்றபடி கடைக்கு உள்ளே அழைத்துப் போனார். எதிரே சுவற்றில் ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட டீ கூஜாக்களின் கலைநயம் மிகுந்த படங்கள்.

கடையில் பெயர்ப் பலகை நிறத்தி

லிருந்து, உள்ளே மாட்டி வைக்கப்பட்டிருந்த படங்கள், வாசலில் போடப்பட்டிருந்த புத்தம் புதிய சில்வர் ஸ்டூல்கள், எல்லாவற்றிலும் அந்த இளைஞரின் ஆர்வம்,துடிப்பும் தெரிந்தது.  எல்லோரும் சுயதொழில் துவங்கு கிறார்கள். சாலையோரத்தில் பல கையேந்தி பவன்களைப் பார்க்கிறோம்.

ஆனால் சிலர் மட்டுமே தங்கள் தொழிலை ரசித்து செய்யத் துடிக் கிறார்கள். டி.வி. சுந்தரம் அய்யங்காருக்கு அந்தத் துடிப்பு இருந்தது. அமரர் எஸ்.எஸ். வாசன் ஏவி.மெய்யப்ப செட்டியார் ‘வாஹி’னி அதிபர்கள் நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் தொழில் துவங்கியபோது, அவர்களின் ஒவ்வொரு நகர்விலும் ஒரு அக்கறை  ஒரு ஈடுபாடு, ஒரு சிரத்தை. தொழிலைத் தொழிலாக மட்டும் பார்க்காமல் ஒரு சமூக அக்கறையோடு செய்து தங்கள் சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கினார்கள்.  அந்த அக்கறையையும், துடிப்பையும் இந்த ‘நல்ல டீ கடை’ அதிபர் ராஜேஷிடம் கண்டேன். அடுத்த முறை போகும் போது, அந்த கடை செழித்தோங்கி வளரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

 சின்ன வயதிலிருந்தே எனக்கு தாயார் கொடுத்த சீதனம் நல்ல ரசனை. நாடகம், ஹரிகதாகாலேட்சபம், கர்நாடக கச்சேரி, மேடை நாடகங்களுக்கு அழைத்துப் போவார். அப்போதெல்லாம் சென்னை நகரில் ஏராளமான சபாக்கள் உண்டு.

சென்னையில் அப்போது ஏராளமான அமெச்சூர் நாடகக் குழுக்கள்  உண்டு. அதாவது நடிப்பை முழு நேர தொழிலாக கொள்ளாத நடிகர்களைக் கொண்ட குழுக்கள். அதில் பிரபலமானது இப்போது ஒய்.ஜி. மகேந்திரன் நடத்திக்கொண்டிருக்கும் யு.ஏ.ஏ. குழு. மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பிதான் அதன் கர்த்தா. அந்தக் குழுவின் நட்சத்திர நடிகர் ஏ.ஆர். எஸ் என்கிற ஏ.ஆர். சீனிவாசன். உயர்ந்த உருவம், எம்.ஜி. ஆருக்கு இணையான நிறம். நகைச்சுவை, சீரியஸ் எதுவாக இருந்தாலும் பிச்சு உதறம் அலட்டாத நடிப்பு. அவர் தான் ஏ.ஆர். எஸ். சினிமா ரசிகர்களுக்கு இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

அரை நூற்றாண்டுக்கு மேல் நாடக, சினிமா அனுபவம் கொண்ட ஒரு கலா இலக்கிய, பன்முக வித்தகர் ஏ.ஆர். எஸ். தன்னுடைய 86வது பிறந்த நாளையொட்டி தன்னுடைய நினைவுகளை ‘தித்திக்கும் நினைவுகள்’ என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.

 ஏ.ஆர். எஸ்சைப் போலவே அவருடைய புத்தகமும் படு சுவாரசியம். எனக்கு ஏ.ஆர்.எஸ்சோடு ஒரு கால் நூற்றாண்டுக்கு மேல் பழக்கம்.  என்னைவிட கால் நூற்றாண்டு வயதில் பெரியவர். நாடகம் பார்த்த என் பள்ளி நாட்களில் என் ஆதர்ஷ கதாநாயகன் அவர். எந்த விஷயத்தை அவரிடம் பேசலாம்.

