கொல்கத்தாவில் அமித் ஷா மீதான தாக்குதலை கண்டித்து டில்லியில் பாஜகவினர் போராட்டம்

பதிவு செய்த நாள் : 15 மே 2019 16:09

புதுடில்லி,

   கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷா மீது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரியினர் நடத்திய தாக்குதல் மற்றும் அங்கு நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து பாஜக தலைவர்கள் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் வாய் மீது விரல் வைத்து மௌன போராட்டம் நடத்தினர்.

பாஜக தலைவர் அமித் ஷா நேற்று கொல்கத்தாவில் தேர்தல் பேரணியில் ஈடுபட்டார். அப்போது கொல்கத்தா பல்கலைகழகம் வழியே அமித் ஷாவின் ஊர்வலம் சென்ற போது அவர் வந்த வாகனம் மீது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கற்கள் மற்றும் தடிகளை வீசி தாக்குதல் நடத்தினர். கறுப்பு கொடி காட்டி அமித் ஷாவிற்கு எதிராக கோஷமிட்டனர்.

அதை தொடர்ந்து பாஜக தொண்டர்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர் இடையே மோதல் வெடித்தது. பல்கலைகழகம் வெளியே நின்றிருந்த வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த கலவரத்தில் மேற்குவங்கத்தின் பிரபலமான அறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஈஸ்வர் சந்திர வித்தியாசாகரின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த கலவரத்துக்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. முக்கியமாக ஈஸ்வர் சந்திர வித்தியாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு பாஜக தான் காரணம் என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கொல்கத்தா கலவரம் மற்றும் அமித் ஷா மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கு வகையில் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மௌன போராட்டம் நடத்தினர். 

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜிதேந்திர சிங், விஜய் கோயல் மற்றும் ஹர்ஷ வர்தன் ஆகியோர் கருப்பு பட்டைகளை அணிந்து வாயில் விரலை வைத்து அமர்ந்திருந்தனர். உடன் இருந்த பாஜக தொண்டர்கள் சிலர் மேற்கு வங்கத்தையும் ஜனநாயகத்தையும் காக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

தங்கள் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்

‘‘நேற்று கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்ற பேரணியில் கலவரம் ஏற்பட்டது. மத்திய காவல் படையினர் இல்லாவிட்டால் எங்கள் தலைவர் அங்கிருந்து பாதுகாப்பாக திரும்பியிருக்க முடியாது’’

‘‘வரபோகும் தோல்வியை கண்டு மம்தா பானர்ஜி கலவரம் அடைந்துள்ளார். அதனால் கட்சி தொண்டர்களை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தி வருகிறார்’’

‘‘கல்லூரி வளாகத்தில் பூட்டிய அறையில் இருந்த ஈஸ்வர் சந்திரசேகர் வித்தியாசாகரின் சிலையை பாஜகவினர் எப்படி உடைத்திருக்க முடியும். கல்லூரி வளாகத்தில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தான் சிலையை சேதப்படுத்தி பழியை பாஜகவினர் மீது போட்டுள்ளனர்’’ என்று  நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.