அப்படிப்பட்ட மனிதரிடமிருந்த வந்திருக்கும் 290 பக்கங்கள் கொண்ட படு சுவாரசியமான புத்தகம். காலை 7 மணிக்கு புத்தகத்தை கையில் எடுத்தேன். ஒன்பதரைக்கு படித்து முடித்தேன். கீழே வைக்க முடியாமல் அத்தனை சுவாரசியம் சிவாஜி. எம்.ஜி.ஆர். சோ, ஜெயலலிதா, சிவகுமார் என்று தான் பழகிய மனிதர்களை, அவர்களோடு தனக்கேற்பட்ட அனுபவங்களை மிக நல்ல நடையில் சொல்லியிருக்கிறார்.உதாரணமாக இரண்டாவது அத்தியாயம் `பிலிப்ச் நிறுவனத்தில் பணியாற்றியபடியே ஒய்.ஜி.பியின் நாடகக் குழுவி நடித்துக் கொண்டிருந்த நான், அடுத்து ` ஸ்பீட் அவே’ நிறுவனத்துக்கு மாறினேன். புதிய அலுவலகத்திற்காக அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வரவேண்டி இருந்தது.

 அப்படி ஒரு முறை பெங்களூரு செல்வதற்காக விமானத்தில் போனேன். சிறிது நேரத்தில் எனக்குப் பக்கத்தில் வந்த அமர்ந்த சக பயணி, என் தோளில் தட்டி, `நான் உங்கள் ரசிகன்;  என் பெயர் நாராயணம் நம்பியார்’’ என்று சொன்னதும் நான் திரும்பிப் பார்த்தேன். அடுத்த சீட்டில் இருந்தவர் நடிகர் எம்.என். நம்பியாரேதான். இயக்குநர் ஸ்ரீதரின் ‘உரிமைக்குரல்’ படப்பிடிப்புக்காக பெங்களூர் சென்று கொண்டிருக்கிறார். சிறிது நேரத்தில் விமானத்திற்குள் நுழைந்தார் எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்து கொண்டார். பக்கத்து இருக்கையில் ஏழெட்டு நீயூஸ் பேப்பர்கள் வைக்கப்பட்டிருந்தன. சீட்டில் அமர்ந்த எம்.ஜி.ஆர்., பேபர் படிக்க ஆரம்பிக்க நான் வீணாக அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று நினைத்து கையில் இருந்த நாவலில் மூழுகினே.

நாவலின் கிளைமாக்ஸ் பகுதியைப் படித்துக் கொண்டிருந்த வேளையில் பெங்களூர் வந்து விட்டது. `எல்லோரும் இறங்கட்டும், அதற்குள் நாம் புத்தகத்தை முடித்துவிடலாம் ‘ என்று தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் அருகில், `நான் எம்.ஜி.ஆர் வந்திருக்கேன்’ என்று ஒரு குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.

` இவ்வளவு நேரம் பிரீயாகத்தானே இருந்தேன். பேசியிருக்கலாமே ‘ என்று எம்.ஜி.ஆர் கேட்க,` நீங்க பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தீங்க. தொந்தரவு பண்ண வேணாமுன்னுதான் ‘ என்று நான் இழுக்கவும்,  அவர்` நான் பேப்பர் படிச்சு முடிச்ச பிறகும்கூட நீங்கதான் சுவாரசியமா புஸ்தகம் படிச்சுக்கிட்டு இருந்தீங்க’ என்று ஒரு போடு போட்டார். பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனேன்.

உங்களுக்கு பெங்களூரில், `எங்கே என்ன வேலை?’ என்று கேட்டார். நான் அந்த ஏரியாவுக்கு பக்கத்தில் உள்ள ஈஸ்ட் வெஸ்ட் ஓட்டலில்தான் நான் தங்கி இருப்பேன். வேலையை முடிச்சுட்டு ராத்திரி என் கூட சாப்பிட ஓட்டலுக்கு வந்துடுங்க’ என்றார்.

 இப்படியெல்லாம் கூட ஒருவர் உபசரிக்க முடியும் என்ற ஆச்சரியத்தில் ஆழ்ந்த என்னை,  தன் கையால் அணைத்தாற்போல் பற்றிக்கொண்டு விமான நிலை யத்தில் வாயிலுக்கு வந்தார். நுழை வாயிலில் ஏராளமான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் திரண்டிருந்தார்கள்.  எம்.ஜி.ஆர்., காரில் புறப்பட்டுச் சென்ற மறுகனம் அவரது அத்தனை ரசிகர்களும் என்னை சூழ்ந்து கொண்டுவிட்டார்கள் `எங்க தலைவர் தொட்ட கை இது?’ என்று கைகுலுக்கி மகிழ்ந்தார்கள். ஏ.ஆர். எஸ். இன்னும் நிறைய எழுத வேண்டும் அது அவரால் முடியும்.